முழு நேரம் வேலைக்குச் செல்லும் பெண்களால் தங்களின் வேலை மற்றும் குடும்பப் பொறுப்புக்களை முழுமையாக கவனிக்க முடியாது என்பது எனது கருத்து.
வீட்டில் வேலைக்கு நம்பகமான ஆட்களை வைத்திருந்தாலும் இல்லாவிட்டால் பெண்ணின் அல்லது கணவனின் பெற்றோர், சகோதரர்களோ துணைக்கிருந்தாலும் ஒரு இக்கட்டான சூழ்நிலை வீட்டில் நிலவும்போது அலுவலகத்தில் அவளால் முழுமையாக வேலையில் கவனம் செலுத்த முடியாது. அதேபோல் அத்தியாவசிய தேவைக்கு விடுமுறையில் இருக்கும்போது அந்த தேவையில் முழு மனதுடன் ஈடுபட முடியாது, அலுவலகத்தில் தனது பொறுப்பிலுள்ள வேலை பற்றிய நினைவாகவே இருக்கும்.
திருமணமான பெண்கள் குழந்தைகளில் முழு கவனம் செலுத்த முடியாது. ஒரு தாயின் கவனிப்பை எவராலுமே ஈடுசெய்ய முடியாது. குழந்தைகள் செல்லும் பாதையை அவதானிக்க பெற்றோரின் முழு கவனம் தேவை. அவர்கள் செய்யும் பிழைகளை சரியான சமயத்தில் அவதானித்து கோபம் கொள்ளாது ஆரம்பத்திலேயே அன்பாலும் அரவணைப்பாலும் திருத்த முடியும். ஒரு தாயாலேயே குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க முடியும். அவளும் வேலைக்கு செல்பவளாயின் குழந்தைகள் செய்யும் பிழைகளை உடனுக்குடன் கண்டுபிடிக்க முடியாது. காலம் கடந்து திருத்த முயல்வதும், வேலைப் பளுவுடன் களைப்பும் சேர்ந்து அவர்களுடன் எரிந்து விழுவதும் பயனற்றதாகிவிடும். துணைக்கிருப்பவர்களின் அக்கறையும் பெற்றோரைப் போல இருக்காது.
முக்கியமாக உணவு. கணவனுக்கும் குழந்தைகளுக்கும் விருப்பமான உணவு வகைகளை பார்த்துப் பார்த்து சமைத்து, அன்புடனும் பாசத்துடனும் ஊட்ட ஒரு தாயால் மட்டுமே முடியும். காலையில் சென்று மாலையில் வரும் தாயுடன் குழந்தை செல்லம் பொழிந்து அடம்பிடிக்கும்போது தாயின் பொறுமையும் பறந்துவிடும் அன்பும் ஓடி ஒளிந்துவிடும். இதனால் குழந்தைகளின் அன்பும் பாசமும் படிப்படியாக இடம் மாறுகிறது.
முழு நேரம் வேலைக்குச் செல்லும் பெண் உறவுகளின் துணையுடன் பொறுப்புக்களை சமாளித்துக்கொண்டு செல்ல முடியுமே தவிர சரிவரக் கவனிப்பது சிரமமே.