“ஓம் சரவணபவ, முருகா! என்னைப் பெண் பார்க்க வருபவர் என் பெற்றோரை மதித்து நடக்க வேண்டும். என் ஒரே தங்கையை தன் கூடப்பிறந்த தங்கையாக நினைத்து பண்போடு பழக வேண்டும். அதுவே எனக்குப் போதும். இப்படியான குணமுள்ளவர் என்றால் இவரோடு என் திருமணம் நிச்சயமாகட்டும். வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை. முருகா, கருணை காட்டு. உன் சந்நிதிக்குத்தான் வருகிறோம். நல்வழி காட்டு கந்தா! ஓம் சரவணபவ”
தனக்கு இந்தத் திருமணம் மகிழ்ச்சியைத் தரவேண்டும் என்று கேட்காமல், நடக்க இருக்கும் விளைவுகளை அறியாமல், மனமுருக கண்ணீர் மல்க பூஜை அறையில் வணங்கி நிற்கிறாள் உமா.
“சந்திரா! எல்லாம் ரெடியா? கிளம்புவோமா?” என்று மனைவியை அழைத்தபடி அறையைவிட்டு வெளியே வருகிறார் கனிஷ்ட பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியராக பதவி வகிக்கும் மணிவண்ணன்.
அர்ச்சனைத் தட்டுடன் வந்த சந்திரா, “உமா! உஷா! வாங்க சீக்கிரம். நேரமாகிறது.” என்று குரல் கொடுக்க, பட்டுப்புடவையில் சாந்த சொரூபிணியாக உமாவும், பாவாடை தாவணியில் அழகு சுந்தரியாக உஷாவும் வர, பெற்றோரின் முகத்தில் திருப்தி நிலவ, நால்வரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு அருகிலுள்ள முருகன் கோவிலுக்குக் கிளம்பிவிட்டார்கள்.
இன்று உமாவை கோவிலில் பெண் பார்க்க வருகிறார்கள். இரு பகுதியினருக்கும் பிடித்துவிட்டால் பின்பு சம்பிரதாயப்படி வீட்டில் எல்லாம் செய்யலாம் என்பது மணிவண்ணனின் விருப்பம்.
இவர்கள் சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பம். வகிக்கும் பதவிக்கேற்ப ஒழுக்கமும் பண்பும் மிக்கவர் மணிவண்ணன்.
கணவனின் வருமானத்திற்குள் குடும்பம் நடத்தி அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தையல் செய்து கொடுத்து, வரும் மேலதிக வருமானத்தில் இரு பெண்களுக்கும் நகை சேர்த்து வைத்து பொறுப்புடன் குடும்பத்தை கவனிக்கும் அன்பு மனைவி சந்திரா.
இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள். கல்லூரிப் படிப்பை முடித்து வேலை வேட்டையில் இறங்கி போராடிக்கொண்டிருக்கும் அமைதியே உருவான மூத்த மகள் உமா. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் இரண்டாவது மகள் வாயாடி உஷா. இருவரும் பேரழகிகள் இல்லாவிட்டாலும் வசீகரமான அழகிகள்தான்.
மணிவண்ணனின் சொந்த அத்தை பெண்தான் சந்திரா. அதனாலேயே தங்கள் பெண்களுக்கு சொந்தத்தில் மணமுடித்துக் கொடுக்க விருப்பமில்லை. இருவருக்கும் வெளியில்தான் மாப்பிள்ளை பார்க்கவேண்டும் என முடிவெடுத் திருந்தனர்.
இதோ, இப்போது தானாகவே ஒரு வரன் வந்திருக்கிறது. பையனது குடும்பம் உழைத்து முன்னேறி மேல் மட்டத்திற்கு வந்திருப்பவர்கள். தரகர் சொன்னதைவிட மணிவண்ணனும் விசாரித்து அறிந்துகொண்டதில் திருப்தியடைந்து பெண் பார்க்கும் படலம் வரை வந்துவிட்டது.
— * — * —
“அம்மா…” என்று ராகம் பாடியபடி கடைசி தடவையாக முயற்சி செய்து பார்ப்போம் என கதிர் என்கின்ற கதிரவன் தாயை நாடி வந்தான்.
கதிரின் எண்ணத்தை அறிந்தவள், “என்னடா இழுவை. ரெடியாகிவிட்டாயா? அவர்களெல்லாம் கோவிலுக்கு வந்துவிட்டார்களாம். அப்பா கோவிலுக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கிறார். அர்ச்சனைத் தட்டு எடுத்துக்கொண்டு வருகிறேன். கிளம்பு கிளம்பு.” என மகனை அவசரப்படுத்தினார் சிவகாமி.
