“நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.
முதல் வழி பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது.
அடுத்தது,பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது.
இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது. பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம்.
பிரச்சினைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழிதான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சினைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லையே! மூப்பு, பிணி,சாவு, சூழல் முதலியவற்றைத் தடுப்பது இன்றுவரை முற்றிலும் சாத்தியமாகவில்லையே!
பிறவியிலோ, விபத்திலோ உறுப்புகளை இழந்தவர், அன்பான உறவுகளைப் பறிகொடுத்தவர், கடைசிமுறையீடும் தோற்று, தூக்குமேடை ஏறவேண்டியவர், புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் வாழ்பவர்- இவர்கள் மட்டுமன்றி, ஏற்றே ஆகவேண்டிய கசப்பான பணியை ஆற்றவேண்டிய சூழலில் உள்ளவர், மனமாறுபாடுடைய மனித உறவுகளுடன் வாழ்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் – இவர்களெல்லாம் பிரச்சினைகளோடு வாழ்ந்தே தீரவேண்டியவர்கள்..
”உனக்கு ஏழரை நாட்டுச்சனி. ஆனால் ஓராண்டுக்கு மேல் பிரச்சினையில்லை” என்றான் சோதிடன். பாதிக்கப்பட்டவன் எப்படியெனக்கேட்டதற்கு,” ஓராண்டில் கஷ்டங்கள் பழகிவிடும். மீதி ஆண்டுகளில் துன்பம் தெரியாது” என்றானாம். துன்பங்கள் பழகிப்போனால் அதன் வேதனை கரைந்துவிடும் என்பதே உண்மை.
தணிப்பறியாத் துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்று, தம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள், அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.
பிரச்சினை எவ்வளவு பெரிதாயினும் அதனோடு ஐக்கியமாகி கூடவே வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும், பொறுமையும் வளர்த்துக்கொண்டால் இந்தச் சாதனையாளர்கள் வரிசையில் நாமும் சேரலாம்.”
*****