“இயற்கையின்றி உயிரில்லை
பச்சையின்றி இரத்தமில்லை
பூமித்தாய்க்கு பச்சை சாத்தி
பிரபஞ்சத்தின் உயிர் காப்போம்”
இயற்கையின் துணையோடு உயிர்கள் வாழ்கின்றன. அந்த இயற்கையை மனிதன் ஆராய்ச்சி, நாகரீகம் என்றும் பேராசையினாலும் சோம்பேறித்தனத்தினாலும் மாசடையச் செய்கிறான். எம்மோடு இணைந்திருக்கும் வாழ்வின் ஆதரங்களான நீர், நிலம், ஆகாயம், காற்று எல்லாவற்றையுமே சீற்றத்திற்கு உள்ளாக்குகிறான்.
சுற்றுச் சூழலில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்க எனது கருத்துக்கள்…
தனி மனிதனின் செயற்பாடுகள் –
– புகை பிடிப்பவராயின் சிறிது சிறிதாக குறைத்து நிறுத்துதல்.
– வியாபாரம் செய்பவராயின் சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்யாதிருத்தல்.
– நீரை வீணாக்காது அளவோடு பாவித்தல்.
– பிளாஸ்டிக் பொருட்கள் பாவனையை இயன்றளவு தவிர்த்தல்.
– குப்பைகளை மக்குபவை மக்காதவை எனப் பிரித்து வெளியேற்றுதல்.
– வானொலி, தொலைக்காட்சி பாவிக்கும்போது சத்தத்தை அளவோடு வைத்தல்.
– அருகே இடங்களுக்கு பயணம் செய்யும்போது தூரத்தை பொறுத்து சைக்கிள் பாவித்தல் அல்லது நடந்து செல்லல்.
குடும்பத்தின் செயற்பாடுகள் –
– வீட்டில் நில வசதிக்கேற்ப மரம், செடி, கொடிகள் வளர்த்தல்.
– உணவுத்தேவைக்கான கீரை வகைகள், மிளகாய், கத்தரி, வேண்டி போன்றவற்றை மண் சாடியிலும் வளர்க்கலாம்.
– ஆளுக்கொரு வாகனம் வைத்திருக்காமல் சேர்ந்து பயணம்செய்யும் வகையில் திட்டமிட்டு அளவான வாகனம் வைத்திருத்தல்.
– கழிவு நீரை தேங்கியிருக்க விடாது முறையாக வெளியேற்றுதல்.
– மாதமொருமுறை வீட்டை தூசுதட்டி குப்பைகளை அகற்றுதல்.
– வீட்டிலுள்ள வயதானவர்களையும் நோயாளிகளையும் வைத்தியரின் ஆலோசனைப்படி பராமரித்தல்.
– செல்லப் பிராணிகளை உரிய முறையில் பராமரித்தல்.
– மின்சாதன பொருட்கள் பாவிப்பதை இயன்றளவு குறைத்தல்.
சமூகத்தின் செயற்பாடுகள் –
– இலவச மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்த்தலை ஊக்குவித்தல்.
– பராமரிப்பில்லாமல் தெருக்களில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தல்.
– மாதமொருமுறை சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சமூக நலன், சுகாதாரம் சம்பந்தமான அறிவுரைகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தல்.
– தொற்றுநோய் தடுப்புகளுக்கான நடவடிக்கைகளை காலத்திற்கு காலம் மேற்கொள்ளல்.
– குழுக்களை அமைத்து மாதம் ஒருமுறை சிரமதானம் செய்வதன்மூலம் பாதைகள், நீர் தேங்கி நிற்கும் இடங்களை சீரமைத்தல்.
– மருத்துவ வசதிகளை அவதானித்தல்.
– சிறுவர் பூங்கா அமைத்து பராமரித்தல்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் –
– சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான போட்டிகளை பாடசாலைகளுக்கிடையே நடாத்தி பரிசு வழங்கி ஊக்குவித்தல்.
– சூழலை மாசுபடுத்தும் (புகை கக்கும், அதிக சத்தம் போடும்…) வாகனங்களை பிடித்து உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடல்.
– குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கேற்ப வாகன வகைகளுக்கும் எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடு விதித்தல்.
– அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது சூழல் மாசடைவதை தவிர்க்க உரிய நேரங்களை தீர்மானித்தல், உரிய முறைகளை கையாளுதல்.
– தொழிற்சாலைகள் கட்ட அனுமதிக்கும்போது சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவதானித்தல். குழுக்களை அமைத்து அடிக்கடி சென்று கண்காணித்தல்.
– இயற்கை உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் பாவிப்பதற்கு விலை குறைத்து ஊக்குவித்தல்.
– போர் நடவடிக்கைகளை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் காணல்.