தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact
August 4, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு3 எ3

குவியல் 3 எண்ணம் 3

தோல்

எமது உடலைச் சுற்றி பாதுகாப்பு கவசமாக அமைந்திருக்கும் தோல் ஐம்பொறிகளுள் ஒன்றாகும்.

வெப்பம், குளிர், காற்று போன்ற காலநிலைகளையும், அடிபடும்போது வலியையும்,  தொடுகையையும் தொடுவதில் உள்ள வேறுபாட்டையும் உணரச் செய்து  தோல் எம்மை எச்சரிக்கின்றது. உடலிலுள்ள கழிவுகள் சில வியர்வையாக தோல் மூலம் வெளியேற்றப்படுகின்றன.

மனிதத் தோலை மேற்புறத்தோல் மற்றும் அடித்தோல் என இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

மேற்புறத்தோலானது நீர் மற்றும் தொற்றுநோய்க் கிருமிகள் உட்புகாவண்ணம் தடுப்பாக அமைந்திருக்கிறது. உடலிலிருந்து நீர் ஆவியாதலைத் தடுக்கிறது. வியர்வை மூலம் உடல் வெப்பத்தை சீர் செய்ய உதவுகிறது. சூரிய ஒளியிலிருந்து விட்டமின் டீ யினை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. ஒருவரது மனநிலையை மேற்புறத்தோலின் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. கிருமிகள், அழுக்கு, தூசு, வெப்பம், குளிர், அதிர்வுகள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. உடல் இயக்கத்திற்கும் மேற்புறத்தோல் உதவுகிறது.

அடித்தோல் உடல் உறுப்புக்களுடன் இணைக்கும் இணையுறுப்பாகச் செயற்படுகிறது.

மனிதனின் சரும நிறத்தை தீர்மானிப்பது மெலானின் (கருநிறமி) (melanin) ஆகும். ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் ​மெலானின் அளவு குறையும்போது உடலின் சில பகுதிகளிலோ அல்லது படிப்படியாக முழுமையாகவோ தோலில் நிறமிழப்பு ஏற்படுகின்றது என கூறப்படுகின்றது. இதற்கு ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

அசுத்தமான காற்றில் கலந்திருக்கும் கிருமிகள், தூசு போன்றவற்றால் தோல் நோய்கள் உண்டாகிறது. அதிக வெயிலில் செல்லும்போது தோலினுள் ஊடுருவும் புற ஊதாக் கதிர்களினாலும் தோல் நோய்கள் உண்டாவதாக அறியப்படுகின்றது. சிலருக்கு குறிப்பிட்ட மருந்துகளோ உணவுகளோ உட்கொள்ளும்போது ஒவ்வாமை ஏற்படுகின்றது. இதன் காரணமாக தோலில் கடி உண்டாகி தடிப்புக்கள் தோன்றுகின்றன. உடனடியாக அப் பதார்த்தத்தை தவிர்ப்பதன் மூலம் சில மணிநேரங்களில் குறைந்துகொண்டு சென்று குணமடையும். கடி, தடிப்புக்கள் குறைந்துகொண்டு வராவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தோற்றத்தை மெருகேற்றுவதற்கு பல அழகுசாதனப் பொருட்களை உபயோகிக்கின்றார்கள். அந்தப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களினால் பலருக்கு ஒவ்வாமை ஏற்படுவதுடன் தோலின் ஆரோக்கியமும்  பாதிக்கப்படுகின்றது. தோலின் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுப் பதார்த்தங்களை உட்கொள்வதன் மூலம் தோலின் ஆரோக்கியம் பேணப்படுவதுடன் அழகிய தோற்றத்தையும் பெறலாம். அதுமட்டுமல்லாது இயற்கைப் பொருட்கள், மூலிகைகள் உபயோகித்து அழகு சாதனப்பொருட்களை தயாரித்து வெளிப்புறத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் அழகிய சருமத்துடன் கூடிய ஆரோக்கியத்தையும் பெறமுடியும்.

உணவு மட்டுமல்லாது சரியான தூக்கம், அதிக நீர் அருந்துதல், மகிழ்ச்சியான மனநிலை, உடற்பயிற்சி போன்றவையும் தோலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே நாம் எமது உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் தோலின் ஒழுங்கான செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருப்போம்.

உதாரணக்கதை

அன்று விடுமுறை நாள். மதிய உணவு சமைத்துக்கொண்டிருந்தாள் கமலா.

“அம்மா! அம்மா…” அழைத்தபடி தாயை அனுகிய சுமி, “அம்மா! அக்கா முகத்திற்கு ஏதேதோ பூச்சுக்கள் பூசிக்கொண்டிருக்கிறார்.” என்று முறையிட்டாள்.

அதற்கு தாய் கமலாவும், “வீட்டில் தயாரித்த பயத்தம்மா, கடலைமா இவற்றைத்தான் பூசுகிறாள். நீயும் வேண்டுமென்றால் உபயோகித்துப் பார். சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.”