“வானதிக்கு திருமணம் முடித்து ஒரு வருடத்தில் ஆரணிக்கு திருமணம் நடந்து இப்போதுதான் ஒரு வருடம் முடிந்திருக்கிறது. அதற்குள் எனக்கென்னம்மா அவசரம். ஒரு இரண்டு வருடம் போகட்டுமே.” கெஞ்சினான் கதிர்.
“குறைந்தது நூறு தடவையாவது இதைக் கேட்டுவிட்டேன். இப்பவும் அதே பதில்தான். இந்த வீட்டை ஆள ஒரு மகாலட்சுமி வரவேண்டும். அதுவும் இப்பவே. அவ்வளவுதான். கிளம்பு கிளம்பு.”
“தங்கைகளின் திருமணம் முடிந்து விட்டது, இனி பொறுப்பில்லை என யாரையாவது இழுத்துக்கொண்டு வந்துவிடுவேன் என்ற பயமா அம்மா? நான் என்ன அப்படிப்பட்டவனா? என்னில் நம்பிக்கை இல்லையா? நீங்கள் விரும்பும் பெண்ணை மறுக்காமல் ஏற்றுக்கொள்வேன் என உங்களுக்குத் தெரியும்தானே. ஏன் இந்த அவசரம்?
தொழிலில் நான் கொஞ்சம் காலூன்ற வேண்டாமா? ஒரு இரண்டு வருடங்கள் சென்றுவிட்டால் கவலை இல்லை. நல்ல நிலைக்கு வர நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் அம்மா.”
“உன் தங்கைகள் இருவரையும் வெளியூரில் மணமுடித்துக் கொடுக்கும் போது நான் எவ்வளவு புலம்பினேன். ஒருத்தியையாவது உள்ளூரில் கட்டிக்கொடுங்கள். போக வர ஆறுதலாக இருக்கும் என்று எத்தனை தடவை கூறினேன். கேட்டீர்களா? இப்போ இங்கே நீயும் நேரம் காலம் பாராது திரிகிறாய். உன் அப்பாவும் மீட்டிங், செமினார் என்று ஓடுகிறார். நான் தனிமையில் இருந்து கஷ்டப்படுவது உங்களுக்கு புரியவில்லையா?
இதோ பார் கதிர், இப்படியே நீ சொல்லும் இரண்டு வருடங்கள் போய்விட்டால் மனநிலை பாதித்திருக்கும் என்னைக் கவனித்துக்கொள்ளத்தான் ஆள் தேடவேண்டியிருக்கும்.
கதிர், ஒன்றை நினைவில் வைத்துக்கொள். உன்னை ஒருபோதும் பாழுங்கிணத்தில் தள்ளிவிடமாட்டோம். நன்றாக ஆராய்ந்து, விசாரித்துப் பார்த்துத்தான் முடிவு செய்வோம். அப்படிப் பார்த்ததில் இந்தக் குடும்பம் மிகவும் அருமையானது. எளிமையான பண்பானவர்கள். நாங்கள் பணத்தைப் பார்க்கவில்லை. குணத்தைத்தான் பார்க்கிறோம்.
நீ தானே முன்பே கூறிவிட்டாயே, இவள் தான் உனது வருங்கால மனைவி, கட்டு தாலியை என்று யாரைக் காட்டிச் சொல்கிறீர்களோ, கண்களை மூடிக்கொண்டு அவளுக்கு தாலி கட்டிவிடுவேன் என்று. பிறகேன் பதுங்குகிறாய்.
இன்னுமொன்றை நினைவில் வைத்துக்கொண்டு கிளம்பு. நாங்கள் பெண்ணைப் பார்த்துவிட்டோம். இப்போது போவது பெண், மாப்பிள்ளையைப் பார்ப்பதற்கு.”
எனக் கூறியபடி வாசலை நோக்கி விரைந்தார் சிவகாமி.
அடக் கடவுளே! ஒரு பேச்சுக்குச் சொன்னால் நான் பெண்ணை பார்க்கவேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களே, என மனதிற்குள் புலம்பியபடி,
“அப்போ பெண் ஒத்துக்கொண்டால்தான் திருமணம். சரிதானே.” எனக் கூறியவன் சிறு நம்பிக்கையுடன் தாயைப் பின் தொடர்ந்தான்.
