குவியல் 6 எண்ணம் 3
வீரம்

வீரம் எனும்போது புராண இதிகாசங்களில் கூறப்படும் நாயகர்களின் வீர சாகசங்களைப் பற்றியோ, பண்டைக்கால முடியாட்சி அரசர்களான மகா அலெக்சாண்டர், ராஜ ராஜ சோழன், சூரியவர்மன் போன்றோரின் வீரதீர செயல்கள் பற்றியோ மற்றும் அண்மைக்காலத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துப் போராடி வென்ற மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்றோரின் மனம் தளராத தொடர் போராட்டங்களைப் பற்றியோ அலசி ஆராயாமல் சாதாரண மனிதர்களின் தற்கால அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமான விடயங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.
தேவையான இடத்தில் எதிர்ப்பைக் காட்டுவது வீரம். அநியாயத்தைக் காணும் இடத்தில் அதை தட்டிக்கேட்பது வீரம். வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கெண்டு அவற்றைக் கடந்து வெற்றிகாண முயல்வது வீரம். துணிவான ஒரு உணர்வு வீரம்.
வில்லத்தனமான அடிதடியில் இறங்குவது வீரமல்ல. மற்றவர்கள் பார்த்ததும் பயந்து நடுங்கும்படியான செயல்களை செய்வதும் வீரமல்ல.
கௌரவமான திருட்டுக்கள், சுரண்டல்கள், பொய், களவு, தகாத வார்த்தைகள் உபயோகித்தல், மரியாதை இல்லாமல் நடத்துதல், பெண்களிடம் முறைகேடாக நடத்தல், சிறுவர்களை வேலைக்கு வைத்திருத்தல், கலப்படம் செய்தல், அடுத்தவர் இயலாமை பார்த்து ஏளனம் செய்தல், ஏமாற்றுதல் போன்றவற்றை கண்டும் காணாதது போல் இருத்தல் கோழைத்தனம் ஆகும். அவற்றைத் தட்டிக் கேட்டு நியாயத்தைக் கூற துணிவு வேண்டும், வீரம் வேண்டும்.
வீரம் ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும் இருக்கவேண்டும். கள்ளம் கபடம் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பயமின்றி வாழ துணிவு வேண்டும். தமக்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்பதுடன் ஊரறிய, உலகறிய செய்வதே மீண்டும் அத்தகைய செயல்கள் நடக்காமலிருக்க வழிவகுக்கும்.
பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே நல்லொழுக்கத்துடன் துணிவையும் ஊட்டி வளர்க்கவேண்டும். வாழ்க்கையில் தடைகளைத் தாண்டி இலக்கை நோக்கி நகர துணிவும் வீரமும் துணையாக இருக்கும் என்பது சத்தியம்.
“தடைகளை உடைத்தெறிந்து
அநியாயங்களைத் தட்டிக் கேட்டு
நேர்வழியில் முன்னேறிச் செல்பவன்
வீரனாகிறான்.
இவற்றுடன்
பெரியோரை மதித்தும்
நலிந்தோரை காத்தும்
அடுத்தவரின் உணர்வுகளை புரிந்தும் நடப்பவன்
மாவீரனாகிறான்.”
உதாரணக்கதை
“மாலு! எனக்கு ஒரு வழி சொல்லு. வகுப்பறையில் என் பின்னால் இருந்து ஒருவன் தொல்லை செய்கிறான். முளையிலேயே அதை கிள்ளி எறிந்தால்தான் நான் நிம்மதியாகப் படிக்கலாம்.”
“யாரவன், எத்தனை நாட்களாக இது நடக்கிறது?”
“யாரென்று பார்க்கவில்லை. பார்த்தால் வகுப்பறைக்கு வெளியிலும் தொல்லை செய்வானோ என்று பயமாக இருக்கிறது. இப்போ நான்கு நாட்களாக நடக்கிறது. நாங்கள் எடுக்கும் பாடங்களில் ஒன்று அவனும் எடுக்கிறான். அந்த நேரங்களில்தான் இது நடக்கிறது.”
“ஏன் இவ்வளவு நாளும் எனக்கு சொல்லவில்லை. அப்படி என்ன தொல்லை செய்கிறான்?”
