குவியல் 2 எண்ணம் 4
நன்றி மறவேல்

ஒரு மனிதன் தனியாக வாழ்வது மிகவும் கடினமாகும். குடும்பத்துடன் ஒருவருக்கொருவர் துணையாகவோ உதவியாகவோ சேர்ந்து வாழ்தலே பாதுகாப்பானதும் மகிழ்ச்சியானதும் திருப்தியானதுமாகும்.
இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதே வாழ்க்கை. துன்பத்தை தனியாக அனுபவிப்பது மிகவும் கஷ்டம். அதேபோல இன்பத்தையும் தனியாக அனுபவிப்பது மகிழ்வைத் தரமாட்டாது.
உறவினர்களுடன் அன்புடனும் பாசத்துடனும், நண்பர்களுடன் நேர்மையுடனும், ஊருடன் இணக்கத்துடனும் வாழ்வதே சிறப்பாகும். எமது வாழ்க்கையில் வந்து போகும் ஆசிரியர்களிடம் பணிவுடனும், இறைவனிடம் பக்தியுடனும் வாழ்வது மிகச் சிறப்பாகும். இவர்கள் யாவரும் பல வழிகளில் எமக்கு துணையாகவும் உதவியாகவும் இருப்பவர்கள்.
எமக்கு உதவியவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம். சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்களுக்கு உதவத் தயங்கக்கூடாது. எமக்கு உதவியவர்களுக்கு மட்டுமல்லாது உதவி தேவைப்படுபவர்களுக்கும் எம்மால் இயன்றதை தயங்காது செய்யவேண்டும். பயனை எதிர்பார்க்காது செய்யும் உதவியானது எமக்குத் தேவையான தருணத்தில் ஏதோ ஒரு வழியில் எம்மை வந்தடையும். மிகவும் நல்ல நிலையில் எல்லா வளங்களோடு வாழ்பவர்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களின் உதவி தேவைப்படும் நிலை வரலாம்.
பொருள் கொடுப்பது மட்டும் உதவியல்ல. ஆலோசனை வழங்குவது, உழைக்க வழிகாட்டுவது, துன்பத்தில் ஆறுதல் கூறுவது, தோல்வியில் நம்பிக்கையூட்டுவது, ஊக்கமளிப்பது, கல்விக்கு உதவுவது போன்ற நன்மை பயக்கும் செயல்கள் யாவுமே உதவிகள் தான்.
ஆத்திசூடியில் ஒரு வரியில் ஔவையார் பின்வாருமாறு கூறுகிறார்.
“நன்றி மறவேல்”
கவிஞர் பத்மதேவனின் விளக்கவுரை – ஒருவர் உனக்குச் செய்த நன்மையை எக்காலத்திலும் மறவாதே.
திருக்குறளில் திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம்; உய்வுஇல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”
பி.எஸ். ஆச்சார்யா அவர்களின் உரை – எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டு. ஆனால் ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உயர்வே கிடையாது.
ஒருவர் எமக்குச் செய்த நன்மையை ஒருபோதும் நாம் மறக்கலாகாது. அதற்காக வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றி கூறிக்கொண்டு இருக்கவேண்டும் என்றில்லை. அந்த நன்றியை மனதில் எப்போதும் வைத்திருந்து, நாமும் அதுபோல உடலாலோ அல்லது மனதாலோ கஷ்டப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி எம்மால் முடிந்ததை மகிழ்வுடன் செய்து திருப்தியடைவோம்.
உதாரணக் கதை
அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி, ஓய்வுபெற்ற அதிபர் முத்துக்குமாரும் அவரது மனைவி சரஸ்வதியும் வழமைபோல அருகிலுள்ள முதியோர் இல்லம் நோக்கி நடந்துகொண்டிருந்தனர். அங்கிருக்கும் 91 வயது நிரம்பிய ஓய்வுபெற்ற ஆசிரியை கலாதேவியைப் பார்த்து அவருடன் ஒரு மணிநேரம் செலவழிப்பது வழக்கம்.
அன்று, அவரவர் பழைய நினைவுகளை அசைபோட்டபடி நடந்துகொண்டிருந்தனர்.
