குவியல் 4 எண்ணம் 5
ஆழம் அறியாமல் காலை விடாதே

எம்மை சிந்திக்க வைக்கும் முன்னோர்கள் கூறிய பழமொழிகளுள் ஒன்று ‘ஆழம் அறியாமல் காலை விடாதே’. இம் முதுமொழி எமது வாழ்க்கையில் எப்படி பயன் தருகிறது எனப் பார்ப்போம்.
நீரின் ஆழம் தெரியாமல் காலை வைத்தால் அதில் மூழ்கி தொலைந்துவிடும் வாய்ப்புள்ளது. அதே போலத்தான் நாம் செய்யும் செயலின் ஆழம் தெரியாமல் தொடங்கினால் அதில் சிக்குண்டு தத்தளிக்க நேரலாம்.
நாம் ஒரு செயலை செய்யும் முன்பு அதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளையும் தீமைகளையும் அதனால் உண்டாகும் நன்மைகளையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகும். காலநிலை மாற்றங்கள், அரசியல் மாற்றங்கள், என்பவற்றால் பாதிப்பு ஏற்படுமா? பாதுகாப்பானதா? என்பவற்றை எல்லாம் சிந்தித்தே செயல்ப்பட வேண்டும். அப்படிச் செய்வதால் துன்பமோ கவலையோ நேராது. அச்செயல் பலருக்கு நன்மை, இலாபம் தரலாம். அதைப் பார்த்து நாமும் அதை செய்வோம் என தொடங்கினால் சில சமயம் அது எமக்கு பொருத்தமில்லாமல் தீமையையும், நஷ்டத்தையும் தரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே ஒரு செயலைச் செய்வதில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியமாகும். நன்கு ஆராயாமல் ஒரு செயலைத் தொடங்கியபின் அதைப்பற்றி சிந்திப்பதில் ஒரு பயனும் இல்லை.
திருவள்ளுவரின் குறளும் இதையே பின்வருமாறு கூறுகிறது.
குறள் – “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு”
கலைஞர் அவர்களின் விளக்கவுரை – நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.
பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவும் அவர்களுக்கு எந்தத் துறையில் ஈடுபாடும் திறமையும் அதிகம் இருக்கிறதோ அதை அவர்கள் கற்பதற்கு அனுமதிக்க வேண்டும். பிள்ளைகளின் திறமைகளை கருத்திற்கொள்ளாது, அறிவின் ஆழம் தெரியாமல் எங்கள் விருப்பப்படிதான் படிக்கவேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களால் முடியாததை அவர்கள் மீது திணிப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும்.
எம் முன்னோர் கூறிய அறிவுரை வரிகளை அலட்சியம் செய்யாது அதன்வழி வாழ்வோமேயானால் வெற்றி நிச்சயம்.
உதாரணக்கதை
“அப்பா! உதியுடைய திருமண செலவு முழுவதும் என்னுடைய பொறுப்பு. அண்ணாவிடம் ஒன்றும் கேட்க வேண்டாம். அவன் வெளிநாட்டில் இருந்தாலும் இப்போதுதான் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆகிறது. அண்ணியும் அங்கு சென்றதிலிருந்து வேலைக்கு போவதில்லை. அவர்களுக்கு செலவுகள் கூடுதலாக இருக்கும். நாம் தான் அதை புரிந்து நடக்கவேண்டும்.”
“அது எனக்கு புரியுதடா. உத்தமா! உன்னால் முடியாது என்று சொல்லவில்லை. உன்னுடைய தங்கையின் திருமண செலவை நீ ஏற்று செய்வதாக கூறியதே மிகவும் சந்தோஷமாகவும் மன நிறைவாகவும் இருக்குதடா. உனது அண்ணா உருத்திரனுக்கும் ஆசை இருகும் என்பதை மறவாதே. அத்துடன் திருமண செலவை நாம் எப்படித்தான் திட்டமிட்டாலும் அந்த நேரத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து திக்குமுக்காட நேரிடும். ஆழமறியாது காலை விடாதே.”
“யாரும் என்னைத் தடுக்க வேண்டாம். என்ன செலவு வந்தாலும் நான் சமாளிப்பேன் அப்பா. வீண் யோசனை வேண்டாம். நகை, ஆடைகள், பாத்திரங்கள் என என்னென்ன வாங்கவேண்டும், மண்டபம், சாப்பாடு, பலகாரம் போன்று என்னென்ன செலவுகள் இருக்கின்றன என்பவற்றை பட்டியலிட்டுத் தாருங்கள். மிகுதியை நான் பார்த்துக் கொள்கிறேன். உதிக்கு ஏதாவது பரிசளித்து அண்ணாவுடைய ஆசையை நிறைவேற்றட்டும்.”
மணிகண்டனும் கமலாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் தங்கள் பிள்ளைகளை எண்ணி மகிழ்ந்தாலும் உள்ளூர பயந்துகொண்டுதான் இருந்தனர். செலவுகள் கூடி சமாளிக்க முடியாமல் எங்காவது கடன் எடுத்துவிடுவானோ என்ற யோசனை உள்ளூர ஓடிக்கொண்டிருந்தது. ஒரு தீர்மானத்திற்கு வந்த மணிகண்டனும்,
“சரி, உன் விருப்பப்படியே செய். ஆனால் ஒரு நிபந்தனை.”
“என்னப்பா.”
