குவியல் 4 எண்ணம் 3
மின்னுவதெல்லாம் பொன்னல்ல

உற்பத்தி செய்யும் பொருட்களில் தரமானதும் இருக்கும். போலியானதும் இருக்கும். அவற்றைப் பிரித்தறிவது மிகவும் கடினம். விற்பனையாளர்கள் பொருட்களைத் தரமானது என்று கூறித்தான் வியாபாரம் செய்வார்கள். தரமான பொருட்கள் நீண்டகாலம் பாவிக்கும். போலியானவை விரைவில் பழுதடைந்து போய்விடும். அவற்றை ஆராய்ந்து பார்த்துத்தான் வாங்கவேண்டும்.
உணவுப் பொருட்களும் அப்படியே. மரக்கறி வகைகள் வெளித்தோற்றத்தில் பளிங்குபோல அழகாகக் காட்சியளிக்கும். ஆனால் வாங்கிச் சென்று சமைப்பதற்கு வெட்டும்போது உள்ளே பூச்சியும் புழுவுமாகக் காணப்படும். அழகாகக் காட்சியளிக்கும் தானிய வகைகளிலும் நிறையைக் கூட்டிக் காட்டுவதற்காக கல்லையும் மண்ணையும் கலந்திருப்பார்கள்.
அதேபோலத்தான் மனிதர்களும் நல்லவர்களும் இருக்கிறார்கள். நல்லவர்கள் போல நடித்து ஏமாற்றிச் செல்பவர்களும் இருக்கிறார்கள். பணக்காரர்களும் இருக்கிறார்கள் பணக்காரர் போல் நடிப்பவர்களும் இருக்கிறார்கள்.
சில தனியார் வங்கிகள், வெளிநாடு செல்வதற்கு ஒழுங்கு செய்யும் சில தனியார் நிறுவனங்கள், சில அடகு நிலையங்கள் என பணத்துடன் தொடர்புடைய சிறு சிறு தனியார் நிறுவனங்களை நடாத்துபவர்கள் பணத்தை வாங்கி ஏமாற்றி நாட்டைவிட்டே செல்பவர்களும் இருக்கிறார்கள்.
கோடீஸ்வரன் என நம்ப வைத்து பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிச் செல்பவர்களும் இருக்கிறார்கள்.
அலங்கார வார்த்தைகள் பேசி இனிப்புப் பண்டங்களைக் கொடுத்து சிறுவர்களை கடத்திச் செல்வோரும் இருக்கிறார்கள். குழந்தைகளை எச்சரித்து வளர்ப்பது முக்கிய கடமையாகும்.
போலியான பொருட்களை வியாபாரம் செய்பவர்களும், போலியான ஆவணங்களை தயாரிப்பவர்களும், காவல்துறையினர் என வேடமிட்டு திரிபவர்களும், போலி மருத்துவர்களும் என ஏமாற்றுக்காரர்கள் மக்களிடையே சகஜமாக நடமாடுகிறார்கள்.
இவற்றிற்கொல்லாம் சிகரம் வைத்தாற்போல போலியான பணமும் எம்மிடையே நடமாடுகிறது.
போலிகள் நிறைந்த இந்த ஏமாற்று உலகில் நாம் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதற்காகவே எமது முன்னோர்கள் ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்று ஒரு வரியில் எம்மை எச்சரித்திருக்கிறார்கள்.
பொருட்களை வாங்கும்போதும், புதிய மனிதர்களுடன் பழகும்போதும், புது நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யும்போதும் அவதானமாக இருப்பது அவசியம். பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பவர்கள் நன்றாக அலசி ஆராயாமல் காரியத்தில் இறங்கக்கூடாது.
எனவே சகல விஷயங்களிலும் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது மிக மிக அவசியமாகும்.
உதாரணக்கதை
“கீதா! என்னடி கைபேசியை எடுக்க எவ்வளவு நேரம்?” சிடுசிடுத்தாள் வாணி.
“அடுப்பில் வேலையாக இருந்தேன். அதை அணைத்துவிட்டு வரவேண்டாமா? அதுசரி என்ன சமையல் நேரத்தில் அழைக்கின்றாய்?”
“ஒரு சந்தோஷமான செய்தி. அதை உடனடியாகக் கூறிவிட்டு அது தொடர்பாக கதைப்பதற்குத்தான் எடுத்தேன்.”
“அது என்னடி அவசரமான சந்தோஷ செய்தி?”
“விஜயாவின் திருமணத்திற்குச் செல்ல அனுமதி கிடைத்துவிட்டது.” குதூகலத்தில் துள்ளியது வாணியின் குரல்.