“பெற்றோரின் சொல்லுக்கு மறுப்பு சொல்லாத அடக்கமான பெண். நான்தான் கூறியிருக்கிறேன், நேரில் அவளது சம்மதத்தை என் காதாலே கேட்கவேண்டுமென்று. புரிந்ததா?”
கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் சுக்குநூறாக, பலியாடுபோல தாயுடன் கிளம்பிவிட்டான் கதிரவன்.
— * — * —
கதிர் காரை நிறுத்திவிட்டு வருவதற்குள் சுவாமி தரிசனம் முடித்து பெண் வீட்டாரை நாடிச் சென்றனர் சிவகாமியும் பரந்தாமனும்.
இரு பகுதியினரும் பரஸ்பரம் நலம் விசாரித்தபின்,
“என்னம்மா, பையனைப் பார்க்காமலே சம்மதம் சொல்லிவிட்டாயே. புகைப்படம் கூட பார்க்கவில்லை. பையன் அழகிலும் நிறத்திலும் கொஞ்சம் மட்டம். பரவாயில்லையா” என உமாவை நோக்கி அழகாக புன்னகைத்தார் சிவகாமி.
உமாவும் தயங்காது, “தோற்றத்தில் என்ன இருக்கிறது. நல்ல குணமும் பொறுப்பும் இருந்தாலே போதும். எனது பெற்றோர் எப்போதுமே எமது நலன் கருதியே வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவும் எடுக்கிறார்கள். அவர்களின் முடிவு எப்போதுமே பிழைக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என சிறு புன்னகையுடன் மெதுவாக பதில் சொன்னாள்.
“நான் அப்படியெல்லாம் இல்லை. நான் அக்காவுக்கு நேர் எதிர். திருமண விடயத்தில் நான் பார்த்துத்தான் முடிவெடுப்பேன். எனக்குப் பிடித்தால்தான் சம்மதம் சொல்வேன். வீட்டில் எல்லோருக்கும் இது தெரியும்.” முந்திரிக்கொட்டை போல் கேட்காமலே படபடத்தாள் உஷா. எல்லோருமே சிரித்துவிட்டார்கள்.
தூரத்தில் வந்துகொண்டிருந்த கதிரைப் பார்த்த சிவகாமி உமாவிடம்,
“அருகில் வந்தால் பார்ப்பதற்கு வெட்கப்படுவாய். அதோ வருகிறான், அவன் தான் உனக்கு மணமுடிக்க பார்த்திருக்கும் எமது மகன் கதிர் – கதிரவன். இப்போதே நன்றாகப் பார்த்துவிடு.” என்றார்.
கதிர் என்ற வார்த்தையை கேட்டதும் துளி சந்தேகம் துளிர்விட பார்த்தவள் திகைத்து, கால்கள் வேரோட சிலையானாள். இதயம் தறிகெட்டு ஓடத் தொடங்கியது. கல்லூரியில் முன்பு நடந்த நிகழ்வொன்று கண் முன்னே தோன்றி தலைவிரித்தாடியது. அன்று பேசிய வீர வசனங்கள் எங்கோ ஓடி மறைந்தன. திருமணம் நடப்பது நிச்சயம் என்ற பெற்றோரின் நம்பிக்கை தவிடுபொடியாகப் போவதை நினைத்து பரிதாபம் தோன்றியது.
தலை, தரை நோக்கி கவிழ என்ன நடக்கப்போகிறதோ என்ற பதட்டத்துடன் நின்றாள் உமா.
தூரத்தில் வரும் போதே பார்த்துவிட்ட கதிருக்கு ஆச்சரியம் தாழவில்லை.
அட நம்ம வீர மங்கை.
திகைப்புடன் ஒரு பரவசமும் ஓடி மறைந்தது.
கல்லூரியில் நடந்த நிகழ்வு கண் முன்னே தோன்றியது.
இறுதி வருடத்தில் இருந்த கதிரும் நண்பர்களும் முதல் வருட மாணவியரை சிறிது சீண்டிப் பார்ப்போமே என்ற நகைச்சுவை உணர்வுடன், இரு மாணவிகளுடன் உரையாடி அவர்களை திக்குமுக்காட வைத்துக்கொண்டிருந்தபோது, ஏதோ கதிர் குழுவினர் மாணவியரை சித்திரவதை செய்வதாகவும், அவர்களைக் காப்பாற்ற வந்ததாகவும் தோழியருடன் வந்த இரண்டாம் வருட மாணவி உமா கொட்டிய வார்த்தைகளை எப்படி மறக்க முடியும்.