“இவ்வளவுநாளும் வேறு வேறு இடங்களிலிருந்து பார்த்தேன். பலனில்லை. பின்னலைப்பிடித்து இழுத்துக்கொண்டிருக்கிறான். பேனையால் முதுகைக் குத்துகிறான். இன்று அந்தப்பாட நேரத்தில் நீ சிறிது தாமதமாக வா. வரும்பொழுது எனக்குப் பின்னால் இருப்பவனை யாரென்று பார்த்துவிடு.”
“வேண்டாம் சீதா. அவனை பார்ப்பதால் ஒரு பயனும் இல்லை. சிலசமயம் பிரச்சனை பெரிதாகலாம். எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை. திங்கட்கிழமை மகளிர் தினம். அன்று இறுதி வருட மாணவர்கள் நிகழ்ச்சிகள் நடாத்துகிறார்கள். நீ நன்றாக கட்டுரைகள் எழுதுவாய் அல்லவா? அந்நிகழ்வில் நீ பெண்கள் என்ற தலைப்பில் பேசு. நான் உனக்கு அனுமதி எடுத்துத் தருகிறேன்.” என்றாள் மாலதி.
“எனக்கு இந்த தொல்லை நீங்குவதற்கு வழி சொல் என்றால் என்னை மேடை ஏறச் சொல்கிறாய்.”
“பொறுமை கீதா, பொறுமை. அந்தப் பேச்சில்தான் இருக்கிறது உனக்கான தீர்வு. நீ, பெண்கள் மீது மரியாதை ஏற்படும் வண்ணமும் அவர்கள் மென்மையானவர்கள், பூப்போன்றவர்கள் என்பது உண்மை என்பதையும் விரிவாக பேசு. ஆனால் அவர்களை சீண்டினால் புயலாக மாறி அழித்துவிடுவார்கள் என்ற கருத்தையும் ஆணித்தரமாகவும் ஆக்ரோஷமாகவும் பதிவு செய்துவிடு. அதன்பிறகு விளைவை பார். உன்னை தொல்லை செய்பவனின் மனம் நல்லவிதமாக மாறிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” நம்பிக்கையூட்டினாள் மாலதி.
“நீ சொல்வதும் நல்ல யோசனைதான். நான் முயற்சிசெய்து பார்க்கிறேன்.” என்றாள் கீதா சிறு நம்பிக்கையுடன்.
அன்று மகளிர் தினம். கல்லூரியில் பட்டிமன்றம், கவிதை, பாட்டு, நடனம் என நிகழ்வுகள் களைகட்டிக்கொண்டிருந்தன. மாலதியின் முறை வந்ததும் மேடை ஏறினாள். “புதுமைப் பெண்கள்” என்ற தலைப்பில் பேசத்தொடங்கினாள். ஆரம்பத்தில் பெண்களின் நற்குணங்களையும் குடும்பத்தில் அவர்களின் முக்கியத்துவத்தையும் முன்பு அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் இப்போது அவர்களின் முன்னேற்றத்தையும் சமூகத்தில் அவர்களின் பங்களிப்பையும் விரிவாக பேசியவள் இறுதியாக,
“பெண்கள் வெளியே எத்தனையோ இன்னல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. போராட்டமே அவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. எவ்வளவு காலம்தான் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது. பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு. இன்றைய பெண்கள் துணிவும் வீரமும் மிக்கவர்கள். சீண்டல்களும் துன்புறுத்தல்களும் தொடர்ந்துகொண்டிருந்தால் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். புயலாக மாறி துவசம்சம் செய்துவிடுவார்கள்.” என ஆக்ரோஷமாக குரல் எழுப்பியவள் இரு வினாடிகள் அமைதியாக இருந்து,
“பிற பெண்களை தாயாக, சகோதரியாக பாருங்கள். அவர்களை மதிக்காவிட்டாலும் தொல்லை செய்து அவளை புயலாக மாற்றாதீர்கள். அன்புக்கு அடிமையானவள் பெண். அவளை அன்பாக நடாத்திப் பாருங்கள். அதை பன்மடங்காக பெருக்கி உங்களுக்குத் தருவாள். நன்றி.”
பேச்சை முடித்தும்தான் தாமதம், அதுவரை அமைதியாக இருந்த மண்டபம் கரகோசத்தால் அதிர்ந்தது.
“அருமையான பேச்சு கீதா, இதற்கு பலன் நிச்சயம் உண்டு.” மகிழ்ச்சியுடன் கீதாவின் கரங்களைப் பற்றினாள் மாலதி.
இருவர் முகங்களிலும் நம்பிக்கை ஒளி வீசியது.
*****