குவியல் 6 எண்ணம் 2
செல்வம்

செல்வம் எனும்போது நாம் இங்கு பணம், சொத்து என்பனவற்றைப் பார்ப்போம். மனிதன் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ செல்வம் அத்தியாவசியமானதாகும். எமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் என்பவற்றை பணம் இன்றி பெறமுடியாது. நேர்மையான முறையில் ஈட்டும் செல்வம் இறுதிவரை எமக்குத் துணையாக வரும். செல்வத்தைப் பெற உழைப்பு முக்கியம். அவரவர்க்கு இயலுமான வழிகளில் பணத்தை சம்பாதிக்கலாம். அரசாங்க வேலைதான் வேண்டும், பெரிய பதவி வரும்வரை வேலை தேடிக்கொண்டே இருப்பேன், என் கல்விக்குத் தகுந்த வேலைக்குத்தான் செல்வேன் என்றெல்லாம் காலத்தைக் கடத்தினால் வாழ்க்கை ஏழ்மை நிலைமையை நோக்கிச் செல்லாம். எனவே விருப்பமான தொழிலுக்கு முயற்சிகளை மேற்கொள்வதுடன் அது கிடைக்கும்வரை சிறு சிறு வேலைகளைச் செய்து உழைப்பதுதான் புத்திசாலித்தனம்.
பரம்பரை பரம்பரையாக வரும் செல்வத்தை வைத்து வாழலாம் என உழைக்காமல் சோம்பேறித்தனமாக இருந்துவிட்டால் செல்வம் எல்லாம் கரைந்து முடிந்துபோவதுடன் நோய்கள் பீடிக்கும் வாய்ப்புக்களும் அதிகரிக்கும்.
மேலதிக செல்வத்திற்கு பேராசைப்பட்டால் அது எம்மை தீயவழிகளுக்கு அழைத்துச் செல்லும். அது எமது வாழ்வை பாழாக்கிவிடும். “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற எம் முன்னோர்களின் வழிகாட்டலுக்கு ஏற்றவாறு வாழ்வதே எமக்கு நிம்தியைத் தரும்.
விடாமுயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் விருப்பத்துடனும் செய்யும் நேர்மையான தொழில் வளமான வாழ்க்கைக்கு செல்வத்தை அள்ளித்தரும். நேர்வழியில் ஈட்டும் செல்வம்,
வளத்தைத் தரும்
மதிப்பைத் தரும்
மகிழ்ச்சியைத் தரும்
நிம்மதியைத் தரும்.
செல்வத்தைப் பதுக்கி வைப்பதால் தனக்கும் உதவாமல் மற்றவர்களுக்கும் உதவாமல் அழிந்துபோய்விடும். நல்வழியில் ஔவையார் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.
நல்வழி – பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போயினபின்(பு) ஆரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
கவிஞர் பத்மதேவனின் விளக்கவுரை – மிகவும் வருத்தப்பட்டு சம்பாதித்து, அவ்விதம் சம்பாதித்த பணத்தையெல்லாம் தாமும் அனுபவிக்காமல் பிறருக்கும் ஈயாமல் பற்றெண்ணத்துடன் புதைத்து வைத்து இழிவடைந்த மானிடரே! உங்களுக்கு ஒரு விஷயத்தைக் கூறுகிறேன், கேளுங்கள். பாவிகளே! உங்கள் உடலாகிய கூட்டை விட்டு உயிராகிய பறவை பறந்து போனபின் புதைக்கப்பட்டிருக்கும் அந்தப் பணத்தை யார்தான் அனுபவிப்பாரோ?
(மரணம் நிச்சயம் ஆதலால், ஈட்டிய பொருளைத் தாமும் துய்த்துப் பிறருக்கும் வழங்கி வாழ வேண்டும்).
அளவுக்கதிகமான செல்வத்தை வைத்திருக்கும் பெரும் செல்வந்தர்களுக்கு, நலிந்தவர்க்கு உதவும் மனப்பான்மை இருக்கவேண்டும். தான, தர்மங்கள் செய்பவர்களுக்கு செல்வம் வற்றாது பெருகிக்கொண்டே இருக்கும் என்பதை நாம் கண்கூடாகக் காணலாம். சேவை மனப்பான்மை உடையவரின் செல்வம் எப்படிப்பட்டது என்பதை திருவள்ளுவரின் குறள் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
குறள் – ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்
பேரறி வாளன் திரு.