முத்துக்குமார் நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிந்தபோது அவரது வகுப்பாசிரியை கலாதேவி. கலாதேவி மிகவும் அன்பானவர், அமைதியானவர். சத்தம் போட மாட்டார். குரலை உயர்த்தாமலே மாணவர்களைக் கண்டிப்பதில் கெட்டிக்காரர். அச்சமயம் ஒருமுறை முத்துக்குமாரின் தாயார் சுகயீனமுற்று இருந்ததால் அவரால் ஒழுங்காக சமைக்க முடியவில்லை. அவர்கள் நடுத்தர வர்க்க குடும்பம் ஆதலால் வேலைக்கு ஆட்களை வைத்திருப்பதற்கு வசதி இல்லை. அதனால் இரண்டு மூன்று நாட்களாக ஒழுங்கான சாப்பாடு இல்லாமல் முத்துக்குமார் மிகவும் சோர்ந்து காணப்பட்டான். இதை அவதானித்த வகுப்பாசிரியை கலாதேவி, அவனின் வீட்டு சூழ்நிலையை விசாரித்து அறிந்தார். கெட்டிக்கார புத்திசாலி மாணவனை இப்படியே விட்டால் பலவீனமாகி படிப்பு ஏறமாட்டாது. அத்துடன் இறுதி வருட பரீட்சை வேறு நெருங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
முத்துக்குமாரை தனியாக அழைத்து, “முத்துக்குமார், உனது அம்மா குணமடையும்வரை நான் உனக்கு உணவு கொண்டுவந்து தருகிறேன். இப்படியே சரிவர உணவு உண்ணாமல் இருந்தால் உனது படிப்புத்தான் கெட்டுவிடும். கவலைப்பட வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லிவிடு.” என்றார். முத்துக்குமாரும் சந்தோஷத்துடன் தலையாட்டி சரி என்றான்.
மறுநாளிலிருந்து கலாதேவி, தனக்கு சமைக்கும் உணவில் முத்துக்குமாருக்கும் தனியாக எடுத்து வந்து கொடுத்தார். படிப்பில் பின்னடைவை நோக்கிச் செல்லத் தொடங்கியவன் படிப்படியாக முன்னேறத் தொடங்கினான்.
இரு கிழமைகளின் பின் அவனது தாயார் பூரண சுகமடைந்துவிட்டதால் ஒழுங்காக சமைக்கத் தொடங்கிவிட்டார். இதனை ஆசிரியையிடம் தெரிவித்து கண்கள் கலங்க நன்றி கூறிய முத்துக்குமாரின் மனதில் அந்நிகழ்வுகள் பசுமரத்தாணி போல பதிந்துவிட்டன.
காலம் உருண்டோட எல்லோரும் வேறு வேறு பாதையில் பிரிந்து சென்றாலும் முத்துக்குமார், கலாதேவி ஆசிரியையை மறக்கவில்லை.
அண்மையில், தன்னுடன் படித்த ஒருவருடைய தொடர்பு கிடைத்ததில் கலாதேவி ஆசிரியை தற்போது முதியோர் இல்லத்தில் இருப்பதை அறிந்தார். உடனடியாக அங்கு சென்று அவரைச் சந்தித்து தன்னை அறிமுகப்படுத்தினார். ஆனால் அவரோ அந்நிகழ்வை மறந்திருந்தார். அவர் இப்படியாக பல சிறுவர்களின் பசியாற்றியவர் என்பதனாலோ என்னவோ குறிப்பாக ஒருவரும் அவர் நினைவில் இல்லை.
ஆசிரியையின் தனிமையையும் வயோதிப நிலையையும் பார்த்த முத்துக்குமார் அந்த நிமிடமே கிழமையில் ஒருநாளேனும் அவருடன் ஒரு மணி நேரமாவது இருந்து கதைத்து அவரது பாடசாலை நாட்களை நினைவூட்டி உற்சாகப்படுத்த வேண்டும் எனவும் அவரது தனிமையை இனிமையான பொழுதுகளாக மாற்ற வேண்டும் எனவும் முடிவு செய்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தன் மனைவியுடன் கலாதேவி ஆசிரியையை சந்திக்க சென்றுவிடுவார். ஆசிரியையும் ஆவலுடனும் மகிழ்வுடனும் இவர்கள் வரவை எதிர்பார்த்திருக்கத் தொடங்கிவிட்டார்.
இதோ, முத்துக்குமார் தன் மனைவியுடன் அங்குதான் சென்றுகொண்டிருக்கிறார். சிறு வயதில் தனது உடல், உள ஆரோக்கியத்தை பேண உதவிய ஆசிரியைக்கு நன்றிக்கடனை தீர்ப்பதற்குரிய சந்தர்ப்பத்தை அளித்த இறைவனுக்கு நன்றி கூறியபடி.
*****