குவியல் 5
முகவுரை
வையகத்தில் எப்படி வாழவேண்டும் என்று எளிய முறையில் கூறும் நீதி நூல்கள் எல்லோர் மனதிலும் பதியப்படவேண்டியவை. இவை கூறும் கருத்துக்களை படித்து அறிவது மட்டுமன்றி வாழ்வில் கடைப்பிடிக்கவும் பழகினோமேயானால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் நீதிநூல்களில் கொன்றைவேந்தனும் ஒன்றாகும்.. நீதியை நிலைநிறுத்தும் கொன்றைவேந்தனில் ஐந்தினை தெரிவுசெய்து இங்கு எனது எண்ணங்களை பதிவுசெய்கிறேன்.
குவயல் 5 எண்ணம் 1
கிட்டாதாயின் வெட்டென மற

மனம் ஒரு குரங்கு என்று சொல்வர். எப்போதும் அது அங்கே இங்கே என்று அலைந்து திரியும். கடவுளை வணங்கும்போதும் அதை அடக்கி ஒருநிலைப்படுத்திவிட்டால் ஓரிரு நிமிடங்களில் அது மீண்டும் கட்டவிழ்த்து சென்றுவிடும். எந்நேரமும் அலைபாய்ந்துகொண்டிருக்கும் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது மிகவும் கடினம்.
பலர் உணவு விடயத்தில், ஆடம்பரப்பொருட்களில், அலங்காரப் பொருட்களில், அழகுசாதனப்பொருட்களில், பொழுதுபோக்குகளில் என அவரவர்களுக்கு பிடித்ததில் மனதை கட்டுப்படுத்த முடியாது இருப்பர். எமக்கு எவை தீங்கு விளைவிப்பவை, அநாவசியமானவை எவை, வரவுக்கு மிஞ்சிய செலவை ஏற்படுத்துபவை என்பனவற்றைக் கருத்திற்கொண்டு அவற்றை தவிர்க்கப் பழகிவிட்டால் மனதை அடக்குவதில் பாதி வெற்றி அடைந்தமைக்குச் சமம்.
மீதி வெற்றி எதில் தங்கியுள்ளது என்பதை நோக்கும்போது, எவை எம்மிடம் இல்லையோ அதற்கு ஆசைப்படுவது தப்பில்லை. அதை அடைவதற்கு நாம் நேர்மையான வழியில் முயற்சி செய்யலாம். அடைய முடியாது போனால் கடும் முயற்சி மேற்கொள்ளலாம். ஆனால் பேராசைகொண்டு குறுக்கு வழிகளில் தகாத முறைகளில் அடைய முயற்சிப்பதால் நாம் நினைத்தது நடைபெறாததுடன் தீய பலனை அது எமக்குத் தந்துவிடும். எதைப் பெறுவதற்கு நாம் பாடுபடுகிறோமோ அது எமக்கு தேவையானது என்றால் நேர்வழியும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் அதை எம்மிடம் கொண்டுவந்து சேர்த்துவிடும்.
நாம் ஆசைப்பட்ட ஒரு பொருளோ, ஒரு செயலோ எமக்கு கிடைக்காது அல்லது நடக்காது என்பதை உறுதியாக அறிந்துவிட்டால் அதை மறந்துவிடுவதே சிறந்தது. அதுவே மீதி வெற்றியை எமக்குத் தந்துவிடும். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கும்.
கிடைக்காது என்று அறிந்தபின்பும் அதைப்பற்றி நினைத்து ஏங்குவதும் குறுக்குவழிகளைப்பற்றி சிந்திப்பதும் வாழ்க்கையை நரகத்தில் தள்ளிவிடும். அத்தகைய ஏக்கமே நமது மனதை மட்டுமல்லாது உடலையும் புற்றுநோய் போல சிறிது சிறிதாக அரித்து அழித்துவிடும்.
நீதி நூல்களில் ஒன்றான கொன்றைவேந்தனில் ஔவையார் கூறியதுபோல ஒழுகி வாழ்வது சாலச் சிறந்தது.
கொன்றைவேந்தன் – “கிட்டாதாயின் வெட்டென மற.”
கவிஞர் பத்மதேவன் அவர்களின் விளக்கவுரை – ஒரு பொருளோ ஒரு செயலோ கை கூடாது என உறுதியாகத் தெரிந்துவிட்டால் அந்தப் பொருளையோ அந்தச் செயலையோ அந்தக் கணத்திலேயே வேகமாக மறந்திட வேண்டும்.
உதாரணக்கதை
நேசனும் சிவாவும் பாடசாலையிலும் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் ஒன்றாகப் படித்து இளங்கலை கலைமானிப்பட்டம் பெற்ற நண்பர்கள். இருவரும் படித்த பாடங்களும் அவர்களுடைய பரீட்சை முடிவுகளும் ஒன்றே. படிப்பு முடிந்ததும் இருவரும் வேலை தேடும் படலத்தில் இறங்கிவிட்டார்கள். படித்த படிப்புக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு வேலை வாய்ப்பு இருந்த நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து நேர்முகத்தேர்வுக்கும் சென்றுகொண்டிருந்தார்கள்.
ஒரு வருடமாகியும் அவர்கள் விரும்பிய பதவி கிடைக்கவில்லை. ஊழலும் லஞ்சமும் நிறைந்த இந்த உலகில் தகுதி இருந்தும் தோல்வியையே சந்தித்துக்கொண்டிருந்தனர். நேசனுக்கு நிலைமை தெளிவாக புரிந்துவிட்டது. வீணாக காலம் கடந்துகொண்டிருப்பதுடன் வயதும் போய்க்கொண்டிருப்பது நல்லதல்ல. முதலில் கிடைக்கும் வேலைக்கு செல்வோம். அதிலிருந்து முன்னேறும் வழிகளைப் பார்ப்போம், அதற்கு முதலில் எல்லா பதவிகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டியதுதான் என முடிவெடுத்துவிட்டான். சிவாவுடனும் இதுபற்றி கதைத்து அவனையும் விண்ணப்பிக்கச் சொல்லவேண்டும் என நினைத்தவன், சிவாவுடன் தொடர்புகொண்டு வழமையாக சந்திக்கும் பூங்காவிற்கு வரும்படி கூறினான்.