“புது மாணவிகள் மிகவும் பயத்துடன் நடுங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தும் அவர்கள் அழும்வரை விடமாட்டீர்களா? அவ்வளவு கொடூரமானவர்களா நீங்கள்? பெண்களோடு எப்படிக் கதைக்க வேண்டும், பழக வேண்டும் என்று வீட்டில் ஒருவரும் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லையா? பெண்களை அழவைத்துப் பார்ப்பதில் அப்படி என்ன சந்தோசம் உங்களுக்கு.” என படபடவென பேசிவிட்டாள்.
“அட பார்டா, ஜான்சி ராணி வந்திட்டாங்க. உன்னை பார்த்தாலே அழுதிடுவாய் போல் இருக்கிறது. நீயெல்லாம் எங்களுக்கு பாடம் எடுக்க வந்துவிட்டாயா? முதலில் உன்னுடைய பாடங்களை போய் ஒழுங்காகப் படித்து, சமையலைப் பழகி ஒரு நல்ல இடத்தில் கரைசேருகிற வழியைப்பார். இப்படி வீர வசனங்கள் பேசிக்கொண்டிருந்தால் ஒருத்தன் கூட உன்னைத் திரும்பிப் பார்க்க மாட்டான். கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக இருக்கப் பழகு.” என்று கதிர் சொல்ல,
“பார்த்தால் நல்ல இடத்து பையன் மாதிரி இருக்கிறாய். ஒரு பெண்ணைப் பார்த்து இழிவாகப் பேசுகிறாய். உன் குணத்தை அறிந்தால் கண் தெரியாத பெண் கூட உன்னை திருமணம் செய்ய சம்மதிக்க மாட்டாள். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று சொல்வார்கள். வாங்கடி போகலாம்.” என்று கூறியபடி தோழிகளுடன் விலகிச் சென்றுவிட்டாள் உமா.
அன்று ஏனோ கதிருக்கு கோபமே வரவில்லை. உமாவைப் பார்த்த நொடியே அவன் இதயத்தில் ஏதோ ஒரு புதுவித உணர்வு தோன்றி மறைந்தது. அதனாலோ என்னவோ அவனால் அவள் மீது கோபம் கொள்ள முடியவில்லை. அந்த சம்பவத்தை அப்படியே மறந்தும் போனான். அதற்குப் பின் இன்றுதான் இருவரும் ஒருவரை ஒருவர் காண்கிறார்கள்.
இன்று அவளைப் பார்த்ததும் அவனை அறியாமலே நிம்மதிப் பெருமூச்சொன்று வந்தது. பெரியதொரு பிரச்சனைக்கு தீர்வொன்று கிடைத்தமாதிரி உணர்ந்தான்.
இன்றைக்கு இவளை விடுவதில்லை மட்டம் தட்டி பேசிவிடவேண்டியதுதான், என்று நினைத்தவன் எக்காரணம் கொண்டும் இந்தத் திருமணம் தடைப்பட்டுவிடக் கூடாது என்றும் மனதார நினைத்தான்.
எல்லோரையும் நெருங்கி வந்தவன் சினேகமாகப் புன்னகைத்தான்.
உமாவோ தலை நிமிரவே இல்லை.
உஷாவைப் பார்த்து, “ஹை” என்றவன், “நீங்கள்தான் உமாவோ?” என்று வேண்டுமென்றே கேட்டான்.
“ஹலோ! என்னைப் பார்த்தால் கல்யாணத்திற்கு காத்திருக்கும் பெண் போல தெரிகிறேனா? எங்காவது பெண் பார்க்கும் வைபவத்திற்கு மணப்பெண் பாவாடை தாவணியில் வருவாளா? நான் சின்னப் பெண் உஷா, படித்துக்கொண்டிருக்கின்றேன்.
இதோ, பக்கத்தில் நின்று தரையில் எதையோ தேடிக் கொண்டிருக்கிறாளே, அவள் தான் நீங்கள் பார்க்க வந்திருக்கும் மணப்பெண், என் அக்கா, உமா.” என்று சிறு பொய்க் கோபத்துடன் கூறி முடித்தாள்.
“என்னது… நான் பெண் பார்க்க வந்தேனா? அப்படி இல்லையே…” என்றிழுத்தவன் “பையனைப் பார்க்கத்தான் பெண் வருவதாக அம்மா சொன்னார்களே…” என்றபடி தாயைப் பார்த்தான் கதிர்.
உடனே சிவகாமியும் சிரித்தபடி, “ஆமாம் அப்படித்தான். ஏனென்றால் நான் யாரைப் பார்த்து தாலியைக் கட்டச் சொன்னாலும் உடனே கட்டிவிடுவேன், அதனால் இந்த பெண் பார்க்கும் படலம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். அதனால்தான், பெண் உன்னைப் பார்த்து சம்மதம் சொல்ல வேண்டும் என்று அழைத்து வந்துவிட்டேன்.” என்றார்.
