குவியல் 4 எண்ணம் 4
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

கல்வியுடன் சிறந்த பண்புகளையும் நல்ல பழக்கவழக்கங்களையும் நற்குணங்களையும் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே புகட்டிவிட வேண்டும். அவை பசுமரத்தாணி போல அவர்கள் மனதில் பதிந்து பெரியவர்களானதும் நற்பிரஜைகளாக வாழ வழிவகுக்கும். சிறு பிள்ளைகள் தானே, இன்னும் கொஞ்சம் வளர்ந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்று செல்லம் கொடுத்து அலட்சியமாக இருக்கக்கூடாது. பிள்ளைகள் வளர வளர தாங்கள் நினைத்தபடி எல்லாம் செய்யலாம் என்ற எண்ணமும் பிடிவாதமும் சிறிது சிறிதாக தலைதூக்க ஆரம்பித்துவிடும். அதன்பின் அவர்களை மாற்றுவது மிகவும் கடினம்.
சிறு வயதிலேயே பிள்ளைகள் செய்யும் தவறுகளை திருத்திவிட வேண்டும். கேட்பவைகளை எல்லாம் வாங்கிக் கொடுக்காமல், தேவையானவை எவை தேவையற்றவை எவை என்பதையும் தேவையற்றவைகளை வாங்குவதால் ஏற்படும் வீண் செலவுகளையும் விரயங்களையும் அவர்கள் வயதுக்கேற்ப புரிய வைக்க வேண்டும். நல்ல செயல்கள் கூடாத செயல்களை பிரித்தறிய கற்றுக் கொடுக்க வேண்டும். எதிலும் குறைகளைக் காணாது நிறைகளை காணும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தோல்விகளை ஏற்றுக்கொள்ளவும் பிழைகளை ஒத்துக்கொள்ளவும் வேண்டிய மனப்பக்குவத்தை உண்டாக்க வேண்டும்.
குழந்தைகள் மனதில் பதியும் முதல் நடவடிக்கைகள் நல்லவைகளாக இருக்க வேண்டும். அதையே அவர்கள் மனம் சரியென் எடுத்துக்கொள்ளும். அதை எளிதில் மாற்ற முடியாது. பாடசாலை செல்லும் வரை அவர்கள் பெற்றோர் பராமரிப்பில் இருப்பதால் அக் காலகட்டத்தில் தேவையானற்றைக் கற்றுக் கொடுத்துவிட வேண்டும். வெளியுலகில் பலவித குணங்களையுடையவர்களை சந்திக்க குழந்தைகள் தயாராக இருக்க வேண்டும்.
வீட்டில் உள்ள பெரியவர்களின் நடவடிக்கைகளையும் கதைகளையும் பேச்சுக்களையும் பார்த்தும் கேட்டும் குழந்தைகள் வளர்கிறார்கள் என்பதை மறக்கக்கூடாது. பெரியவர்கள் பிழை செய்தாலும் அதை சரி என நினைப்பார்கள். வளர்ந்ததும் தாமே உணர்ந்து மாற்றிக்கொண்டால் அன்றி மற்றவர்களால் அவர்களை மாற்ற முடியாது. மாறமாட்டோம் என பிடிவாதமாக வாழ்பவர்களையும் மாற்ற முடியாது. எனவே குழந்தைகள் முன்னிலையில் அவதானமாக இருக்க வேண்டும். வெளியில் நடக்கும் சண்டை சச்சரவுகளை பிள்ளைகளை வைத்துக்கொண்டு புதினம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
பெற்றோரையும் பெரியோரையும் ஆசிரியரையும் மதித்து அவர்கள் சொற்படி கீழ்படிந்து நடக்க சிறு வயதிலேயே பிள்ளைகள் கற்றுவிட்டால் பெரியவர்களானதும் அவர்கள் வாழ்க்கை சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.
பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் எமது முன்னோர்கள் முன்னெச்சரிக்கையாக கூறியிருக்கும் “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்ற முதுமொழியை சிந்தித்து செயற்படுவோம்.
உதாரணக்கதை
“சுதா! இன்று கடைப்பக்கம் போகமாட்டாயா?”
சுதாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.
“அப்பா! எதிர்மறையாக கேட்காதீர்கள் கதைக்காதீர்கள் என்று எத்தனைமுறை உங்களுக்கு சொல்வது? கடைப்பக்கம் போவாயா எனக் கேளுங்கள்.”
