மக்களுக்கு நல்ல தகவல்களையும் போதனைகளையும் எடுத்துச் செல்லும் ஊடகங்களுள் சினிமாவும் ஒன்று. ஆனால் இன்று சினிமாவைப் பார்த்து தடம் மாறிச் செல்கிறார்கள் இளைய தலைமுறையினர்.
சினிமாவிலும் நல்ல செய்தியைத்தான் சொல்ல வருகிறார்கள். அதனுடன் பின்னிப்பிணைந்திருக்கும் ஆபாசக் காட்சிகள் மனதை தடுமாறச் செய்கின்றன. அன்றைய சினிமாவில் காதல் காட்சிகளை நாசூக்காக காட்டினார்கள். இன்றோ வெட்டவெளிச்சம்போட்டு காட்டுகிறார்கள். இது நம் பண்பாட்டிற்கு பங்கம் விளைவிக்கிறது. முழுக்க முழுக்க வியாபார நோக்குடன் சினிமா எடுப்பவர்கள், இளைய தலைமுறையினர் அவ்வழியே செல்ல முற்படுவது, கவர்ச்சிகர உடை அணிவது, ஆண் பெண் வேறுபாடின்றி/கூச்சமின்றி பழகுவது என தவறான பாதையில் செல்வதை உணர்கிறார்களில்லை. கலாச்சாரம் தலைகீழாக மாறுகிறது.
அன்று, எந்தவித சந்தேகமும் இல்லாமல் குடும்பத்துடன் சென்று நம்பிக்கையுடன் சினிமா பார்க்கலாம். நல்ல போழுதுபோக்காகவும் நல்ல கருத்துக்களை சொல்பவையாகவும் அன்றைய சினிமா இருந்தது. ஆனால் இன்று அப்படியான சினிமாக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அநேகமானவை ஆபாசமான காட்சிகள் கொண்டுள்ளன. இவை இளவயதினரின் மனதில் மட்டுமல்ல பெரியவர்கள் மனதிலும் கள்ளத்தை விதைக்கிறது.
கொலை, கொள்ளை, கடத்தல், பலாத்காரம் என யாவுமே எப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அறியத்தந்து விழிப்புணர்வு தருவதுடன், அதை செய்பவர்களை கண்டுபிடிக்கும் வழிகளையும் வித விதமாக காட்டி பிழை செய்பவனுக்கு ஆதாரமில்லாமல் தப்புவதற்கும் வழி சொல்கிறார்கள். அப்படியான குற்றங்கள் செய்வதற்கு யுக்திகள் சொல்வதும் வழிகாட்டுவதும் சினிமாதான். அதிலிருந்து தப்புவதற்கு வழி சொல்வதும் சினிமாதான்.
இன்றைய காலகட்டத்தில், கலாச்சார சீரழிவு ஏற்படுவதற்கான காரணிகளுள் இன்றைய சினிமாவும் (ஒரு சில சினிமாக்களைத் தவிர) ஒன்று என்பது எனது கருத்து.