நேரத்தோடு இணைந்து செல்கிறது எமது வாழ்க்கை.
இரண்டுமே எதற்காகவும் யாருக்காகவும் நிற்பதுமில்லை, காத்திருப்பதுமில்லை.
எமக்காக கொடுக்கப்பட்ட வாழ்க்கைக் காலத்தில் ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாக செலவழிப்பவர்கள், இலட்சியத்தோடு வாழ்பவர்கள் புத்திசாலிகள். அவர்களே வாழ்க்கையில் வெற்றிகளை அடைந்து மகிழ்வாக வாழ்கிறார்கள்.
சோம்பேறித்தனமாக நேரத்தை கடத்துபவர்கள், வேலைகளை பிற்போடுபவர்கள், ஒருவித பயனுமில்லாது நேரத்தை செலவிடுபவர்கள் வாழ்க்கையில் தோல்விகளையே சந்தித்து துன்பங்களிலே உழல்கிறார்கள்.
வாழ்க்கையில் இணைவுகளும் பிரிவுகளும், பிறப்புகளும் இறப்புகளும் வந்துகொண்டே இருக்கும்.
போராட்டங்களும் துன்பங்களும், கேளிக்கைகளும் சந்தோசங்களும் மாறி மாறி வந்து போய்க்கொண்டே இருக்கும்.
நேரமோ, சோகங்களைக் கண்டு மலைத்து நிற்பதில்லை. சந்தோசங்களைக் கண்டு வேகமாக செல்வதில்லை.
அது சீராகத்தான் சென்றுகொண்டிருக்கிறது.
எமது செயற்பாடுகளின் வேகம் தான் சூழ்நிலைகளுக்கேற்பவும், காலநிலைகளுக்கேற்பவும் மாறுகிறது.
துன்பங்கள் சூழும்போது துவண்டு விடுகிறோம்.
இன்பங்கள் காணும்போது சிறகு விரித்து பறக்கின்றோம்.
கடந்துபோன நேரத்தை மீளப்பெற முடியாது.
நடந்து முடிந்த தவறுகளை மீண்டும் சென்று திருத்த முடியாது.
எனவே, நடந்து முடிந்தவற்றை நினைத்து வருந்தி நேரத்தை வீணாக்காது, இனிமேல் அத்தவறுகள் நடக்காது கவனமாக இருப்போம்.
எமக்காக நிர்ணயிக்கப்பட்ட வாழ்நாளில் ஒரு நொடிகூட வீணாகாது வாழ முயற்சி செய்வோம்.
* வேலைகளையும் கடமைகளையும் பிற்போடாது உரிய நேரத்தில் செய்து முடிப்போம்.
* நேரம் தவறாது உணவு உட்கொள்வோம்.
* தூங்கும் நேரத்தை நிர்ணயித்து, அதை ஒழுங்காக கடைப்பிடிப்போம்.
* ஓய்வு நேரங்களை குடும்பத்துடன் சேர்ந்து பயனுள்ள வகையில் செலவழிப்போம்.
– சுற்றுலா செல்வோம்
– இயற்கையை ரசிப்போம்
– சுற்றுச் சூழலை பாதுகாப்போம்
– எளியவர்க்கு உதவுவோம்
– சிறுவர் நலன் பேணுவோம்
– முதியோர்க்கு துணையிருப்போம்
– உறவுகளையும் நல்ல நட்புகளையும் பேணுவோம்
* இறை வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குவோம்.
* துன்பங்களும் தோல்விகளும் எம்மை வீழ்த்தும்போது, மனதை தேற்றி, ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற வாசகத்தை நினைவில் நிறுத்தி, நம்பிக்கையுடன் மீண்டு எழுவோம்.
* வெற்றிகளும் சந்தோசங்களும் வரும்போது, அளவுக்கதிகமாக கொண்டாடி நேரத்தை விரயம் செய்யாது, அளவோடு அடக்கமாக அனுபவிப்போம்.
வாருங்கள் நட்புகளே!
நேரம் சென்றுகொண்டிருக்கின்றது. ஒரு கணம் கூட வீணாக்காது, எமக்கும் பிறருக்கும் பயன் தரும் வகையில் வாழ்ந்து வெற்றி காண்போம்.