இவள் ஒருத்தி, எப்ப பார்த்தாலும் எதிர்மறை நேர்மறை என்று உயிரை வாங்குகிறாள். அப்படி என்னதான் அதில் இருக்கிறதோ? தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால் பிள்ளைகள் சொற்படிதான் நடக்கவேண்டுமா என்ன? தனக்குள் முணுமுணுத்தார் பரசுராமன்.
பரசுராமனின் எண்ணங்கள் சிந்தனைகள் எல்லாமே எதிர்மறையாகத்தான் இருக்கும். அதன் தாக்கம் அவருக்கு மட்டுமல்ல அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் இருக்கும் என்பது அவருக்கு புரியவில்லை. அதனால் எப்போதுமே நேர்மறையாக சிந்தியுங்கள் கதையுங்கள் என எத்தனையோ முறை கூறியபோதும் அவர் கேட்கின்றபாடில்லை.
“சுதா! ஒன்றை நினைவில் வை. எதிர்மறை நேர்மறை என்றெல்லாம் கூறி எங்கள் பெற்றோர் எங்களை வளர்க்கவில்லை. உங்களையும் நாங்கள் அப்படி வளர்க்கவில்லை. இது என்ன புதிதாக இருக்கிறது. இப்படித்தான் கதைக்கவேண்டும் என அரசாங்கம் ஏதேனும் புதிதாக சட்டம் இயற்றியிருக்கின்றதா?.”
“அப்பா! நாம் நல்லது நினைத்தால் நல்லது நடக்கும், கெட்டது நினைத்தால் கெட்டதுதான் நடக்கும். இதுவாவது உங்களுக்கு தெரியுமா?”
“நான் என்ன குழந்தை என்று நினைத்தாயா?”
“அதுதான் அப்பா இந்த நேர்மறை எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்கள் என்பதும். சுதா இன்று கடைக்குச் சென்று நான் சொன்ன பொருளை வாங்கி வருவாள், என சிந்தியுங்கள். அதுவே நடக்கும். அதே போலத்தான் நம் ஆரோக்கியமும். நான் நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றேன், உற்சாகமாக மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்ற எண்ணங்கள் உங்கள் மனதில் எப்போதும் இருக்கவேண்டும். அந்த எண்ணங்களே உங்களை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளும். எண்ணம் போல் வாழ்க்கை என்று கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?.”
சுதா சொல்வது சரியாகத்தான் இருக்கிறது என நினைத்த பரசுராமனுக்கு கொஞ்சம் புரிவது போல் இருந்தது.
“அதுமட்டுமல்ல அப்பா, நம்மைச் சுற்றி தேவதைகள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எம்மைக் கடந்து செல்லும் சமயத்தில் நாம் ஏதாவது நினைத்துக் கொண்டிருந்தால், அப்படியே ஆகட்டும் என ஆசிர்வதித்துச் செல்வார்களாம். அதனால் நாம் எப்போதுமே நல்லதையே நினைக்கவேண்டும் என பாட்டி எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். ஏன் உங்களுக்கு இதை சொல்லித்தரவில்லையா?”
“அம்மா கூறியிருப்பார், நான்தான் அதை மனதில் எடுக்கவில்லை என நினைக்கிறேன். சரி சுதா, நீ கூறுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. நான் முயற்சி செய்கிறேன். இதையெல்லாம் சிறுவயதிலிருந்தே கவனித்து மாற்றியிருக்க வேண்டும். காலம் கடந்து வயதுபோனபின் மாற்றிக்கொள்வது கடினம்தான். பார்க்கலாம். எனக்கு விளங்கிவிட்டது, நிச்சயம் முயற்சி செய்வேன்.”
அப்பாடி, இப்போதாவது புரிய ஆரம்பித்திருக்கிறதே என நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி, வரும்போது நினைவாக அவர் கூறிய பொருளை வாங்கிவரவேண்டும் என்று எண்ணியபடி அலுவலகம் நோக்கி விரைந்தாள் சுதா.
அன்று மாலை சுதா வீடு திரும்பி வாசலில் நுழையும்போதே,
“சுதா! நான் கூறியதை நீ வாங்கிவரவில்லையா?”
பரசுராமனின் கேள்வியில் திகைத்த சுதா, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள் என நினைத்தபடி உள்ளே நுழைந்தாள்.
*****