வெளிநாடுகளில் வாழும் தமிழர், தாங்கள் தமிழர் என்று சொல்வதற்கான அடிப்படை தகுதிகளையே படிப்படியாக இழக்கிறார்கள்.
மொழியை பார்க்கும்போது, அங்கு வளரும் குழந்தைகளும், அங்கேயே பிறந்து வளரும் குழந்தைகளும் தமிழ் பேச, எழுத, வாசிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள். கதைப்பது விளங்கும். ஆனால் பேசுவது கடினம். அப்படி பேசினாலும் அது தமிழ் அல்ல. சரியான உச்சரிப்பை எதிர்பார்க்க முடியாது.
பண்பாடு, கலாச்சாரத்தை பார்க்கும்போது, நடை, உடை, பாவனை எமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக் காட்டுபவை. வெளிநாடுகளில் வளரும் குழந்தைகள் விஷேட வைபவங்களில் மட்டுமே எமது பண்பாட்டுக்கு உரிய உடைகளை அணிகிறார்கள். அதே போல தாய் நாட்டுக்கு வரும்போதும் வைபவங்களுக்கு மட்டும் அப்படி அணிகிறார்கள். சாதாரண நாட்களில் எமது கலாச்சாரத்துக்கு மாறான உடைகளை அணிவதோடு, தங்களது கூந்தல் அலங்காரம் (குட்டையாக வெட்டுவது), முக ஒப்பனைகள் செய்யும் போது இங்குள்ளவர்களும் அவற்றை நாகரீகம் என்று கருதி தாங்களும் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாது, அனாவசியமான காரணங்களுக்காக கணவனை விவாகரத்து செய்வதும் சாதாரண விஷயமாகிவிட்டது. இவைகளைப் பார்த்து, வெளிநாடுகளில் வாழ்வோர் மட்டுமல்ல, தாய் நாட்டில் வாழ்பவர்களும் பண்பாடு, கலாச்சாரத்தை இழக்கிறார்கள்.
உறவுகளை பார்க்கும்போது, விடுமுறைக்கு தாய்நாடு வருபவர்கள், காலநிலை ஒத்துக்கொள்வதில்லை என்று வந்த வேகத்திலேயே அவசர அவசரமாக திரும்புகிறார்கள். இதனால் உறவுகளை தெரிந்தாலும் அவர்களுடனான அந்நியோன்னியம் இல்லாது போய்விடுகிறது. நாளடைவில் பாசப் பிணைப்பும் அறுந்துவிடுகிறது.
மொழி, பண்பாடு, கலாச்சாரத்துடன் உறவுகளையும் இழக்கிறோம்.
பெற்றோர், குழந்தைகளை தமது பண்பாட்டுடன் வளர்ப்பதற்கு எவ்வளவுதான் முயற்சி எடுத்தாலும் அங்குள்ள பழக்கவழக்கங்கள், சூழ்நிலைகள் ஒத்துழைக்காது. காரணம், குழந்தைகள் தங்களது முக்கால்வாசி நேரத்தை பாடசாலையிலும் நண்பர்களுடனுமே செலவழிக்கிறார்கள்.
உத்தியோகம் தொடர்பாக செல்வோர் பலவந்தமாக அந்த சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது தவிர்க்க முடியாதது.
பணம் சம்பாதிக்கும் நோக்குடனும் உயர் கல்வி பெறுவதற்கும் செல்வோர், தமது இலக்கை அடைந்ததும் திருப்தியுடன் திரும்புவதில்லை. மேலும் மேலும் ஆசைகளை வளர்த்து அங்கேயே இருப்பதால் தங்களது அடையாளங்களை படிப்படியாக இழந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. அதை அவர்கள் உணர்கிறார்களில்லை.