“உனக்கே தெரியும், எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எப்படியாவது சமாளித்துவிடுவோம். கடன் என்ற வார்த்தை எங்கள் நினைப்பில் கூட வந்ததில்லை.”
“நீங்கள் பயப்படும்படி நான் எங்கும் கடன் எடுக்க மாட்டேன். அப்படி நினைக்க வேண்டாம் அப்பா.”
“சரி. நான் சொல்வதை முழுமையாகக் கேள். அப்படி உன்னால் சமாளிக்க முடியாத சூழ்நிலை வந்தால் எங்களிடம் உடனே கூறிவிடவேண்டும். நாம் சேர்ந்து சமாளிக்கலாம். அந்த வாக்குறுதியை நீ தந்தால் நாங்கள் நிம்மதியாக இருப்போம்.”
“அப்படி ஒரு நிலை வராதப்பா. அப்படி நான் கடன் எடுக்கும் சூழ்நிலை வந்தால் நிச்சயம் எனது அலுவலகத்தில் கடனுக்கு விண்ணப்பிப்பேனேயன்றி யாரிடமும் கடன் எடுக்க மாட்டேன். எதுவென்றாலும் உங்களுக்குத் தெரியாமல் ஒன்றும் செய்யமாட்டேன். போதுமா?” எனப் புன்னகைத்தான் உத்தமன்.
பெற்றோரும் நிம்மதிப் பெருமூச்சுடன் புன்னகைத்தனர்.
திருமணத்திற்கு இரு நாட்களுக்கு முன்பு உருத்திரன், மனைவி மகளுடன் வந்துவிட்டான். உதயாவின் திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தது. ஒரு குறையும் வராமல் உத்தமன் பார்த்துக்கொண்டான்.
கையில் இருந்த பணம் இதுவரையிலான செலவுகளுக்குச் சரியாக இருந்தது. ஆனால் திருமணத்தின் பின் கொடுக்க வேண்டிய கணக்குகள் இன்னும் இருந்தன. வாகனங்களின் வாடகை, புகைப்படம், கானொளி என நீண்டு கொண்டே போனது. கையிருப்பில் ஒரு சதமும் இல்லை. அலுவலகத்தில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் அந்தப்பணம் கிடைத்தாலும் போதாது என புரிந்தது. அண்ணாவின் உதவியை ஏற்றிருக்கலாமோ என்ற எண்ணம் சிறிது தலைதூக்கியது. அப்பா கூறியது போல ஆழம் அறியாமல் காலை வைத்தது நிதர்சனமாகத் தெரிந்தது. சரி அதை இப்போது நினைத்து ஒரு பயனும் இல்லை. அண்ணா குடும்பம் இன்று பயணம். அவர்கள் நல்லபடியாக கிளம்பியதும் அப்பாவுடன் கதைத்து ஆலோசிப்போம். ஏதாவது வழி பிறக்கும், என சமாதானமான உத்தமன் தமையனின் பயணத்திற்கு தேவையானவற்றை எடுத்து வைத்து ஆயத்தமானான்.
எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பிய உருத்திரன் இறுதியாக உத்தமனிடம் வந்து ஆரத் தழுவி அவனது கைகளில் ஒரு தடித்த உறையைக் கொடுத்து விடைபெற்றான்.
“அண்ணா! என்ன இது?”
“பயணக்காசு எல்லோருக்கும் கொடுத்துவிட்டேன். இது உனக்கு.”
“என்ன அண்ணா! விளையாடுகிறீர்களா? பயணக்காசு ஒரு பெருந்தொகை போல இருக்கிறது. இப்படி யாராவது கொடுப்பார்களா?”
“சென்றதற்க்கு இது முதல் தடவை வந்ததால் இப்படித் தருகிறேன். அடுத்தடுத்த முறை குறைவாகத்தான் தருவேன். கடுமையாக யோசிக்காதே.”
“என்றாலும் அண்ணா, உங்களுக்கு எவ்வளவு செலவிருக்கும்…” என நா தழுதழுக்க இழுத்தான் உத்தமன்.
“நீ நினைப்பது போல அப்படி ஒன்றுமில்லை. என்னுடைய வருமானம் எங்களுக்கு தாராளமாக போதும். என்றாலும் அடுத்த மாதத்திலிருந்து உனது அண்ணி வீட்டிலிருந்தே பகுதி நேர வேலை செய்யப்போவதாக முடிவெடுத்திருக்கிறாள். அவளது படிப்பும் வீணாகப் போகக்கூடாது என்பது அவளது எண்ணம். நானும் சரி என்றுவிட்டேன். இனி நேரமாகிவிட்டது. புறப்படுவோமா?” விடைபெற்றது உருத்திரன் குடும்பம்.
கடவுளே நன்றி. பெற்றோரின் முன் தலைகுனிவு ஏற்படாமல் என்னைக் காப்பாற்றி விட்டாய். திருமணச் செலவை என்னொருவனால் தனியே செய்ய முடியாது என்பது அண்ணாவுக்கு புரிந்திருக்கும். அதனால்தான் ஒரு பெருந்தொகையை பயணக்காசு என்று நாசூக்காக தந்திருக்கிறான். இனிமேல் நன்கு ஆராயாமல் ஒரு காரியத்திலும் இறங்கக்கூடாது. எனக்கு இது ஒரு நல்ல அனுபவம். மீண்டும் கடவுளுக்கு நன்றி கூறியபடி நிம்மதிப் பெருமூச்சு விட்டான் உத்தமன்.
*****