“அது சரி, வந்ததிலிருந்து பார்க்கிறேன் ஏன் உன் அக்காவின் தலை கவிழ்ந்திருக்கிறது? கண்கள் தெரியாதோ?” என்று உஷாவுடன் உரையாடலைத் தொடர்ந்து, உமாவின் வயிற்றில் புளியைக் கரைத்தான் கதிர்.
அன்று பேசிய வசனங்கள் எல்லாம் கண்முன்னே தோன்றி நர்த்தனம் ஆடின. அன்று என் நாக்கில் சனிதான் வந்தமர்ந்துவிட்டான்போலும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட்டு பழக்கமில்லை. அமைதியையே விரும்பி நாடுவேனே. அப்படி இருக்கையில் அன்று சினத்தின் வசம் சிக்கியது எதனால், என்று நினைத்து நினைத்து மருகிக்கொண்டிருந்தாள்.
“என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள். என் அக்காவுக்கு இரு கண்களும் மிகவும் நன்றாகத் தெரியும். பெண்கள் வெட்கப்படும்போது இப்படித்தான் நிற்பார்கள்.”
“ஓஹோ அப்படியா… சரி சரி. அந்த இரண்டு கண்களாலும் என்னை நன்றாகப் பார்த்து… என்னைப் பிடித்திருக்கிறதா, அதாவது என்னைத் திருமணம் செய்யச் சம்மதமா இல்லையா என்று சொல்லச் சொல். நான் விரைவாக செல்ல வேண்டும். ஒரு மீட்டிங் இருக்கிறது.”
இருவரின் வார்த்தையாடல்களையும் குடும்பத்தினர் பார்த்து ரசிக்க, கொல்லுறானே… என்று உமா புழுங்கிக்கொண்டிருந்தாள்.
“அட, இப்பதான் எனக்குப் புரிகிறது, உன் அக்கா புத்திசாலிதான். இப்படி தலையை கவிழ்ந்திருந்தால்தான் நிமிரும்போது காலிலிருந்து தலைவரை பார்த்துவிடலாம் என்று நினைத்திருப்பாள்.”
அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை. நீங்கள் தூரத்தில் வரும்போதே அக்கா உங்களை நன்றாகப் பார்த்துவிட்டாள். அத்துடன்…”
விட்டால் அவள் இன்னும் என்னென்ன சொல்லப்போகிறாளோ என்று அந்த உரையாடலை நிறுத்தும் வகையில் நிமிர்ந்து, புருவங்களை உயர்த்தி புன் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவனைப் பார்த்தவள் அந்த கண்களில் தெரிந்த சாகசத்தில் கட்டுண்டு தடுமாறி, “எனக்கு சம்மதம்” என்றுவிட்டாள்.
மறுக்க நினைத்தவள் மயங்கிவிட்டாள். கணத்தில் அவளது இதயம் தடம் மாறி அவனை தஞ்சமடைந்துவிட்டது.
ஆனந்தம் அனைவரையும் அரவணைக்க, ஒருவரையொருவர் பார்த்து கதை பேச, மெதுவாக உமாவை நெருங்கிய கதிர், அவளுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம்,
“உன்னுடைய இரண்டு கண்களும் நன்றாகத் தெரிகிறதுதானே?” என்றவன் சட்டென்று விலகி அனைவரிடமும் விடைபெற்று சென்றுவிட்டான்.
திகைத்து நின்றாள் உமா.
— * — * —
“அம்மா, எதற்கும் எங்கள் வீட்டு மகாலட்சிமிகளின் அபிப்பிராயத்தையும் சம்மதத்தையும் கேட்டுவிடுங்கள். மறக்காமல் பெண் உங்கள் தேர்வு என்பதையும் கூறிவிடுங்கள். என்னை விட்டுவிடுங்கள். திருமண திகதியை குறித்தவுடன் சொன்னால் போதும். முதல்நாளிலிருந்து வீட்டில்தான் இருப்பேன்.” என்றபடி மெதுவாக விலகிக்கொண்டான் கதிர்.
— * — * —
இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம். திருமணத்திற்கு நாள் குறித்தாகிவிட்டது. நாட்கள் விரைந்தன. கதிர் இல்லாமலே ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன.
இரண்டு வருட புரொஜெக்டை வெற்றிகரமாக முடிப்பதற்காக நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக்கொண்டிருந்தான் கதிர்.
