நவராத்திரி
இந்து மக்களின் பண்டிகைகளில் நவராத்திரியும் பிரதானமானதொன்றாகும். இது ஒரு சக்தி வழிபாடாகும். புரட்டாதி மாதத்தில், பத்து நாட்கள் கொண்டாடப்படும் இப் பண்டிகையின்போது சக்தியின் மூன்று வடிவங்ளான துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியை வழிபடுவர். இக் காலத்தில் விரதமிருந்து சக்தியின் அருளைப் பெறுவர். சிலர் வீடுகளில் கொலு வைத்து தினமும் அயலவர்களையும் உறவினர்களையும் அழைத்து பஜனை செய்து வழிபடுவர்.
மனிதன் நல்லவிதமாக வாழ கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றும் மிகவும் அவசியமானவையாகும். இந்த ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் வீரத்தை அருளும் துர்க்கையை வழிபடுவர். இவர், மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை எண்ணங்களைத் தந்து மனத் துணிவைத் தருகிறார். இரண்டாவதாக வரும் மூன்று நாட்கள் செல்வத்தை அருளும் லட்சுமியை வழிபடுவர். வீரம் எவ்வளவு முக்கியமோ அதே போன்று மனித வாழ்வுக்கு செல்வமும் அத்தியாவசியமானதாகும். மூன்றாவதாக வரும் மூன்று நாட்கள் கல்வியை அருளும் சரஸ்வதியை வழிபடுவர். வாழ்க்கையை சிறப்பான முறையில் திட்டமிட்டு கொண்டு செல்ல அறிவு மிகவும் முக்கியமானது.
ஒன்பதாவது நாளன்று ஆயுத பூஜை. அன்று மனிதன் தன் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தும் பொருட்களையும், மாணவர்கள் தங்கள் கல்விக்கு பயன்படுத்தும் புத்தகங்களையும் மற்றும் சாதனங்களையும் சக்திகளின் பாதங்களில் வைத்து, அவல், கடலை, பொங்கல், கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடுவர்.
பத்தாவது நாள் விஜயதசமி. எட்டு நாட்கள் போர்புரிந்து ஒன்பதாவது நாள் தேவர்களை துன்புறுத்திய மகிசாசூரனை சக்தி வெட்டி வீழ்த்தினார். பத்தாவது நாள் தேவர்கள் வெற்றி விழா கொண்டாடி மகிழ்ந்தனர். அதுவே விஜயதசமி என்று அழைக்கப்படுகிறது.
விஜயதசமி அன்று ஆரம்பிக்கப்படும் எந்தக் காரியமும் வெற்றியைத் தரும். அன்றே பிள்ளைகளின் கல்வியை ஆரம்பிப்பதற்கு கோவிலுக்கு சென்று ஏடு தொடக்குவார்கள்.
நவராத்திரி விரதம், பயத்தையும் வறுமையையும் அழித்து செல்வ வளத்தையும் ஆரோக்கியத்தையும் தரும். எனவே நவராத்திரி காலத்தில் அனைவரும் புனிதமாக இருந்து சக்தியின் அருளைப் பெறுவோம்.