மு.கருணாநிதி அவர்களின் விளக்கவுரை – பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.
எமது வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய காரணிகளுள் ஒன்று செல்வம். அதை நேர்வழியில் உழைத்து சிறப்பாக வாழ்வோம்.
உதாரணக்கதை
“தம்பி, உனக்கு மூத்தவர்கள் திருமணமாகி இரு வருடங்கள் ஓடிவிட்டன. உனது திருமணத்தையும் முடித்துவிட்டோம் என்றால் நாங்கள் தல யாத்திரைகள் செல்லலாம் என ஆவலுடன் இருக்கிறோம். ஏனடா இழுத்தடிக்கிறாய்?”
தாய் பார்வதி ஆற்றாமையுடன் புலம்பினாள்.
“அம்மா, அததற்கு காலநேரம் வர எல்லாம் நல்லபடியாக நடக்கும். வீணாக கவலைப்பட வேண்டாம். தல யாத்திரை செல்லும் வயதா உங்களுக்கு? உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் அனுபவிப்பதற்கு இருக்கின்றன. அதை அனுபவியுங்கள்.”
சிரித்தபடி கூறினான் செந்தில் என அழைக்கப்படும் செந்தில்குமரன்.
இரு பெண் பிள்ளைகளுக்கும் ஒரு ஆண் பிள்ளைக்கும் அடுத்ததாக பிறந்தவன் செந்தில். கடைக்குட்டி என்ற செல்லம் இருந்தாலும் பொறுப்பு மிக்கவன். தீர ஆராயாமல் ஒன்றும் செய்யமாட்டான்.
“உனக்கு என்ன குறை? எல்லாப் பிள்ளைகளுக்கும் வீடு கட்டிக்கொடுக்கும் சக்தியையும் செல்வத்தையும் கடவுள் எங்களுக்குத் தந்திருக்கிறார். இப்போ நாங்கள் இருக்கும் வீடு உனக்குத்தானே. தளபாடங்கள் ஒன்றும் வாங்கத் தேவையில்லை. உனது திருமணம் முடிந்ததும் நாங்கள் கிராமத்திற்குச் சென்றுவிடுவோம். உனது அத்தையின் பெண் துர்க்காவும் உனக்காக காத்திருக்கிறாள். பிறகென்னடா தயக்கம்?”
“எனது கல்விக்குத் தகுந்த நிரந்தர வேலை ஒன்று கிடைக்கட்டும் அம்மா. நான் முயன்றுகொண்டுதான் இருக்கிறேன்.”
“அதுவரை காத்திருந்தால் உனக்கு வயசாகிவிடும். குழந்தை குட்டிகள் பற்றி யோசிக்கவேண்டிய சூழல் ஏற்படும். இப்போது திருமணம் செய்தால்தான் பிள்ளைகள் பிறப்பதற்கு சிக்கல் இருக்காது. அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கும் உங்களுக்கு தென்பு இருக்கும். ‘காலத்தே பயிர் செய்’ என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இப்போ என்ன வேலை செய்யாமலா இருக்கிறாய். நிரந்தரவேலை கிடைக்கும்போது கிடைக்கட்டும். அதற்காகக் காத்திருக்கத் தேவையில்லை.”
“அம்மா, அதே முன்னோர்கள்தான் ‘பணம் இல்லாதவன் பிணம்’ என்றும் கூறியிருக்கிறார்கள். நான் இப்போது தற்காலிக வேலைக்குத்தானே செல்கிறேன். தயவுசெய்து இன்னும் ஒரு வருடம் எனக்குத் தாருங்கள். நிரந்தர வேலை நான் எதிர்பார்க்கும் வண்ணம் கிடைக்கிறதோ இல்லையோ அதற்குள் நான் தயாராகிவிடுவேன்.”
“என்னவோ செய். உனது அத்தை வீட்டிலும் அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”
சலிப்புடன் கூறிக்கொண்டே சமையலறை நோக்கிச் சென்றாள் பார்வதி.
இன்று இரவு துர்க்காவுடன் கதைக்கும்போது அத்தை மாமாவை சமாதானப்படுத்தும்படி கூறவேண்டும் என நினைத்தபடி வேலைக்குச் செல்வதற்கு தயாராகினான் செந்தில்.