இடையில் ஒரு நாள் உமாவின் கைபேசி எண்ணைக் கொடுத்து,
“வேலை வேலை என்று ஓடிக்கொண்டிராமல் இடையே ஒரு இரண்டு நிமிடமாவது உமாவுடன் பேசு. அவர்கள் ஏதாவது தப்பாக நினைக்கப்போகிறார்கள்.” என்றார் மகனிடம் சிவகாமி.
எதற்கும் உதவும் என உள்ளூர அக்கறையுடன், வெளியில் அலட்சியமாக வாங்கி கவனமாக வைத்து தனது கைபேசியில் பதிவும் செய்துவிட்டான்.
— * — * —
அங்கு உமாவோ, அவன் கதைத்தவைகளைக் கேட்டு, என்னை பழிவாங்குவதற்காகத்தான் திருமணத்திற்கு சம்மதித்திருப்பானோ, அல்லது கடைசி நிமிடத்தில் ஏதாவது பழி கூறி திருமணத்தை நிறுத்திவிடுவானோ, என்று பலவாறான யோசனைகளுடன் நிம்மதியின்றி தவித்துக்கொண்டிருந்தாள். முகத்தில் மணப்பெண்ணுக்குரிய களையே இல்லை.
“என்னடி செல்லம்! முகத்தில் மகிழ்ச்சியையே காணோம். உனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் தானே?’ சிறு கவலையுடன் தாய் கேட்க,
“ஐயோ அம்மா, அப்படி என்றால் நான் அன்று கோவிலிலேயே சொல்லியிருப்பேனே. உங்களையெல்லாம் விட்டு பிரிந்து செல்வதை நினைத்தால்தான் யோசனையாகவும் பயமாகவும் இருக்கிறது.” என்று சமாளித்தாள்.
“மக்கு அம்மா. ரொம்ப சந்தோசத்தைக் காட்டினால், உங்களையெல்லாம் விட்டுச் செல்வலதில் இவ்வளவு மகிழ்ச்சியா என்று நீங்கள் கவலைப்பட்டுவிடக்கூடாது என்றுதான் அக்கா இப்படி நடிக்கிறாள். நான்தான் கோவிலில் பார்த்தேனே, இருவரும் பார்வையால் ஒருவரையொருவர் விழுங்கியதை. ஏன் அக்கா! எனக்கொரு சந்தேகம். நீங்கள் இருவரும் ஒரே கல்லூரியில்தானே படித்தீர்கள். கதிர் மாமாவை நீ ஒரு தடவைகூட பார்த்ததில்லையா… நம்பமுடியவில்லையே…” இழுத்தாள் உஷா.
அந்த ஒரு தடவை பார்த்ததால் தானே இன்று இந்த நிலைமையில் நான் இருக்கின்றேன் என உள்ளூர புலம்பியபடி,
“எனக்கு வேறு வேலை இல்லை. கல்லூரிக்கு படிக்கப் போனேனா இல்லை சீனியர்ஸை எல்லாம் பார்த்து விபரம் அறிவதற்கு போனேனா? ஒருவேளை நீ அப்படித்தான் செய்கிறாயோ?” என கதையை அவள் பக்கம் திருப்பிவிட்டு மெதுவாக விலகிச் சென்றுவிட்டாள் உமா.
— * — * —
திருமணத்திற்கு இன்னும் மூன்றே நாட்கள் இருக்கையில்,
என்னதான் மகிழ்ச்சியாக இருந்தாலும் உமாவுக்கு சிறு தண்டனை ஏதும் கொடுத்தால்தான் சரியாக இருக்கும், முன்பின் தெரியாமல் எவ்வளவு பேச்சு பேசிவிட்டாள்,
என்ற யோசனையில் இருந்த கதிரிடம் தானாகவே மாட்டிக் கொண்டாள் உமா.
அன்று கோவிலில் பார்த்து நிச்சயித்தபின் தன்னுடன் கைபேசியில் கதைப்பான் என்று எதிர்பார்த்து பயந்துகொண்டிருந்த உமாவுக்கு ஏமாற்றமே.
அவன் கதைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என எண்ணியிருந்தாள். என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் என்று புரியாமல் தானாவது குறுஞ்செய்தி ஒன்று அனுப்பிப் பார்ப்போமா என்று எண்ணியபடி “ஹை” என்று அனுப்பியே விட்டாள்.
உமாவிடமிருந்து குறுஞ்செய்தியை எதிர்பார்த்திராத கதிர், அவளது எண்ணை பதிவு செய்துவைத்திருந்ததால் அறிந்துகொண்டான்.
