புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்களே, ஒன்றை நீங்கள் மனதில் வைக்கவேண்டும். நீங்கள் எப்படி பயந்து கொண்டு புகுந்த வீட்டிற்குச் செல்கிறீர்களோ, அதே மனநிலையில்தான் அவர்களும் உங்களை எதிர்கொள்கிறார்கள். தங்கள் பயத்தை வெளிக்காட்டமாட்டார்கள். மாறாக உங்கள் நடவடிக்கைகளை மிகவும் கவனமாக ஆராய்ச்சி செய்வார்கள். எனவே அவர்களின் சந்தேகத்தைப் நீக்கி, அவர்களின் மனதை வெற்றிகொள்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
இதோ உங்களுக்காக சில ஆலோசனைகள் –
மனிதனின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறைவிடம்.
* உங்களது கணவரையும் புகுந்த வீட்டினரையும் கவர்வதற்கு முதல் வழி அன்பும் உணவும்தான்.
திருமணத்திற்கு முன்பாக சமையலைக் கற்றுக்கொள்ளுங்கள்.
* நீங்கள் வேலைக்குச் செல்பவராக இருந்தால், திருமணத்தின்பின் விடுமுறை முடியும்வரை காலை, மதிய வேளைகளில் உங்கள் மாமியாருக்கு சமையலறையில் சிறு சிறு உதவிகளைச் செய்துகொண்டு உணவில் எல்லோருடைய விருப்பு வெறுப்புகளையும், உணவு முறையையும் அறிந்துகொள்ளுங்கள்.
* யாரைப் பற்றியும் குறை சொன்னால் வாயே திறக்காதீர்கள். புன்சிரிப்புடன் இருங்கள்.
* ஒருவரின் குறையை மற்றவர்களுக்கு சொல்லிக் காட்டாதீர்கள்.
* உங்களுக்கு பிடித்த விஷயங்கள் மற்றவரிடம் இருந்தால் தயங்காமல் பாராட்டுங்கள்.
* உங்களிடம் ஏதாவது பிழை இருந்து பேசினால், எதிர்த்துப் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள். உண்மையாகவே உங்கள் மீது பிழை என்றால், இனிமேல் கவனமாக இருப்பதாகக் கூறுங்கள்.
* மாமா மாமியின் திருமணநாள், எல்லோரது பிறந்தநாள் என்பவற்றை நினைவுவைத்து சிறு பரிசுகள் கொடுத்து, விசேடமான சமையல் செய்து அசத்திவிடுங்கள்.
* கணவன் உங்களுக்கு ஏதாவது பரிசுப் பொருட்கள் வாங்கும்போது வீட்டில் இருப்பவர்களுக்கும் கொடுத்து திருப்திப் படுத்துங்கள்.
* மாமா மாமியை அவர்களின் உடல்நிலைக்கேற்ப வைத்திய பரிசோதனைக்கு காலத்திற்கு காலம் அழைத்துச் செல்லுங்கள்.
* மறந்தும் வீட்டில் உள்ளவர்களின் குறைகளை கணவரிடம் விமர்சிக்காதீர்கள்.
* அடிக்கடி பிறந்தவீட்டிற்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இப்போதுதான் கைபேசி வசதி இருக்கிறதே. அடிக்கடி சுகம் அறிந்துகொள்ளுங்கள்.
* நீங்கள் கணவருடன் வெளியே செல்வதாக இருந்தால் முதலே பெரியவர்களிடம் கூறிவிடுங்கள் – அனுமதி வாங்குவதுபோல் இருக்கும்.
* கணவருக்குக் கிடைக்கும் பெருமை, வெற்றி, சந்தோஷங்களில்
உங்களுக்கும் பங்கு உண்டு. அதேபோல் அவருக்கு ஏற்படும் அவமானங்கள், தோல்வி, துன்பங்களும் உங்களையும் பாதிக்கும்.
எனவே அதற்கேற்றவாறு விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளுங்கள்.
* உங்களுக்கு ஏதாவது மனக்குறைகள் இருந்தால் மறைக்காது கணவருடன் மனம்விட்டு கதையுங்கள்.
* ஏதாவது முக்கியமான விஷயங்களைத் தொடங்கும்போது (புதிய தொழில், சொத்து வாங்குவது …….) கட்டாயமாக பெரியவர்களின் ஆலோசனைகளையும் ஆசிகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
* மாதத்தில் ஒருமுறையாவது எல்லோரும் சேர்ந்து வெளியில் சென்று வாருங்கள்.
* வாரத்தில் ஒருமுறையாவது பெரியவர்களுடன் கோவிலுக்குச் செல்லுங்கள்.
* வீட்டில் உள்ள ஏனையோருக்கும் அவர்களுக்கு ஏற்றமாதிரி சிறு சிறு உதவிகளைச் செய்ய மறக்காதீர்கள்.
* எல்லோருக்கும் அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்றுக்கொள்ளுங்கள். அன்பினால் எதையுமே சாதிக்கமுடியும்.
திருமணபந்தத்தில் இணையும் எல்லோருடைய வாழ்க்கையும், வெற்றிகரமாகவும் இன்பகரமாகவும் அமைய எனது வாழ்த்துக்கள்.