—
அன்றிரவே கைபேசியில் துர்க்காவை அழைத்து,
“நித்திரைக்குச் செல்ல ஆயத்தமா துர்க்கா? வீட்டில் எல்லோரும் நலமா?” என ஆரம்பித்தான் செந்தில்.
“தினமும் நலம் விசாரிப்பது ஒரு பழக்கமாகிவிட்டது. ஒரு நாளுக்குள் அப்படி என்ன நலக்குறைவு வந்துவிடப்போகிறது? எல்லோரும் நலம்தான்.” சிரித்தாள் துர்க்கா.
“சரி, பழகிவிட்டது விடு. இங்கு அம்மாவின் தொல்லை தாங்கமுடியவில்லை. மாதமொருமுறை என்றிருந்தவர்கள் இப்போ வாரமொருமுறை எனத் தொடங்கிவிட்டார்கள்.”
“அத்தை அப்படி என்ன செய்கிறார்?”
“திருமணம் எப்போ செய்யப் போகிறாய் என்ற புலம்பல்தான். பதில் கூறியே எனக்கு முடியவில்லை.”
“இங்கும் அதே கதைதான். நான் சமாளித்துக்கொண்டிருக்கிறேன்.”
“நீயே சொல்லு துர்க்கா, நிரந்தரமான நல்ல உத்தியோகம் இல்லாமல் எந்த நம்பிக்கையில் வாழ்க்கையை தொடங்குவது? செல்வம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கிறது என்பது இவர்களுக்கு புரிகிறதா இல்லையா என்பது தெரியவில்லை. சரி, இப்போ திருமணம் செய்துவிட்டு குழந்தை பெறுவதை சிறிது தள்ளிப்போடலாம் எனத் திட்டமிட்டால் உடனே தொடங்கிவிடுவார்கள் குழந்தை குட்டி ஒன்றையும் காணோம் என்ற பல்லவியை.”
“நீங்கள் சொல்வது உண்மைதான் அத்தான். முதலில் எங்களை திடப்படுத்திக்கொள்வோம். நானும் வேலைகளுக்கு விண்ணப்பித்துக்கொண்டுதான் இருக்கிறேன். வீட்டிலிருந்தே செய்யக்கூடிய வேலைகளுக்கு அல்லது பகுதிநேர வேலைகளுக்குத்தான் முயன்றுகொண்டிருக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்.”
“எனக்கு இன்னும் ஒரு வருடம் தருமாறு இன்று அம்மாவிடம் கூறிவிட்டேன். அதற்குள் நான் எதிர்பார்க்கும் வேலைக்காகக் காத்துக்கொண்டிராமல் கிடைக்கும் நிரந்தரமான சிறிய பதவியை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளப் போகிறேன். பின்பு அதிலிருந்து முன்னேறும் வழியைப் பார்ப்போம். ஒரு வருடம் காத்திருக்கவேண்டியதில்லை. பரம்பரை சொத்துக்கள் இருந்தாலும் உழைத்து வாழ்வதே ஆரோக்கியமானது. அதுமட்டுமல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவும் வசதியும் ஏற்படும். பணப்பற்றாக்குறையால் எத்தனையோ சிறுவர்கள் கல்வி கற்க முடியாது தவிக்கிறார்கள். அவர்களுக்குத்தான் முக்கியமாக உதவி தேவைப்படுகிறது.”
“அத்தான், எனது படிப்பும் வீண் போகக்கூடாது. முயற்சிசெய்வோம் கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டால் கவலைப்படமாட்டேன்.” என்றாள் துர்க்கா சிரித்துக்கொண்டே.
“சரி துர்க்கா, என்னுடன் அனுசரித்துப் போகக்கூடிய உன்னை மனைவியாக அடைய நான் பாக்கியம் செய்திருக்கின்றேன்.”
“அடடா, நான் கூறவேண்டியதை நீங்கள் கூறிவிட்டீர்களே.”
“மாமா அத்தையை நான் கேட்டதாக கூறிவிடு. தம்பிக்கும் எனது அன்பைத் தெரிவித்துவிடு.”
நிம்மதியுடன் கைபேசியை அணைத்து நித்திரைக்குச் சென்றான் செந்தில்.
*****