குவியல் 3 எண்ணம் 4
மூக்கு

ஐம்புலன்களில் ஒன்று மூக்கு.
நாம் உயிர் வாழ்வதற்குரிய சுவாசம் மூக்கின் வழியாக நடைபெறுகிறது. மூக்கின் வழியாகவே காற்றை உள்ளெடுத்து வெளிவிடுகின்றோம். இந்நிகழ்வு நடைபெறாவிட்டால் உயிரானது உடலில் தங்காது. சில சமயங்களில் மூக்கடைப்பு போன்ற சுகயீனம் ஏற்படும்போது மூக்கினால் சுவாசிக்க முடியாது போகின்றது. அதனால் வாயினால் சுவாசிக்கின்றோம். அது ஒரு மாற்றுவழியே அன்றி பாதுகாப்பானது அல்ல. மூக்கின் வழியே காற்று உட்செல்லும்போது காற்றிலுள்ள தூசுகள் வடிகட்டி அனுப்பப்படுகின்றன. அத்துடன் வாயினால் சுவாசிக்கும்போது எமக்குத் தேவையான பிராணவாயு கிடைப்பதில்லை எனவும் மூக்கினால் சுவாசிக்கும் போது பிராணவாயு குறையாது எனவும் அறியப்படுகிறது. ஆகையால் மூக்குவழி சுவாசமே பாதுகாப்பானது.
எம்முள் ஏற்படும் மகிழ்ச்சி, கவலை, பயம், உற்சாகம், சோர்வு போன்ற வெவ்வேறு உணர்வுகளுக்கேற்ப மூச்சின் தன்மை மாறுபடுகிறது. யோகிகள் ஆயுளை மூச்சுக் கணக்கிலேயே அளவிடுவதாகக் கூறப்படுகின்றது. அதாவது ஒருவர் எத்தனை முறை மூச்சை உள்ளெடுத்து வெளிவிடுகிறார் என்பதே மூச்சுக்களின் எண்ணிக்கை.
மணத்தை முகர்வதற்கும் மூக்கு உதவுகிறது. நறுமணம் வீசும் இடங்களை நாம் இயல்பாகவே திரும்பிப் பார்க்கிறோம். எங்கிருந்து வருகிறது என தேடுகிறோம். அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றோம். துர்நாற்றம் வீசும் இடங்களிலிருந்து மூக்கை கைகளால் மூடியபடி உடனடியாக விலகுகிறோம். அசுத்தமான இடங்களிலிருந்து விலகி கிருமித்தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க மூக்கு உதவுகிறது.
உயிர் மூச்சின் வழியாக இருக்கும் மூக்கை நாம் மிகவும் அவதானமாக பராமரிக்க வேண்டும். விபத்துக்களின் போதும் விளையாட்டுக்களின் போதும் மூக்கில் இரத்தக் காயங்கள், வீக்கங்கள், குருதி சிந்துதல் ஏற்படுகின்றன. அவற்றிற்கு உடனடி முதலுதவி செய்து வைத்தியரை அணுகுவதே பாதுகாப்பு. பிரயாணங்களின் போது இருக்கைப் பட்டை, தலைக்கவசம் போன்ற தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம். சுவாசத்தின் மூலம் தொற்றுநோய்களும் ஏற்படுகின்றன. தொற்றுநோய்கள் பரவும் காலங்களில் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது. சளித்தொல்லையினாலும் சுவாசம் பாதிக்கப்படுகின்றது. நாள்பட்ட சளியினால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
அழுக்கான விரல்கள் அல்லது விளையாட்டுப் பொருட்கள், தண்ணீர் போன்றவற்றை சிறுவர்கள் மூக்கினுள் விட்டு விளையாட முற்படுவார்கள். அச் செயல்களை அவதானித்து தடுப்பது பெற்றோரின் கடமையாகும். வைத்திய ஆலோசனைப்படி தரும் மருந்தை மட்டுமே மூக்கிற்கு பயன்படுத்தவேண்டும். இரசாயன பதார்த்தங்களையோ இனம் தெரியாத பொருட்களையோ முகர்ந்து பார்க்கக்கூடாது. அவை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.
பெண்கள் மூக்குத்தி போன்ற வெவ்வேறு வகையான அணிகலன்களை அலங்காரமாக மூக்கில் அணிகின்றார்கள். இது பெண்களுக்கு அழகைக் கொடுக்கின்றது. மூக்குக் குத்திக்கொள்வதில் சில ஆரோக்கிய நன்மைகள் உள்ளன எனவும் நம்பப்படுகிறது.
எமது உறுப்புகளில் மிகவும் முக்கியம் வாய்ந்தது மூக்கு. அதனை பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கவேண்டியது எமது கடமை.
