நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் பஞ்ச பூதங்கள் அதாவது ஐம்பூதங்கள் ஆகும். இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களினால் ஆனது எனவும், பூமியில் வாழும் ஜீவராசிகள் யாவும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உருவானவை எனவும் கருதப்படுகிறது.
மனித உடலில் எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் மண்ணின் கூறு எனவும்,
இரத்தம், விந்து, சிறுநீர், மூளை, கொழுப்பு நீரின் கூறு எனவும்,
உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் நெருப்பின் கூறு எனவும்,
ஓடல், நடத்தல், நிற்றல், இருத்தல், படுத்தல் காற்றின் கூறு எனவும்,
இன்பம், குரோதம், ஈயாமை, மோகம், மதம் ஆகாயத்தின் கூறு எனவும்
சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஜீவராசிகள் உருவாகி பஞ்ச பூதங்களின் உதவியுடன் அவை இயங்குகின்றன என்பதை சித்தர்களின் குறிப்புகளிலிருந்து அறியக்கூடியதாக இருக்கின்றது என்று கூறுகிறார்கள்.
பஞ்ச பூதங்கள் உடலில் எவ்வாறு இணைந்திருக்கின்றன என்பதைப் பார்க்கும்போது,
உடலை பாதுகாப்பதற்கும், தாங்கி இயங்க வைப்பதற்கும், தேவையான சக்தியை உடலின் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்லும் பாதையாகவும் மண்ணின் கூறு செயற்படுகிறது.
உடலுக்கு தேவையான சக்தியை உடலின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லவும், இனப்பெருக்கத்திற்கும், கழிவுகள் வெளியேறவும் நீரின் கூறு செயற்படுகிறது.
எந்த ஒரு இயந்திரத்தை இயக்குவதற்கும் எரிசக்தி அவசியம். அதேபோல் உயிர்கள் இயங்குவதற்கும் நெருப்பு மிக மிக அவசியம். நாம் உயிருடன் இருக்கிறோமா இல்லையா என்பதை உடலின் வெப்பத்தை வைத்து அறிகிறோம். எமது அறிவாற்றல் சுடர்விட்டு எரிவதற்கும் சமிபாடு சீராக நடைபெறுவதற்கும் எமக்குள்ளே நெருப்பு கனன்றுகொண்டிருக்க வேண்டும். உடலின் சிறு பகுதிதான் நெருப்பு. உணவு சமிபாடடைந்து உடலுக்கு தேவையான சக்தியை கொடுத்து இயங்கவைக்கிறது நெருப்பு.
உடலை உயிருடன் இணைத்திருக்கிறது காற்று. தேவையானதை உள்ளே எடுத்து தேவையற்றதை வெளியேற்றுகிறது சுவாசிக்கும் காற்று.
ஐம்புலன்களாகிய கண், காது, மூக்கு, வாய், மெய் ஊடாக எமக்குள் உருவாகும் உணர்வுகள்தான் ஆகாயத்தின் கூறு.
பிரபஞ்சம் எவ்வாறு ஜீவராசிகளின் வாழ்வியலுக்கு துணையாக இருக்கின்றது என்பதைப் பார்க்கும்போது,
ஜீவராசிகளை சுமந்து அவற்றிற்கு உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கிறது நிலம் (மண்).
குடிப்பதற்கும், பயிர்கள் வளர்ந்து உணவு தருவதற்கும், சுத்தம் செய்வதற்கும், பூமியின் வெப்பத்தை தணிப்பதற்கும் நீர்.
நாம் உண்ணும் உணவை இலகுவாக சமிபாடடைவதற்கு அதனை சமைப்பதற்கும், அளவுக்கு அதிகமான குளிர் உடலைத் தாக்கும்போது அதனை சமநிலைப்படுத்துவதற்கும் நெருப்பு.
காற்று எவ்வளவு அத்தியாவசியமானது என்பதனை நாம் விடும் மூச்சு ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்துகிறது. சுவாசத்திற்கு மட்டுமல்ல உடலின் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக்கி மனதையும் உற்சாகப்படுத்துகிறது காற்று.
நீரைப் தேக்கி வைத்து காலத்திற்கு காலம் மழையை தருவதும் பலவித கதிர்வீச்சுகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பதும் ஆகாயம்.
பஞ்ச பூதங்களினதும் இயற்கையினதும் துணையின்றி பூமியில் ஜீவராசிகள் உயிர்வாழ முடியாது. இந்த உண்மையை உணர்ந்த ஆதிகால மனிதர்கள் இயற்கையையும் பஞ்ச பூதங்களையும் சாந்தப்படுத்தி அவற்றின் உதவியை பெறும் வகையில் பயபக்தியுடன் அவற்றை வழிபட்டு வந்தமை தொல்லியல் ஆராய்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாமும் எம்மோடு இணைந்திருக்கும் பஞ்ச பூதங்களை மாசுபடுத்தி சீற்றமடையச் செய்யாது மகிழ்வோடு வாழ்வோம்.
*****