ஜாதகம் என்பது உண்மையே என்று எனது கருத்துக்களைத் தருகிறேன்.
பூமியில் பிறந்த சகல ஜீவராசிகளின் கதை, எழுதி முடித்த கதை என்று சொல்வார்கள். அதாவது பிறக்கும்போதே எங்களுக்கு எப்பெப்போ என்னென்ன சந்தோஷங்கள், துன்பங்கள் நடக்கும், முடிவு எப்போ என்பதெல்லாம் குறிக்கப்பட்டுவிட்டது. இதைத்தான் துன்பம் நேரும் சமயங்களில், தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும், என்று சொல்வதைக் கேட்கிறோம். நாமும் சொல்கிறோம். நாம் பிறக்கும் கணத்தில் நவக்கிரகங்களின் நிலை எமது வாழ்க்கையை முன்கூட்டியே எடுத்துக்காட்டுகிறது. அதை துல்லியமாகக் கணிப்பதன் மூலம் உண்மையை உணரலாம். ஒரு பொருளை உற்பத்தி செய்யும்போது அப்பொருளுக்கு விபரக்குறிப்பு தயாரிப்பதுபோல் எமது விபரக்குறிப்பு ஜாதகம்.
வியாழமாற்றம், சனிமாற்றம், ராகு கேது என கிரகங்களின் நிலைகள் எமது ஜாதகத்திற்கு ஏற்றவாறு எமக்கு பலன்களைத் தருகிறது. ஒவ்வொரு ராசியிலும் பிறந்தவர்களுக்கு அக்காலங்களில் என்னென்ன பலன் என்று சொல்வது பொதுப்பலனே. இவற்றில் சிலது பொருந்தும் பலது பொருந்தாது. அவரவர் ஜாதகத்தின்படி இந்த மாற்றங்களைக் கணித்துப் பார்த்தே உண்மையை அறியலாம். அநேகமானோர் பொதுப் பலனைப் பார்த்து ஜாதகம் பொய் என்று சொல்வார்கள். அது உண்மையன்று.
குறிப்பிட்ட காலங்களில் துன்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. பலன் பார்த்து கஷ்டங்களுக்குப் பரிகாரம் செய்யும்போது அதன் தாக்கம்/உக்கிரம் குறைகிறது. அதன் அர்த்தம் என்னவென்றால் அந்தக் கஷ்டம் எங்களுக்கு ஏற்பட்டே தீரும். ஆனால் அதைத் தாங்கும் மனவலிமை பரிகாரங்கள் மூலம் கிடைக்கிறது. பரிகாரம் செய்துவிட்டோம், இனிக் கஷ்டம் வரமாட்டாது என்ற பலமான நம்பிக்கை அந்த மனவலிமையை, கஷ்டங்களைக் கடக்கும் துணிவை எங்களை அறியாமலே எங்களுக்குத் தருகிறது. இறை நம்பிக்கையை அதிகரிக்கின்றது. தீயது செய்வதைத் தடுக்கிறது.
எமக்குக் துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்படும்போது தான் ஜாதகத்தைக் காட்டி பலன் பார்க்கிறோம். வியாழசுகமில்லை என்றால் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கோயிலுக்குச் சென்று தட்சணாமூர்த்திக்கு மஞ்சள் பூ, கடலை மாலை அணிவித்து நெய்விளக்கேற்றி வழிபட்டு அவரின் உக்கிரத்தைத் தணிக்கிறோம். சனிமாற்றம் கூடாதென்றால் சனி பகவானுக்கு எள் எண்ணெய் விளக்கேற்றி வழிபடுகிறோம். உதாரணமாக, எமக்கு பணவிரயம் என்று பலன் இருந்தால், இந்த பரிகாரம் மூலம் அந்தப் பணம் எமது உடம்பைத் தாக்கும் நோய்க்குச் செலவழிப்பதாக இல்லாமல் ஏதாவது பொருள் நஷ்டம் ஏற்படுவதாக இருக்கும்.
பரிகாரங்கள் செய்வதால் எங்கள் துன்பங்கள் நீங்கும் என்ற முழுதான நம்பிக்கையுடன் செய்யும்போதே பலன் கிடைக்கிறது. நம்பிக்கை இல்லாமல் எந்தக் காரியத்தைச் செய்தாலும் பலன் கிடைக்காது. நம்பிக்கைதான் துன்பங்களைக் கடப்பதற்கு மனவலிமையைத் தரும் மருந்தாகும்.
எந்தக் கஷ்டங்களையும் கடந்துவர என்னால் முடியும் என்ற பலமான நம்பிக்கை, துணிவு, நேர்மை இவற்றுடன் இறை பக்தியுடனும் எவன் ஒருவன் வாழ்கிறானோ அவன் பலன்/பரிகாரம் என்று அலையவேண்டியதில்லை.