கடவுள் தந்த வரம் இது
கிடைத்தற்கரிய பிறவி இது
கடமைகளை செய்திடுவோம்
கண்ணியமாய் இருந்திடுவோம்
படிப்பறிவு தேடிடுவோம்
பட்டம் பதவி பெற்றிடுவோம்
பண்பாடு பேணி நாமும்
பாரினிலே செயல்படுவோம்
அழித்தொழிப்போம் தீயவற்றை
அன்பு செலுத்துவோம் பேதமின்றி
ஆதரவின்றி அலைவோரை
அரவணைத்து பாதுகாப்போம்
சுகாதாரம் பேணி நடப்போம்
சுற்றுச் சூழல் பாதுகாப்போம்
சத்தான உணவுகளை
சமைத்து பசியாறிடுவோம்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
ஒழுக்கத்தை கடைப்பிடிப்போம்
ஒவ்வொரு நாளிலும் நேரமதை ஒதுக்கியே
ஒருமுறையேனும் இறைவனை வணங்கிடுவோம்
ஒரு நாட்டு மக்கள் நாங்கள்
ஒருமனதாய் உழைத்திடுவோம்
ஒன்று சேர்ந்து மகிழ்ந்திடுவோம்
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்
பெற்றோரின் நலன் காப்போம்
பெரியவரை மதித்திடுவோம்
பரம்பொருளை நாம் உணர்ந்து
பிறவிப் பயன் அடைந்திடுவோம்