ஆணை விட பெண்ணே மனோதைரியம் மிக்கவள் என்பது எனது கருத்து. இது இறைவன் கொடுத்த வரம்.
திருமணம் செய்து புகுந்த வீடு செல்கிறாள் பெண். அங்கே பழகப் பழகத்தான் அவர்களுடைய உண்மையான குணங்களை அறியலாம். புது உறவுகளுடன் சுமுகமான முறையில் நடந்து, எல்லோரையும் சமாளித்து வாழ வேண்டும், அவர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும், கணவரினதும் மற்றவர்களினதும் வெறுப்புக்குள்ளாகாது எவ்வாறு இருக்க வேண்டும் என்று பலப்பல விஷயங்களை எதிர்நோக்கும் மனோதைரியத்துடனே புகுந்த வீடு செல்கிறாள். புகுந்த வீட்டுக்குச் செல்ல பயமாயிருக்கிறது என்று எந்தப் பெண்ணும் திருமணத்தை மறுப்பதில்லை.
கருவை சுமந்து குழந்தையை உலகிற்கு கொண்டுவருவது மறு ஜென்மம் எடுப்பதாகும். இன்று மருத்துவ உலகத்தின் பல கண்டுபிடிப்புக்கள் இறப்புவீத்தத்தை இல்லை என்று சொல்லுமளவுக்கு கொண்டுவந்துள்ளன. ஆனால் அதற்குமுன் குழந்தை பெற்று, தாய் பிழைத்து வருவதை எல்லோருமே பயத்துடன் எதிர்பார்த்திருப்பார்கள். எத்தனையோ நேர்த்திக்கடன்கள் வைத்திருப்பார்கள். அநேகமான பிறப்புக்கள் வீடிலேயே நடந்திருக்கின்றன. இதை தெரிந்தே பெண் மகிழ்ச்சியோடும் தைரியத்தோடும் கருவை சுமக்கின்றாள். இறப்புக்குப் பயந்து குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று எந்தப்பெண்ணும் நினைப்பதில்லை. குழந்தைப் பாக்கியம் கிடைக்காத பெண்கள் அந்தப் பாக்கியம் வேண்டி கோயில் கோயிலாக சென்று விரதங்கள் பிடித்து வழிபாடு செய்கிறார்கள்.
அன்று, கணவன் சம்பாதித்து கொண்டுவந்து மனைவியிடம் கொடுப்பதோடு அவரின் கடமை முடிந்தது. அது போதுமா போதாதா என்று சிந்திப்பதுகூட இல்லை. கொடுப்பதை வைத்து மனைவி சமாளித்து சிறப்பாக குடும்பத்தை கொண்டுசெலுத்துவாள் என்ற நம்பிக்கை மட்டுமல்ல தைரியமும் தான். (இந்த விஷயத்தில் ஆண்களின் மனோ தைரியத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.) அந்த வருமானத்தை வைத்து சிக்கனமாகவும் கடனில்லாமலும் சிறப்பாகவும் குடும்பத்தை நடாத்த சிந்தித்து செயற்படுவாள், தைரியமாக முடிவுகளையும் எடுப்பாள் மனைவி.
இன்று கணவன் மனைவி இருவரும் சம்பாதிக்கும் வீடுகளிலும் குடும்ப நிர்வாகத்தையும் கவனிப்பது மனைவியே. சமையல் வேலை, குழந்தைகளின் தேவைகள், அவர்களின் படிப்பு இவ்வாறு சகல தேவைகளையும் முன்னின்று நடாத்துபவள் பெண்ணே. வீடுத்தேவைகளை சிறப்பாக கவனிப்பதுடன் வேலைக்கும் சென்று சம்பாதிக்க முடியும் என்ற மனோ தைரியத்தை பெண்ணிடம் காணலாம்.
கணவன் தீயவனாக இருந்தால், அவனை விட்டு விலகி குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைத்துக்கொடுக்க பாடுபடும் மனோதைரியத்தை பெண்ணிடம் காணலாம்.
இளவயதில் மனைவி இறந்தால் அடுத்த வருடமே காத்திருந்து மறுமணம் செய்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள். ஆனால் இளவயதில் கணவன் இறந்தால் பெண், மறுமணத்தை நினைத்தும் பார்க்கமாட்டாள். குழந்தைகளுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து தனியே வாழும் மனோதைரியம் பெண்ணுக்கே உண்டு.
மூப்பில் வரும் இறப்பை பார்க்கும்போது, மனைவி முதல் இறைவனடி சேர்ந்தால் பெரும்பாலான கணவர் அடுத்த ஒருவருடத்துள் அவள் பின்னே சென்றுவிடுவார்கள். ஆனால் கணவன் முதல் இறைவனடி சேர்ந்தால் மனைவி அதற்குப்பின்னும் நீண்ட காலம் வாழ்வதை நம் கண்கூடாக காண்கிறோம். அவளது மனோதைரியமே அவளை நீண்டகாலம் வாழ வைக்கிறது.
இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது ஆணைவிட பெண்ணுக்கே மனோதைரியம் அதிகம் என்பது வெட்டவெளிச்சமாகும்.