“ஐயோ அம்மா, அது எனக்குத் தெரியாதா? அக்கா வேறு ஏதோ தன் சிநேகிதி தந்​ததென பூசிக்கொண்டிருக்கிறார். வந்து பாருங்கள்.”

கமலாவும் யோசனையுடன் கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்துக்கொண்டிருக்கும் மூத்த மகள் சசியிடம் சென்று பார்த்தவள்,

“ஏன் சசி சும்மாவே உன்னுடைய சருமம் எவ்வளவு அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது என எல்லோருமே ஆசைப்படுகிறார்கள். உனக்கே தெரியும், நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்று. தெரியாத அழகுசாதனங்களை ஏன் பூசுகிறாய். அதில் நிச்சயமாக இரசாயனப் பொருட்கள் கலந்திருக்கும். என்னென்ன பின் விளைவுகளை தரப் போகிறதோ?”

“அம்மா! பயப்படாதீர்கள். என்னுடைய நெருங்கிய சிநேகிதி இதைப் பாவித்து நல்ல பலன் கிடைத்திருக்கிறது. நானே அதை கவனித்திருக்கிறேன். என்னுடைய சருமம் மேலும் பளபளப்பாக இருக்க வேண்டும். நான் அழகுக்கு அழகு சேர்க்கிறேன். இதைப் பார்த்து சுமியும் கேட்கப்போகிறாள். இருந்து பாருங்கள்.”

“அக்கா! எனக்கு வீட்டில் அம்மா தயாரித்துத் தருவதே போதும். நானும் உன்னைப்போல் அழகாகத்தான் இருக்கிறேன். வேறு எதுவும் எனக்கு வேண்டாம்.” என்ற சுமி விலகிச் சென்றுவிட்டாள்.

“என்னவோ எனக்கு இது சரியாகப் படவில்லை. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள், நீங்கள் நினைத்ததைத்தான் செய்வீர்கள். எங்கள் சொல் எங்கே ஏறப்போகிறது? சுமி சிறிய பெண், அவளுக்கு விளங்குகிறது. ‘பேராசை பெருநட்டம்’, ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’, ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற முதுமொழியெல்லாம் படித்துத்தானே வளர்ந்திருக்கிறீர்கள். இதற்குமேல் சொல்வதற்கொன்றுமில்லை. நீங்களாகவே உணர்ந்து நடந்தால் சரி.”

யோசனையுடன் சமையலறைக்கு சென்றுவிட்டாள் கமலா.

தந்தை ஊருக்கு சென்றதால் மூவரும் மதிய உணவுக்குப்பின் அவரவர் தங்கள் வேலைகளில் மூழ்கியிருந்தனர்.

தையல் வேலையில் ஈடுபட்டிருந்த கமலா, மாலை தேநீர் தயாரிப்பதற்காக எழுந்தார். அதே நேரம் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவதில் மும்முரமாக இருந்த சசி,

“அம்மா, இங்கே வாருங்கள். எனக்கு முகம் சிறிது எரிவதுபோல் இருக்கிறது. என்வென்று ஒருமுறை பாருங்கள்.”

“கண்ணாடியில் போய் பார். நான் சொல்லச் சொல்ல கேட்காமல் பூசியது நீ. நீயே பார்.”

“எனக்கு பயமாக இருக்கிறது. சுமி! ஒருமுறை வருகிறாயா?”

மாலை தூக்கத்தில் இருந்த சுமி, தமக்கையின் பதட்டமான குரலில் பயந்து, எழுந்து ஓடி வந்தாள். தாயும் பதறியடித்து வந்து பார்த்தபோது சசியின் முகத்தில் சிறிய சிவந்த தடிப்புகள் தோன்றியிருந்தன. முகத்தைப் பார்க்க அவலட்சணமாக இருந்தது.

அதிர்ச்சியில் உறைந்த சில கணங்களில் சுதாகரித்த கமலா, சுமி! உடனடியாக ஒரு முச்சக்கர வண்டியை அழை, மருத்துவமனைக்குச் செல்வோம். இப்படியே வைத்திருந்தால் இன்னும் மோசமாகப் போகலாம். விரைந்து செல்.”

தாயின் பதட்டத்தில் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சசிக்கு மயக்கம் வரும்போல் இருந்தது. கடவுளே என்னைக் காப்பாற்று. பேராசை என்னை மோசமான நிலைமைக்குத் தள்ளிவிட்டதே. அம்மாவும் எத்தனை முறை கூறினார்கள். கேட்காமல் தட்டிக் கழித்ததற்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது. திகிலுடன் மனம் புலம்ப மூவரும் முச்சக்கர வண்டியில் மருத்துவமனை நோக்கி விரைந்தனர்.

*****

Posted in எண்ணக்குவியல்கள். RSS 2.0 feed.
« படித்ததில் பிடித்தது – தொகுப்பு 134
பதில் தெரியாக் கேள்விகள்… »

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved