குவியல் 7
ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது எண்ணங்கள் போலவே அமையும் என்பதை பல கட்டுரைகள் மூலம் வாசித்தும் சொற்பொழிவுகள் மூலம் கேட்டும் மட்டுமல்லாது நேரிடையாகவே நாம் உணரக்கூடிய வகையில் பல சம்பவங்களையும் பார்த்திருக்கிறோம். மனிதன் நற்குணங்களை வளர்த்துக்கொள்ளும்போது அவனது செயல்கள் நல்லவைகளாக அமைவதுடன் அவனது வாழ்க்கையும் சிறப்பாக அமையும். தீய குணங்கள் தலைதூக்கும்போது அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். தீயவை எவை என்று தெரிந்துகொண்டே அவற்றை செய்வது அவரைச் சுற்றியிருப்பவர்களை மட்டுமல்லாது அவரையே அது அழித்துவிடும் என்பதை மனதில்கொண்டு செயலாற்றுவது நன்று.
பொறாமை, சந்தேகம், தற்பெருமை, சுயநலம், போலித்தனம், போலி ஆவணம் தயாரித்தல், அகந்தை, சோம்பேறித்தனம், பிறர் துன்பத்தில் மகிழ்தல், கெட்டவார்த்தைகள் பேசுதல், கூடாத சேர்க்கை, புறம் பேசுதல், பாரபட்சம் பார்த்தல், கோள் சொல்தல், வாக்கு மீறல், பொய்சாட்சி கூறுதல், கேலி செய்தல், வதந்தி பரப்புதல், ஏமாற்றுதல், கலப்படம் செய்தல், பொய், களவு, பாலியல் கொடுமை, கொள்ளை, கொலை என தீய குணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. உண்மையும் நேர்மையும் கடவுள் நம்பிக்கையும் எம்மை தீய குணங்களிலிருந்து காப்பாற்றிவிடும்.
தீய குணங்கள் எவ்வாறு எம் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பதை இங்கு பார்ப்போம். இப்பகுதியில் ஆறு எண்ணங்களைப் பதிவு செய்கிறேன்.
குவியல் 7 எண்ணம் 1
பொறாமை

ஒருவரிடம் இருக்கக்கூடாத குணங்களில் ஒன்று பொறாமை. மற்றவரின் வளர்ச்சி, திறமை, முயற்சி, உழைப்பு, வெற்றி, செல்வம், அழகு என்பனவற்றைப் பார்த்து ஏற்படுவது பொறாமை. நாமும் அவரைப் போல இருக்கவேண்டும் அல்லது அவரை விட நன்றாக இருக்கவேண்டும், முன்னேறவேண்டும் என்று நல்லவிதமாக முயற்சி செய்வது, பாடுபடுவது தவறில்லை. ஆனால் அவரின் செயல்கள் யாவும் பலனளிக்கக்கூடாது, அவரிடம் இருப்பவை யாவும் அழிந்துவிடவேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. அது மிகவும் தவறான செயலாகும். அந்த நினைவே எமது வளர்ச்சியை தடுத்துவிடும். தகாத செயல்களை செய்யத் தூண்டிவிடும். இறுதியில் எம்மை அழித்தும்விடலாம்.
உறவினர்கள், நண்பர்கள், கூடப் படித்தவர்கள், ஒன்றாக வேலை செய்கிறவர்கள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என எம்மைச் சூழ உள்ளவர்களில் மேல்நிலையிலுள்ள ஒரிருவருடன் ஒப்பிட்டுப்பார்ப்பதினால் பொறாமை எனும் நோய் ஏற்படுகிறது. அவர்களிடம் இருக்கும் வசதிகள் எம்மிடம் இல்லையே எனப் பொறாமைப்பட்டுகொண்டு காலத்தைக் கடத்துவதினால் எமது முயற்சிகளும் முன்னேற்றங்களும் தடைப்பட்டு நின்றுவிடும். சூழ்நிலைகளும் வாய்ப்புகளும் அவரவர்களின் பாதையை தேர்ந்தெடுக்கின்றன. மற்றவர் வெற்றியை நோக்கிச் செல்வதைப் பார்த்து அதே பாதையை நாமும் தேர்ந்தெடுப்போமேயானால் பல தடைகளை சந்தித்து பின்தங்கி நிற்க வேண்டிய நிலை சிலசமயங்களில் ஏற்படலாம். கீழ்நிலையில் உள்ளவர்களைப் பார்த்து எமது நிலையில் திருப்தியடைந்து முன்னேறுவதற்கு முயற்சி செய்வது சாலச் சிறந்தது.
பொறாமை மற்றவர்களுக்கு கேடு நினைக்கவைக்கிறது. கேடு நினைப்பவன் கெட்டழிந்து போய்விடுவான் என்பதை “கெடுவான் கேடு நினைப்பான்” என எம்மை வழிநடத்தும் முதுமொழிகளில் ஒன்று கூறுகிறது.
