குவியல் 2 எண்ணம் 3
எண் எழுத்து இகழேல்

பொய், களவு, சூது, வாது நிறைந்த இன்றைய காலகட்டத்தில் நாம் ஏமாறாமல் வாழ்வதற்கும் கஷ்டப்பட்டு உழைத்த செல்வத்தை பாதுகாப்பதற்கும் அடிப்படைக் கல்வி அறிவையாவது பெற்றிருக்கவேண்டும். எழுத, வாசிக்க, கணக்கு பார்க்க தெரிந்திருப்பது மிக மிக அவசியம்.
படிக்க வசதியுள்ளவர்கள், ஆர்வம் மிக்கவர்கள் மேலும் மேலும் படித்துக்கொண்டு வளரலாம். பெரிய பொறுப்பான பதவிகளை வகிக்கலாம். படிக்க வசதியில்லாதவர்கள், ஆனால் ஆர்வம் மிக்கவர்கள் அரச பாடசாலைகள் மூலம் இலவச கல்வியை பெற்றுவிடலாம். கல்வியில் ஆர்வமில்லாதவர்கள் அடிப்படைக் கல்வியையாவது படித்திருப்பது அவசியமாகிறது.
கடைக்குச் சென்று பொருட்கள் வாங்க பணத்தை கொடுப்பதற்கும் மிகுதிப் பணத்தை சரிபார்த்து வாங்குவதற்கும் கணிதம் தெரிந்திருக்க வேண்டும். வாங்கிய பொருட்களை பற்றுச்சீட்டுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதற்கும் காலாவதியாகும் திகதியை பார்த்து வாங்கவும் வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது பிரயாண சமயங்களில் செல்ல வேண்டிய இடத்திற்கு ஏறவேண்டிய வண்டியை பார்த்து ஏறுவதற்கும் இறங்கவேண்டிய இடத்தை பார்த்து இறங்குவதற்கும் வாசிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.
எமது நாளாந்த வேலைகளை செய்வதற்கும் அடுத்தவர்களிடம் ஏமாறாமல் இருப்பதற்கும் கல்வி அறிவு முக்கியம். அத்துடன் எமது முயற்சிகள் வெற்றிகரமாக இலக்கைச் சென்றடைவதற்கு அனுபவக் கல்வியும் தேவை. “ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது” என்ற முன்னோரின் சொற்படி கல்வி அறிவு மட்டும் எமது வாழ்க்கைக்கு போதாது. அனுபவத்தால் கிடைக்கும் அறிவும் வேண்டும். எமது முயற்சி சிலசமயங்களில் தோல்வியைத் தரலாம். அதன் காரணமாக உடனே மனமுடைந்துவிடக் கூடாது. அது ஒரு அனுபவமே. நாம் விட்ட பிழைகளை ஆராய்ந்து, அதை திருத்தி மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். எமது இலக்கை முழுமையாகவும் திருப்தியாகவும் வெற்றிகரமாகவும் அடையும்வரை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு திருத்தங்களுடன் முயன்று பார்ப்பது சிறந்த அனுபவமே. இது எமக்கு ஒரு பாடமாக அமைகிறது. இதனால் நாம் செய்யும் வேலையை தரமாகவும் விரைவாகவும் செய்துமுடிக்கக்கூடிய அறிவைப் பெறுகிறோம்.
கல்வி எம்மை வழிநடத்துகிறது. நல்லது கெட்டதை பிரித்தறிய முடிகிறது. சுற்றுச் சூழலை எப்படி வைத்திருப்பது என்பதையும் நோய்களிலிருந்து எம்மை பாதுகாப்பது எப்படி என்ற விழிப்புணர்வையும் தருகிறது. நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுத் தருகிறது.