கதிருக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது. உடனே அவளை கைபேசியில் அழைத்தவன், அவள் கதைப்பதற்கு முன்பேயே,
“என்ன லலிம்மா, புது நம்பரில் இருந்து, காலையில்தானே உன்னுடன் கதைத்துவிட்டு வந்தேன். யோசிக்காதே செல்லம். இப்போ மிகவும் களைப்பாக இருக்கிறேன். விடிந்ததும் உன்னுடன் கதைப்பதுதான் என் முதல் வேலை டார்லிங். என்னுடைய பட்டுக்குட்டியில்ல. தூங்குடா செல்லம். குட் நைட், ஸ்வீட் டிரீம்ஸ், டேக் கேர்.” என்றவன் அவசர அவசரமாக கைபேசியில் அழுத்தமாக முத்தமொன்றைக் கொடுத்து வைத்துவிட்டான்.
இதுபோதும். நன்றாக முழி பிதுங்கி யோசிக்கட்டும். திருமணம் முடிந்தபின் உள்ளதைக் கூறி சமாதானம் செய்யலாம், என்றவாறு நிம்மதியாக படுக்கைக்கு சென்றவனை தங்கையர் இருவரும் பிடித்துக்கொண்டனர்.
“என்னண்ணா, முத்தமெல்லாம் அமோகமாக பறக்கிறதே. அங்கிருந்தும் வருகிறதா? பரவாயில்லை. அமைதியாக இருந்துகொண்டு அண்ணியார் உன்னை ஆட்டி வைக்கிறார் போல் இருக்கிறதே. நீ முத்தம் கொடுத்தால்தான் தூங்குவாளாமா? நடக்கட்டும் நடக்கட்டும். …”
பலவாறு கிண்டல் செய்து கதிரை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார்கள்.
— * — * —
கதிரவனின் கைபேசி அழைப்பில் தடுமாறி காதில் வைத்தவள் அதிர்ச்சியில் பேச முடியாது வாயடைத்து நொருங்கிவிட்டாள். இறுதியில் முத்தச் சத்தம் கேட்டதும் கைபேசியை கீழே போட்டவளின் விழிகள் பெருக்கெடுக்கத் தொடங்கின. அவசர அவசரமாக போர்வைக்குள் முகத்தை மறைத்தவள் நன்றாக அழுது தீர்த்தாள்.
கடவுளே, ஏன் எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை. நல்லவன் என்று நினைத்திருந்தேனே. நான்தான் அவசரப்பட்டு ஏதேதோ பேசிவிட்டேன் என்று புலம்பினேனே. இனி என்ன செய்வது?, என நினைத்து நினைத்து அழுதவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.
இனி ஒன்றுமே செய்ய இயலாது. இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. அப்பா, அம்மா, தங்கைக்காக பொறுத்துப் போகவேண்டியதுதான்.
முருகா! நீ தான் எனக்கு துணையாக இருந்து நல்வழி காட்டவேண்டும், என மீண்டும் மீண்டும் வேண்டுதலை உருப்போட்டபடி உறங்கிவிட்டாள்.
— * — * —
முருகனிடம் தஞ்சமடைந்தவள் முகத்தில் புன்னகையைப் பூசி இயந்திரமாக இயங்கிக்கொண்டிருந்தாள் உமா.
இதோ மணமேடை வரை வந்துவிட்டார்கள். கதிரின் முகத்தை உமா பார்க்கவேயில்லை.
அலங்காரத்தில் தேவதையாக மின்னியவளை ஆசைதீர கள்ளப்பார்வை பார்த்து ரசித்தவன், தாலி கட்டி தன்னவளாக்கிவிட்டான் கதிரவன்.
என்ன நடக்கிறது என்பதை உணராமலே சடங்குகளை செய்து முடித்துக் கொண்டிருந்தாள் உமா.
தோழிகளின் கேலிப் பேச்சுக்கள் நாராசமாக அவள் செவிகளில் ஒலிக்க வெட்கம் என்ற போர்வையில் தலை குனிந்திருந்தாள்.
அவளின் நிலை புரிந்து மனதார மனமிரங்கியவன் அவளது விரல்களை மென்மையாகப் பற்றியிருந்தான் கதிரவன்.
ஏனோ உமாவுக்கு அது சிறிது ஆறுதலைத் தந்தது.