பொறாமை எத்தகையது என திருவள்ளுவர் பின்வரும் குறளில் அருளியுள்ளார்.
குறள் – அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
சாலமன் பாப்பையா அவர்களின் விளக்கவுரை – பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.
வள்ளுவப் பெருந்தகை, பிரிதொரு குறளில் பின்வருமாறு கூறியுள்ளார்.
குறள் – கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் விளக்கவுரை – உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்து பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.
பாடுபட்டு கடின உழைப்புடன் முன்னேறிச் சென்று உலகப்புகழ் பெற்ற மனிதர்களுள் ஒருவரை முன்மாதிரியாகக் கொண்டு (Role model என்று ஆங்கிலத்தில் சொல்வர்), எமக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை சூழ்நிலைக்கேற்றவாறு சரிவரப் பயன்படுத்தி கடின உழைப்புடன் விடாமுயற்சி செய்வோமேயானால் எம்மால் முடியாதது என்று எதுவுமில்லை.
அன்பெனும் கவசம் அணிந்து
அறிவெனும் ஆயுதம் ஏந்தி
பொறாமை எனும்கொடிய மிருகத்தை
அழித்தொழிப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம்.
உதாரணக்கதை
“தர்மினியை பார் லதா. அவளது பென்சில், பேனா, வண்ணப் பென்சில்கள், அவற்றை வைக்கும் பெட்டி எல்லாமே எவ்வளவு அழகாக இருக்கிறது. அவளது அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால் அவளுக்கு இவற்றை அங்கிருந்து அனுப்புகிறார். எனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறானே. அவன் இங்கிருந்து அசைய மாட்டான்.”
கனிதாவின் வார்த்தைகளில் பொறாமை அதிகளவில் கலந்திருந்தது அப்படியே தெரிந்தது.
கனிதா, லதா, தர்மினி மூவரும் ஒரே பாடசாலையில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள்.
“ஏன் கனி, உன்னிடம் இருப்பவையும் நன்றாகத்தானே இருக்கின்றன.”
“இல்லை லதா, தர்மினியினது வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவை. வித்தியாசமாக மிக மிக அழகாக இருக்கின்றன. அதுமட்டுமல்ல மேலதிக வகுப்புகளுக்கு அவள் அணிகின்ற உடைகளைப் பார். கைக்கடிகாரம் எல்லாம் கண்ணைப் பறிக்கின்றன.”
“சரி, அதற்காக ஏன் உன் அண்ணனைத் திட்டுகின்றாய்?”
“அவனுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் வந்தும் அதை ஏற்காமல் இங்கேயே வேலை செய்கிறான். அண்ணன் வெளிநாடு சென்றிருந்தால் எனக்கும் இப்படியெல்லாம் பொருட்கள் கிடைத்திருக்கும்.”
“முதலில் தர்மினியைப் பார்த்து பொறாமைப்படுவதை நிறுத்திவிடு கனி. அது உனது படிப்பைத்தான் பாதிக்கும். உனக்கு புரியவில்லையா? நீ என்ன சிறு பிள்ளையா?”
“என்னால் முடியவில்லை லதா. அவளை பார்க்கும்போதெல்லாம் அவளிடம் இருப்பவைதான் கண்முன்னே தெரிகிறது.”
“என்னவோ என் கண்முன்னே உன் படிப்பு பின்னடைவதுதான் தெரிகிறது. பார்த்து நடந்துகொள்.”
எந்நேரமும் பொறாமையால் உழன்றுகொண்டிருந்தவளுக்கு பாடங்களை ஒழுங்காகப் கவனிக்கவும் படிக்கவும் முடியவில்லை.
இரு கிழமைகளில் தவணைப் பரீடசைக்குரிய முன்னோடிப் பரீட்சை நடைபெற்றது. அதில் கனிதா எடுத்த புள்ளிகள் தலைகீழாக மாறியிருந்தன. அதிர்ச்சியில் உறைந்தவள் உடனடியாக விழித்துக்கொண்டாள். லதா கூறியது எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்தாள். எல்லா வசதிகள் இருந்தும் தர்மினியைப் பார்த்து பொறாமையில் உழன்றுகொண்டிருந்ததில் படிப்பைக் கவனிக்கத் தவறிவிட்டதை எண்ணி வெட்கப்பட்டாள். படுகுழியில் விழ இருந்தவளை முன்னோடிப் பரீட்சை காப்பாற்றி விட்டது. காலம் கடந்துவிடவில்லை. தவணைப் பரீட்சை நடைபெற இன்னும் ஒரு கிழமை இருக்கிறது. அதற்குள் தயாராகி அதிக புள்ளிகள் எடுக்கவேண்டும் என முயற்சியை உடனேயே தொடங்கிவிட்டாள்.
மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பது வீண் மன உளைச்சலையும் அழிவையுமே தரும் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டவள் இனி தனது வாழ்க்கையில் பொறாமைக்கு இடமளிக்கக்கூடாது என உறுதி பூண்டாள்.
*****