சோர்வுடன் வந்த சிவா, நேசனின் உற்சாகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டான்.
“நேசா! உன்னைப் பார்த்தால் நீ விரும்பியபடி வேலை கிடைத்துவிட்டது போல் இருக்கிறதே. உன் முகம் பிரகாசமாக இருக்கிறது.”
இருவரும் சந்தித்தால் வேலையைப்பற்றி மட்டும்தான் கதைப்பார்கள். வேறு பொழுதுபோக்குகளுக்கோ புதினங்களுக்கோ இடமில்லை. ஆரம்பத்தில் உற்சாகமாக சந்தித்தவர்கள் நாட்கள் செல்லச் செல்ல சந்தித்த தோல்விகளினால் சோர்வடையத் தொடங்கிவிட்டார்கள்.
“சிவா! உனது முதல் கேள்விக்கு பதில் இல்லை. நீ சொன்ன இரண்டாவது உண்மை. நான் சந்தோசமாக இருக்கிறேன்.”
“எப்படிடா! ஏதாவது மருந்து மாத்திரை எடுத்தாயா? எனக்கும் கொஞ்சம் தருகிறாயா?”
“அதற்குத் தான் அவசரமாக உன்னை வரச் சொன்னேன்.”
“அப்படியா! கொடு கொடு.” எனக் கைகளை நீட்டினான் சிவா.
“இது குடிக்கும் மருந்தல்ல. கேட்கும் மருந்து.”
“என்ன சொல்கிறாய்?”
“நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். அதை நீயும் செய்தால் நம் எதிர்காலம் நன்றாக இருக்கும். நாம் விரும்பும் பதவிக்கு மட்டும் அல்லாமல் எல்லா வேலைகளுக்கும் நான் விண்ணப்பிக்கப் போகிறேன். கிடைப்பதை சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்வோம். அதிலிருந்து முன்னேறப் பார்ப்போம். எப்படி எனது யோசனை?”
“ஏன் இப்படி ஒரு முடிவு?” என்றான் சிவா விருப்பமில்லாமல்.
“இப்படியே போய்க்கொண்டிருந்தால் வயது போய்க்கொண்டிருக்கிறது. அதனால் வாய்ப்புகள் குறைவடையும். என்ன சொல்கிறாய்?”
“இல்லை நேசா, இன்னும் ஒரு வருடம் பார்க்கலாம், முயற்சிப்போமே.”
“நான் முடிவெடுத்துவிட்டேன் சிவா. இனி அதிலிருந்து மாறவேண்டாம் என நினைக்கிறேன்.”
சிவாவிற்கு முயற்சியை கைவிட முடியவில்லை. கிடைக்காதோ என்ற பயம் உள்ளூர இருந்தாலும் விரும்பிய வேலை கிடைப்பதற்கு போராடிப் பார்ப்போம் என நினைத்துவிட்டான்.
“சரி, நீ விரும்பியபடி செய். நான் இன்னும் கொஞ்சக் காலம் முயன்று பார்க்கிறேன்.”
சிவா சோர்வுடனும் நேசன் உற்சாகத்துடனும் பிரிந்து சென்றனர்.
நேசனுக்கு உடனடியாக வேலை கிடைத்துவிட்டது. அதில் திருப்தியுடன் சேர்ந்துவிட்டான்.
சிவா முயன்று கொண்டே இருந்தான்.
மூன்று வருடங்கள் விரைவில் ஓடி மறைந்தன.
நேசன் வேலை செய்யும் நிறுவனத்தில் அடுத்தடுத்து வந்த இரு உயர் பதவிகளுக்கு விண்ணப்பித்து வெற்றியடைந்தான். தேவையான தகுதிகள் இருந்தமையாலும் அந் நிறுவனத்தில் கடமையாற்றுபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் நேசனுக்கு சுலபமாக பதவி உயர்வுகள் கிடைத்துவிட்டன. இனி நேசன் படிப்படியாக முன்னேறி தேவையான மேற்படிப்புகளையும் முடித்து அவன் நினைத்த இடத்தை பிடித்துவிடுவான். தான் விரும்பியது கிடைக்கவில்லை என சோர்ந்து போகாமல் அதைக் கைவிட்டு வேறு பாதையில் அடியெடுத்து வைத்த நேசன் இன்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறான்.
செல்லும் பாதை தோல்விகளைத் தந்தாலும் தனது இலக்கை அடைய அந்தப் பாதையிலேயே முயன்றுகொண்டிருந்த சிவா இப்போது புரிந்துகொண்டான். தொடர் தோல்விகளைத் தந்த அந்த வழியை முன்பே கைவிட்டிருக்க வேண்டும் என்பதையும், வேறு வழிகளினாலும் இலக்கை அடைய முடியும் என்ற உண்மையையும் நேசனுக்குக் கிடைத்த தொடர் வெற்றிகள் உணர்த்திவிட்டன. நேசன் செய்தது போல் அன்றே எனது பிடிவாதத்தைக் கைவிட்டு வேறுவழிகளில் சென்றிருக்கலாம் என நினைக்கத் தொடங்கியவன் அன்றே புதிய பயணத்தை தொடங்கிவிட்டான்.
*****