மனிதனின் வாழ்க்கைக்கு எண்ணும் எழுத்தும் எவ்வளவு முக்கியமானவை என்பதை ஔவையாரின் ஆத்திசூடி ஒரு வரியில் பின்வருமாறு கூறுகிறது;
ஆத்திசூடி – “எண்எழுத்து இதழேல்”
கவிஞர் பத்மதேவனின் விளக்கவுரை – எண்ணறிவையும் எழுத்தறிவையும் இகழ்ந்து பேசி அவற்றை கற்காமல் இருந்துவிடாதே.
திருவள்ளுவரின் திருக்குறள் பின்வருமாறு கூறுகிறது;
குறள் – எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்இரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.
பி.எஸ். ஆச்சார்யா அவர்களின் விளக்கவுரை – எண் என்று சொல்லப்படுவனவும், எழுத்து என்று சொல்லப்படுவனவுமாகிய இரண்டினையும் மக்கள் உயிர்க்குக் கண்கள் என்பர் கற்றறிந்த பெரியோர்கள்.
கல்வி எம்மை மனிதனாக வாழ வைக்கிறது.
உதாரணக் கதை
மாலை சாய்ந்து இரவு தொடங்கும் நேரம், அந்த பலசரக்கு கடையில் வழமைபோல வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை கொடுத்துவிட்டு காத்திருந்தான் 35 வயதை எட்டிக்கொண்டிருக்கும் நடேசன். கடைக்காரரும் சிறிது நேரத்தில் பொருட்கள் அடங்கிய பையை நடேசனிடம் கொடுத்து பணத்தை வாங்கி மிகுதிப் பணத்தையும் பட்டியலையும் கொடுத்தார். தற்செயலாக பட்டியலைப் பார்த்த நடேசன் அதில் விலை ஒன்றும் குறிப்பிடாதைக் கவனித்து,
“அண்ணா! விலைகளை குறிக்க மறந்துவிட்டீர்கள் போல. குறித்துத் தருகிறீர்களா?” என்றபடி பணிவுடன் பட்டியலை கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்தார்.
“அட, மறந்தே போய் விட்டேன்.” என்றபடி அந்தப் பட்டியலை வாங்கி விலைகளை குறிப்பிட்டு, தொகையையும் எழுதி, மிகுதிப் பணம் எவ்வளவு என்பதையும் குறிப்பிட்டு நடேசனிடம் கொடுத்து விட்டு அடுத்த வாடிக்கையாளரை கவனிக்கத் தொடங்கிவிட்டார் கடைக்காரர்.
இவை யாவையும் கவனித்துக் கொண்டிருந்த, அந்த ஊர் பாடசாலைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்த ஆசிரியர், சிவகுமாருக்கு குழப்பமாக இருந்தது. நடேசனுக்கு அருகே சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், அவனுடன் நடந்துகொண்டு உரையாடத் தொடங்கினார்.
“என்ன தம்பி, இள வயதாக இருக்கிறாய், கடையில் வாங்கிய பட்டியலையும் மிகுதிப் பணத்தையும் சரிபார்க்காமல் அப்படியே மடித்து வைத்துக்கொண்டு செல்கிறாய்.” என்றார்.
மிகவும் கவலையுடனும் வெட்கத்துடனும், “எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது ஐயா.”
“என்னது படிக்கவில்லையா? இந்தக் காலத்தில் படிக்காமல் எப்படி காலத்தை ஓட்டுகிறாய்?”
இருவரும் பிரிந்து செல்லும் இடம் வந்ததும் நின்று உரையாடலைத் தொடர்ந்தனர்.
