அநேகமான தமிழர்கள் கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பாகவே வெளிநாடு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையும் காரணமாக அமைகிறது. எனவே தமிழர் வெளிநாடுகளில் வாழவேண்டிய தேவை ஏற்படுகிறது.
எங்கிருந்தாலும் தமிழ் மக்கள் தங்கள் பண்பாட்டினை கைவிடுவதில்லை. அதற்கேற்றவாறு அவர்களின் தேவைகளுக்கு உணவுப் பொருட்கள், உடைகள், ஆபரணங்கள் என்பன விற்பனை செய்வதற்கு கடைகளை தமிழரே நடாத்துகிறார்கள். கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அங்கு பிறந்து வளரும் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்கு பிரத்தியேக கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அங்கு காலத்துக்கு காலம் பிள்ளைகள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. சமூகசேவை அடிப்படையில் இவை நடத்தப்படுகின்றன. தங்கள் பண்பாட்டினை கட்டிக்காப்பதற்கு அவர்கள் தங்களால் முடியுமான அளவு பாடுபடுகிறார்கள் என்பதனை இந்த நடவடிக்கைகள் மூலம் நாம் உணரக்கூடியதாக இருக்கிறது.
மேலதிகமாக, கல்வித்தேவைக்கு பிள்ளைகள் அந்நாட்டு மொழியிலே கற்க நேரிட்டாலும் வீட்டில் கட்டாயமாக தமிழில் கதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். தமிழ் குடும்பங்களின் விழாக்களில் (திருமணம், பூப்புனித நீராட்டு விழா …..)தவறாது கலந்துகொள்கிறார்கள். காரணம், தமது பாரம்பரிய சடங்குகளையும், உடை, அலங்காரம், அணிகலன்களையும் பிள்ளைகளுக்கு அறியத்தருவதோடு தாமும் அவற்றை அணிந்து மகிழ்கிறார்கள்.
கோவிலுக்கு செல்வது மட்டுமல்லாமல் தைப்பொங்கல், சிவராத்திரி, சித்திரை வருடப்பிறப்பு, நவராத்திரி, தீபாவளி போன்ற முக்கிய சமய நிகழ்வுகளையும், விரதங்களையும் கடைப்பிடித்து குழந்தைகளுக்கு வழிகாட்டுகிறார்கள் .
ஆண்களோடு பெண்கள் எப்படிப் பழகவேண்டும், பெண்களோடு ஆண்கள் எப்படி பழகவேண்டும் என்றும் அறிவுரைகள் கூறுவதோடு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டையும் பிள்ளைகளின் மனதில் பதியவைப்பதில் பெருமுயற்சி எடுக்கிறார்கள்.
அந்நாட்டு காலநிலை, சூழ்நிலைக் கேற்ப உடைகளை அணிந்தாலும் தங்களது பண்பாடுகளை விட்டு விலகக்கூடாது என்ற திடமனம் பொதுவாகவே தமிழர்களிடம் காணப்படுகிறது.
எனவே வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள், தங்கள் பிள்ளைகளை நமது தமிழ் பண்பாடுகளின்படிதான் வளர்க்க விரும்புகிறார்கள் என்பதே எனது கருத்தாகும்.