ஈரைந்து மாதங்கள்
ஈருயிர் ஓருடலாய்
ஈன்றெடுத்த பொழுதினிலே
ஈரம் என் விழிகளிலே
கண்ணே கனியமுதே
கடவுள் தந்த கண்மணியே
கலி தீர்க்க வந்தவளே
கருவிழிகள் உருள உருள
கண்களினால் கதைகள் பேசி
கவர்ந்துவிட்டாய் கண்ணம்மா
பட்டுப் போன்ற மேனியதை
பரிவோடு அணைக்கையிலே
பட்டுவிட்ட வலிகளெல்லாம்
பறந்தோடிப் போனதம்மா
எந்தத் தேசம் சென்றாலும்
எந்தப் பதவி வகித்தாலும்
தாய் என்ற பதவிக்கு
ஈடு இணை இல்லையம்மா