“சிறு வயதில் அம்மா சொன்னதைக் கேட்காமல் போனதற்கான பயனை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். சிறு வயதிலேயே அப்பாவை இழந்துவிட்டோம். அம்மா வீட்டு வேலைகளுக்குச் சென்று வரும் பணத்தில்தான் நானும் அம்மாவும் வாழ்ந்தோம். அம்மாவை கஷ்டப்படுத்தக் கூடாதென்ற எண்ணத்தில் சிறு வயதிலேயே நான் படிப்பை கைவிட்டு கூலி வேலையில் உதவிக்கு செல்லத் தொடங்கிவிட்டேன். அம்மாவும் எத்தனையோ முறை மிரட்டியும் பயமுறுத்தியும் அழுதும் நான் கேட்கவில்லை. காலம் கடந்தபின் ஞானோதயம் வந்து என்ன பயன்? ஏதோ எனது நல்ல காலம் எனக்கு ஓரளவு படித்த நல்ல குணமுள்ள மனைவி அமைந்திருக்கிறாள். அதனால் ஓரளவு நிம்மதியாக காலம் போகிறது. நான் கூலி வேலைக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். வீட்டிலும் எனது மனைவி கோழி, ஆடு, மாடு என வளர்த்து ஓரளவு வருமானம் வந்துகொண்டிருக்கிறது. அம்மாவும் அவளுக்கு ஒத்தாசையாக இருக்கிறார்.” என தனது நீண்ட உரையை முடித்தான்.
“உனக்கு நல்ல மனைவி அமைந்தபடியால் தப்பித்துவிட்டாய். திருமணத்திற்கு முன் நிறைய கஷ்டப்பட்டிருப்பாயே.”
“அதை எப்படி மறக்க முடியும். கடைக்காரர்கள், போக்குவரத்து சமயங்களில் பற்றுச்சீட்டு வாங்கி மிகுதிப் பணத்தை பெறுவது போன்ற பல்வேறு வழிகளில் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள். அது தெரிந்தும் கேட்க முடியாமல் அவதிப்பட்டிருக்கின்றேன். அதனாலேயே நான் அதிகம் வெளியே செல்வதில்லை. திருமணத்திற்குப் பின் தான் துணிவாக செல்கிறேன். நல்ல மனைவி அமைந்தபடியால்….” என்று இழுத்தான் நடேசன்.
“இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்று சும்மாவா சொன்னார்கள். சிறு வயதில் கற்கும் கல்வி இலகுவாக ஆழ்மனதில் பதிந்து என்றென்றும் நிலைத்து நிற்கும். சரி, முடிந்ததை எண்ணி வருந்துவதால் ஒரு பயனுமில்லை. இனியாவது எழுதப் படிக்க, கணக்கு பார்க்க அறிந்துகொள்ளும் ஆர்வம் சிறிதளவாவது இருக்கிறதா?” எனக் கேட்டார் சிவகுமார்.
“ஆர்வம் இருக்கிறது ஐயா. ஆனால் எப்படி?”
“பொழுது சாயும் நேரம் என் வீட்டுக்கு வா. தினமும் ஒரு அரை மணி நேரம் முயற்சி செய்வோம். என்ன, முடியுமா?” என்றவரின் கால்களில் கண்ணீர் மல்க விழுந்துவிட்டான் நடேசன்.
இதை எதிர்பாராத சிவகுமார், “எழுந்திரு, எழுந்திரு, உனது பணிவையும் நன்றியையும் வெற்றிகரமாக படித்துக் காட்டு. அதுதான் எனக்கு மகிழ்ச்சி.” என்றவர் தனது வீட்டு முகவரியை கூறி, வீடு நோக்கி செல்ல, நடேசனும் ஆனந்தத்தில் மனம் துள்ள வீடு நோக்கி நடையைக் கட்டினான்.
இந்த உரையாடல், அந்த இடத்தில் ஒரு விழிப்புணர்சி ஏற்படுத்தியதை யாருமே அறியவில்லை. பொழுது சாய்ந்தும் வீடு திரும்பும் எண்ணம் இல்லாது விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் இந்த உலையாடலைக் கேட்டு திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். தங்கள் எதிர்காலம் கண் முன்னே தெரிவதை உணர்ந்தவர்கள் ஒரு முடிவுடன் தலையசைத்து வீடு நோக்கி சென்றார்கள்.
*****