பிள்ளைகளின் எதிர்காலம், பெற்றோரின் வழிகாட்டலில் பிள்ளைகளின் விருப்பப்படி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே எனது கருத்தாகும்.
சில குழந்தைகள் பெற்றோரின் வழிகாட்டலை இயற்கையாகவே ஏற்பவர்களாக இருப்பார்கள். பல குழந்தைகள் எதிர்மறையாகவே யோசிப்பவர்களாக இருப்பார்கள். குழந்தைகளின் நண்பர்களின் இயல்புகளிலும் இது தங்கியுள்ளது. தீய உள்ளம் கொண்ட நண்பர்களை இனம் கண்டு ஆரம்பத்திலேயே அகற்றுவது பெற்றோரின் தலையாய கடமையாகும். சிறு வயதிலேயே உனக்கு இதுதான் சரி என்று அவர்களின் விருப்பத்தை ஆரம்பத்திலேயே மறுப்பதால் பிடிவாதம் தோன்றி அடம் பிடிப்பார்கள். ஆனால் அவர்களின் போக்கிலே விட்டு சரியான தருணம் பார்த்து அவர்கள் கேட்பதில் உள்ள நன்மை தீமைகளை அவர்களுக்கு புரியும்படி எடுத்துக் கூறினால் புரிந்துகொள்வார்கள்.
கல்வி
குழந்தைகளின் மாணவ பருவத்திலே பெற்றோர் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். அவர்கள் எந்தப் பாடங்களை மிகுந்த ஆர்வத்துடன் கற்கிறார்கள், எந்தப் பாடங்களில் அவர்கள் புத்திசாலித்தனம் அதிகமாகத் தெரிகிறது என்பதை அவதானித்து அந்தப் பாடங்களினால் வருங்காலத்தில் அவர்களுக்கு நன்மை உண்டா என்பதை அறிய வேண்டும். குழந்தைகள் தெரிவு செய்த பாடங்கள் சரியாயின் அவர்களுக்கு துணையாக இருந்து மேலும் மேலும் வளர உதவ வேண்டும்.
அப்படி இல்லாமல் அந்தப்பாடங்களினால் பயனில்லை என்பதை அறிந்தால், குழந்தைகளின் மனம் பாதிக்காத வண்ணம் பயனுள்ள பாடங்களை கற்பதில் ஆர்வம் வரத் தக்க முறையில் அவற்றை விளக்க வேண்டும். மெது மெதுவாக அவர்களின் ஆர்வத்தை திருப்ப வேண்டும். இம்முயற்சி சரிவராவிடின் அவர்கள் போக்கிலேயே விடுவதுதான் உத்தமம். பெற்றோர் தம் சுயநலத்திற்காகவும் சுய கௌரவத்திற்காகவும் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழாக்கக் கூடாது. அவர்கள் விரும்பும் துறையில் ஆர்வம் மிகுதியாகும்போது அவர்கள் அத்துறையில் வெற்றியடைவது நிச்சயம். அதற்கு தகுந்த உதவிகளை செய்வது பெற்றோர் கடமையாகும்.
வேலை
குழந்தைகள் படித்து வேலைக்குச் செல்லும் காலம் வரும்போது கூடுதலாக உலகம் புரிந்தவர்களாக இருப்பார்கள். நல்லது கெட்டது பிரித்தறியக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
குடும்பப் பொறுப்புணர்ச்சியுடன் இருக்கும் குழந்தைகள் பெற்றோருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள். பெற்றோருடன் கதைத்து அலசி ஆராய்ந்து எடுக்கும் முடிவு சிறந்ததாக இருக்கும். இச்சமயத்தில் பெற்றோர் சுயநலமற்று செயற்பட வேண்டும். பிள்ளைகளின் எதிர்கால நலத்தையும் கருத வேண்டும். அதேசமயம் பிள்ளைகளும் பெற்றோரின் நலத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
திருமணம்
பேசி நடாத்தும் திருமணம் – பெற்றோர் பிள்ளையுடன் மனம்விட்டு கதைத்து பிள்ளையின் விருப்பத்தை அறிந்து, சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாது பிள்ளையின் நலனையும் யோசித்து நடாத்தும் திருமணம் சிறப்பாக இருக்கும்.
காதல் திருமணம் – காதலுக்கு உடனடியாக எதிர்ப்பு காட்டாது, பிள்ளை விரும்புபவரையும் (ஆண், பெண் ), அவரின் குடும்பத்தையும் விசாரித்து, ஒத்து வரக்கூடியவர்களாயின் கௌரவம் பாராது திருமணத்தை நடாத்தி வைப்பது சிறப்பாக இருக்கும்.
ஒத்து வரக்கூடியவர்கள் அல்லாவிடின், அந்த திருமணத்தால் விளையும் தீமைகளை பிள்ளைக்கு பொறுமையாகவும் அமைதியாகவும் எடுத்துக் கூறி சமாதானமாக பிரிக்கலாம். அதையும் மீறி பிடிவாதமாக இருந்தால், ஒரு கால அவகாசத்தை கொடுத்து, அந்த கால முடிவிலும் அவர்கள் காதல் உறுதியாக இருந்தால் சந்தோஷமாக திருமணத்தை நடாத்தி வைத்து சிறப்பாக்கலாம்.
பெற்றோரின் வழிகாட்டலும் பிள்ளைகளின் விருப்பமும் ஒன்றாக இணையும்போது வாழ்வு சிறப்பாக அமையும்.