உதாரணக்கதை
“ஹலோ அப்பா, அங்கு என்ன நடக்கிறது? எப்படி இருக்கிறீர்கள்? அம்மா, மதன் எல்லோரும் சுகமாக இருக்கிறார்களா?” தொலைபேசியில் கேள்விகளை அடுக்கிக்கொண்டு போனான் அருண்.
கணபதி, செல்வி தம்பதியினருக்கு இரு புத்திரர்கள். மூத்தவன் அருண் திருமணமாகி மனைவியுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறான். இளையவன் மதன் இன்னும் திருமணமாகவில்லை, பெற்றோருடன் இருக்கிறான்.
“தம்பி, நாங்கள் எல்லோருமே சுகமாக இருக்கிறோம். நீங்கள் எப்படி”
கணபதி கதைப்பதை முடிக்குமுன், “அப்பா, என்ன இது, மூக்கு இன்னும் கனத்துக்கொண்டுதான் இருக்கிறது. போன கிழமை நான் கதைக்கும்போது இருந்ததைவிட மோசமாக இருக்கிறது. இன்னும் சுகம் வரவில்லையா? மருந்தெடுக்கவில்லையா? என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? மதன் இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறானா? அம்மா ஒன்றும் சொல்லவில்லையா? இப்படியே நீங்கள் இருந்தால் அம்மாவுக்கும் சளி தொற்றிவிடும்.”
“கொஞ்சம் பொறு தம்பி, என்னையும் கதைக்க விடு. அம்மாவுக்கு வந்து மாறிவிட்டது. எனக்குத்தான் இன்னும் இருக்கிறது. கைவைத்தியங்கள் செய்துகொண்டிருக்கிறோம். பார்ப்போம்.”
“பார்ப்போம் என்ற கதை வேண்டாம். உங்களுக்கே தெரியும். நாட்பட விட்டால் தொண்டை, காது எல்லாம் கிருமித்தொற்றுக்குள்ளாகிவிடும். இப்போதே இடையிடையே இருமும் சத்தம் கேட்கிறது. மூக்கில் சளி பிடித்து இரண்டு மூன்று நாட்களில் குறைகிற மாதிரி தெரியாவிட்டால் உடனே வைத்தியரிடம் செல்லவேண்டும் என்று நீங்களே எத்தனை முறை கூறி எங்களை அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். உங்களின் வயதை யோசித்தாவது நீங்கள் சென்றிருக்கக் கூடாதா? மற்றவர்களுக்கு ஆலோசனைகள் அள்ளி அள்ளி வழங்கத்தெரியும். ஆனால் அதை நீங்கள் கடைப்பிடிப்பதில்லை.”
கைபேசியை கணவனிடமிருந்து வாங்கிய செல்வி, “தம்பி, நானும் மதனும் எத்தனையோ தடவைகள் சொல்லிவிட்டோம். அவர் கேட்கிற பாடில்லை, நாங்கள் என்ன செய்வது?” என்றவளிடம்,
“அம்மா, சளி கூடினால் காதடைக்கும், மூச்செடுக்க கஷ்டப்படுவார். அதனால் வாயால் மூச்செடுப்பார். தூசு, கிருமி எல்லாம் உள்ளே நுழைய இருமல் தொடங்கும். நெஞ்சு, வயிறு நோகும். கிருமித்தொற்றுக்கு ஆளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டிவரும். இதனால் அவருக்கு மட்டும் கஷ்டமில்லை. அவருடன் இருப்பவர்களுக்கும்தான் கஷ்டம். இன்று மதன் வீட்டில்தானே இருப்பான். உடனே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லச் சொல்லுங்கள். அதன் பிறகு எனக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள். அப்போதுதான் நான் உங்களுடன் கதைப்பேன்.” என்று கோபமாக கத்தியவன் உடனடியாக கைபேசியை வைத்துவிட்டான்.
மதன் கூறிய வார்த்தைகள் கணபதியை பயம்கொள்ளச் செய்தன. அவன் கூறியது உண்மைதானே. அதுமட்டுமல்ல எல்லோருக்கும் ஆலோசனைகள் வழங்கியவருக்கு அதை கடைப்பிடிக்க முடியவில்லை என்பது வெட்கத்தை ஏற்படுத்தியது. “ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி” என்ற பழமொழி நினைவில் வந்து கைகொட்டிச் சிரித்தது. கணபதியின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“செல்வி, வெளியே சென்ற மதன் திரும்பியதும் வைத்தியசாலைக்கு என்னை அழைத்துச் செல்லட்டும். நான் போடவேண்டிய ஆடைகளை தயாராக வைத்துவிட்டு குளிப்பதற்கு வெந்நீர் வைத்துவிடு.” எனக் கூறி செல்வியின் மனதில் நிம்மதியை விதைத்தார் கணபதி.
*****