“அதில் எனக்கென்னடி சந்தோஷம்?”
“என்ன சொல்கிறாய்? நீ தனியே போகவேண்டி வராதே. நானும் உன்னுடன் வருவேனே.”
“ரொம்ப முக்கியம்.” என முனகியவள், “யார் உனக்குச் சொன்னது திருமணத்திற்கு நான் போகிறேன் என்று?”
“கோடீ…….ஸ்வரி நீ. நினைத்தவுடன் நினைத்த இடத்திற்கு செல்வதற்கு வசதியாக வாகனம் இருக்கிறது. அன்பான பண்பான கணவர். அப்படி இருக்கையில் நீ போகாமல் இருப்பதற்கு காரணம் இருக்கிறதா என்ன?”
கோடீஸ்வரி என்ற வார்த்தையைக் கேட்டதும் பற்றிக்கொண்டு வந்தது கீதாவிற்கு. தனது உண்மை நிலை தெரியாமல் வாணி மட்டுமல்ல எல்லோருமே அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை இப்படியே வளரவிடக்கூடாது என்று நினைத்தவள்,
“போதும் வாணி நீ தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றாய். நீ மட்டுமல்ல மற்றவர்களும் நினைக்கின்ற மாதிரி நாங்கள் கோடீஸ்வரர் அல்ல.”
“நிறுத்து! சும்மா கதை விடாதே. கண் பட்டுவிடும் என்று நினைக்கிறாயோ?”
“நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேள்.”
அமைதியானாள் வாணி.
“நீ நினைக்கின்ற மாதிரி எதுவுமில்லை. எனது கணவர் பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீட்டிலுள்ள ஆடம்பர பொருட்களை எல்லாம் கடன் அட்டையில் வாங்கியிருக்கின்றார். எனக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இவை ஒன்றும் தெரியாது. கடன் கட்டுவதிலேயே உழைப்பெல்லாம் போகிறது. சொத்துக்கள் இருக்கின்றன என்பது உண்மை. வசதியாக வாழ்கின்ற அளவுக்கு எல்லாமே இருக்கின்றன. மேலதிகமாக இருப்பவை எல்லாம் கடன். போலியான கோடீஸ்வர வாழ்க்கை.”
“உண்மையாகத்தான் சொல்கிறாயா?”
“நான் ஏன் பொய் சொல்லப் போகிறேன். நானும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிவிட்டேன். இப்போதுதான் சிறிது மாற்றம் தெரிகிறது.”
“நல்ல விஷயம் தானே.”
“அது எதனால் என்று நினைக்கிறாய்.”
“சொன்னால்தானே தெரியும்.”
“கடன்கள் எல்லாமே முடிந்தபின்புதான் குழந்தையைப்பற்றி சிந்திக்க முடியும் என்று கூறிவிட்டேன்.”
“அடிப்பாவி”
“குழந்தை இல்லையா என்று கேட்பவர்களுக்கெல்லாம் இரண்டு வருடங்களுக்கு வேண்டாம் என்றிருக்கிறோம் என்று கூறிச் சமாளித்தார். இப்போ இரண்டு வருடங்களாகிறது. இனி என்ன செய்ய முடியும்? யோசிக்கத்தானே வேண்டும். இனி அநாவசியமாக ஒன்றுமே வாங்கப்போவதில்லை என்று கூறிவிட்டார். என்றாலும் கடன்கள் முடியட்டும் என்று கூறிவிட்டேன்.”
“வெளிப் பார்வைக்கு தெரிவதை மனதில் வைத்து ஒன்றையும் தீர்மானிக்க முடியாது என்பது உன் விஷயம் மூலம் நன்கு தெரிந்தது. கடன் இல்லாத வாழ்க்கைதான் நிம்மதியானது. நீ எடுத்த முடிவு மிகவும் சரியானது. நீ ஏன் வேலைக்குப் போகக்கூடாது.”
“நான் வேலைக்குப் போகத் தொடங்கியிருந்தால் எனது கணவர் மனம் இவ்வளவு விரைவில் மாறத் தொடங்கியிராது. கடன் எல்லாம் முடியட்டும். அதன்பிறகு நான் வீட்டிலுருந்தே வேலை செய்ய உத்தேசித்திருக்கின்றேன்.”
“மிகவும் அருமையான முடிவு எனது தோழியே! அப்புறம் இந்த திருமணத்திற்குச் செல்வது பற்றி….” இழுத்தாள் வாணி.
“நிச்சயமாகப் போகின்றோம். இப்போதான் என் மனம் மிகவும் இலேசாக இருக்கிறது.”
இருவரும் சிரிப்புடன் விடைபெற்றனர்.
*****