ஒவ்வொருவரினதும் வாழ்க்கையிலும் ஒருமுறை நடக்கும் திருமண வைபவம் அவரவர் சக்திக்கேற்ப ஆடம்பரமாக நடாத்துவதில் தப்பில்லை. அந்த ஆடம்பரத்திலும் அநாவசிய செலவுகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆடம்பரமான அழைப்பிதழுக்கு செலவு செய்யும் பணம் வீண் விரயமே. திருமணம் முடிந்த கையோடு அந்த அழைப்பிதழ், குழந்தைகளின் விளையாட்டுப்பொருளாகி இறுதியில் குப்பைக்கூடைக்கு சென்றுவிடும். இறைவனின் திருவுருவங்கள் ஒட்டப்பட்டிருக்கும் அழைப்பிதழ்களை வீசுவதும் மனதிற்கு கஷ்டமான விடயம். அதேநேரம் அதை வைத்துப் பாதுகாப்பதும் முடியாது. எத்தனை அழைப்பிதழ்களை வைத்திருப்பது? எனவே ஆடம்பரமான அழைப்பிதழ்களை தவிர்ப்பது மிகவும் நல்லது, செலவும் மிச்சம்.
பகட்டிற்காகவும் கௌரவத்திற்காகவும் அதிக பணம் கொடுத்து பெரிய மண்டபங்களை பதிவு செய்வதும் அநாவசிய செலவு என நான் கருதுகிறேன். சாதாரண மண்டபங்களை நன்றாக அலங்காரம் செய்து செலவை குறைத்து நிம்மதியாக இருக்கலாம்.
மணப்பெண்ணின் அலங்காரம் நன்றாக இருக்கத்தான் வேண்டும். அதற்காக அலங்காரம் செய்யும் வல்லுனர்களை அழைத்து வைபவத்திற்கு ஒரு கிழமைக்கு முன்பிருந்தே அதற்குரிய செயற்பாடுகள் பெண்ணிற்கு தொடங்குவது அநாவசிய செலவுடன் பெண்ணிற்கும் இயல்பாக இருக்க முடியாமல் கஷ்டத்தைக் கொடுக்கும் செயலாகும்.
திருமண வைபவங்களில் இன்னிசைக் கச்சேரிகள் செவிகளுக்கு இனிமையாக இருத்தலே நன்று. நாதஸ்வரம், மேளம் அவசியமானவையே. தாலி கட்டுவது தொடர்ந்த சம்பிரதாய நிகழ்வுகள் முடிந்ததும் cd /dvd player இல் இன்னிசையை தவழவிடலாம். கலைஞர்கள் வந்து நடாத்துவதால், வந்த உறவினர்கள் திருமண நிகழ்வுகளைப் பார்ப்பார்களா? உறவினர்களுடன் அளவளாவி மகிழ்வார்களா? கச்சேரி முன் அமர்ந்து அதை இரசிப்பார்களா? எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது? எனவே இன்னிசைக் கச்சேரிக்கு செலவிடும் பணம் முற்றிலும் அநாவசியமே.
திருமணம் முடிந்ததும் தாம்பூலம் கொடுப்பார்கள். அது சம்பிரதாயம். அந்தப் பையில் வெற்றிலை, பாக்கு, தேசிப்பழம் இருப்பது வழமை. ஆனால் இப்போது சிறிய குங்கும, சந்தன டப்பாக்களுடன் சிறிய விளக்கு, இறைவன் திருவுருவங்கள் என்பனவும் அந்தப் பையில் வைக்கின்றார்கள். மேலதிகமாக வைக்கப்படும் இவை எல்லாமே சிறு பிள்ளைகளின் கையில் விளையாட்டுப் பொருளாக இரண்டு நாட்கள் இருந்து பின் போவது குப்பைக்கே. இதற்க்கு செலவிடப்படும் பணம் வீண் விரயமே.
திருமண வைபவத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள், video மிகவும் அவசியமானவையே. பிற்காலத்தில் எல்லோருமே பார்த்து மகிழும் ஒரு ஆவணப் பதிவு. ஆனால் அதன்பின் indoor /outdoor படப்பிடிப்பு என்று கிளம்புவது முற்றிலும் அநாவசிய செலவே. அது மட்டுமல்லாமல் மணமக்கள் உட்பட எல்லோரையுமே (பெற்றோர், சகோதரர்கள்) ஆறுதலாக இருக்க விடாமல் தொல்லை கொடுக்கும் செயலுமாகும்.
இவையே எனது கருத்துக்கள்.