எதிர்காலத்தை எண்ணி கவலையுடனிருந்தவளுக்கு உஷா, வானதி, ஆரணி ஆகியோரினது கேலியும் கிண்டலும் ரசிக்கவேயில்லை. பெயருக்கு புன்னகைத்துக் கொண்டிருந்தவளுக்கு வாய் தான் வலித்தது.
— * — * —
அன்றைய இறுதி நிகழ்வாக சிங்கத்தின் குகைக்குள் மான் குட்டியைத் தள்ளி விட்டுவிட்டார்கள். கதிரவனின் அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் உமாவை அனுப்பிவிட்டார்கள்.
உள்ளூர நடுங்கிக்கொண்டிருந்தவளுக்கு அந்த ஏசி அறையிலும் வியர்த்துக் கொட்டியது.
கைபேசியில் கதைத்துக்கொண்டிருந்த கதிர், அதை நிறுத்தி வைத்துவிட்டு உமாவை நோட்டம் விட்டான்.
அவளைப் பார்க்க சிரிப்பாகவும் பாவமாகவும் இருந்தது.
சரி, இனி இந்த விளையாட்டை முடித்து வைப்போம் என நினைத்துக்கொண்டு மெதுவாக அவளருகே வந்தவன், அவள் எதிர்பாராதவகையில் அவளை மென்மையாக அள்ளி அணைத்துக்கொண்டான்.
திடீரென நடந்த நிகழ்வில் திகைத்து நின்றவளின் முகத்தை நிமிர்த்தியவன், “தண்டனை முடிந்தது.” என்றான்.
ஒன்றும் புரியாமல் பார்த்தவளிடம்,
“அன்று என்னை எவ்வளவு கேவலமாகப் பேசினாய். அதற்கு சிறு தண்டனையாவது கொடுக்கவேண்டுமென நினைத்திருந்தேன். அந்த சமயத்தில்தான் லலி கதாப்பாத்திரத்தை உருவாக்குகின்ற சந்தர்ப்பத்தை நீயே குறுஞ் செய்தி ஒன்று அனுப்பி தந்துவிட்டாய். அந்தச் செய்தியை அனுப்பியது நீதான் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இறுதியில் முத்தம் தந்தது உனக்குத்தான்.” என்று மந்திரப்புன்னகை ஒன்றை பரிசளித்தான்.
இப்படியான ஒரு சுப முடிவை சற்றும் எதிர்பார்த்திராத உமா மனதிற்குள் உடனடியாக முருகனுக்கு நன்றி கூறினாள். உள்ளூர பெரும் நிம்மதி அவளை ஆட்கொண்டாலும், இரு மாதங்களாக தான் அனுபவித்த மனக் கஷ்டங்களையும் கடைசி மூன்று நாட்களாக அனுபவித்த சித்திரவதையையும் எண்ணி வந்த கோபத்தை அப்படியே அடக்கி, இனியும் இதை வளரவிடுவது இருவரது வாழ்க்கையையும் அழித்துவிடும் என்று உணர்ந்தவள், மௌனமாக கண்ணீர் சிந்தினாள்.
“என்னை மன்னித்துவிடு உமா. இன்று மணமேடையில் உன்னைப பார்த்தபின்பு தான் நான் உன்னை கஷ்டப்படுத்தியது வேதனையைத் தந்தது.
இனி உன் விழிகளில் கண்ணீர் சிந்தக்கூடாது.” கூறியவன் அவள் கண்ணீரைத் துடைத்தபடி,
“ஆனால் ஒன்று, சமையல் செய்யும்போது கண்ணீர் வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை தாயே.” என்று சிரிக்க, உமாவின் வதனமும் செந்தாமரையாக மலர்ந்தது. அதில் தேனுண்ணக் காத்திருந்த கதிர்,
“சரி சரி… முக்கியமான விஷயத்தை மறக்கமுதல் கேட்டுவிடுகிறேன். அன்று நான் கொடுத்ததை இப்போ எனக்கு தந்துவிடு.” என்றவனை, என்னடா இது புதிதாக ஏதோ தொடங்குகிறானே என்று குழப்பத்துடன் பார்த்தவளை, அவள் காதருகே “முத்தம்” என்றான்.
உடனடியாக விலகியவள், “என்னால் முடியாது” என்றபடி கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.
“பரவாயில்லை, இன்று தருவதையும் கணக்கில் சேர்த்து உன்னால் முடியும்போது வட்டியுடன் திருப்பித் தந்துவிடு” என்றபடி அவளை இழுத்து அணைத்து முத்தமாரி பொழியத் தொடங்கினான் கதிரவன்.
அன்று இருவரும் அவர்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கினர்.
* சுபம் *