குவியல் 5 எண்ணம் 2
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

தவறுகள் செய்வது மனித இயல்பு. தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்பவர்களும் இருக்கிறார்கள், தவறு என்று தெரிந்தும் அதை தொடர்ந்து செய்பவர்களும் இருக்கிறார்கள். தாங்கள் செய்யும் தவறுகளை உணராமல் அடுத்தவர்களின் தவறுகளை பார்த்து குறை கூறுவதிலேயே குறியாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
உறவுகளை நல்லவிதமாக பேணுவதற்கு அடுத்தவர் செய்யும் தவறுகளை மன்னிப்பதும் மறப்பதுமே நல்லது. அவர்கள் செய்யும் தொடர் தவறுகள் நம்மைப் பாதிப்பதாக இருந்தால் அவர்களிடமிருந்து சிறிது விலகி இருப்பதே சிறந்தது.
கொன்றைவேந்தனில் ஔவையார் பின்வருமாறு கூறுகிறார்.
கொன்றைவேந்தன் – குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கவிஞர் பத்மதேவனின் விளக்கவுரை – பிறருடைய குற்றத்தை மட்டுமே உற்று நோக்கிக் குறை சொல்லிக் கொண்டிருந்தால் உனக்கு உறவினர் என்று யாரும் இருக்க மாட்டார்கள்.
சுற்றியிருப்பவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்று குறைகளை மட்டுமே தேடிக்கொண்டிருந்தால் அவர்களிடம் இருக்கும் நற்பண்புகள் எம் கண்ணுக்குத் தெரியாமலே போய்விடும். நல்ல உறவுகளை, நண்பர்களை இழக்க நேரிடலாம்.
எல்லோரிடமும் இருக்கும் நற்பண்புகளையும் அவர்கள் செய்யும் நற்செயல்களையும் பார்க்கத் தொடங்கிவிட்டால் தவறுகள் ஒரு பொருட்டாகவே இருக்காது. உறவுகளும் பிரியாது.
பிறரில் குறை காண்போர் முதலில் தமது குறைகளை இனம் கண்டு திருத்தல் வேண்டும்.
ஒருவரில் காணும் குறையானது எம்மை வழிநடத்த உதவுகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
ஒருவர் செய்யும் தவறுக்காக அந்தக் குடும்பத்தையே வெறுப்பது இன்னுமொரு தவறாகும்.
அடுத்தவர் தவறுகளைப் பொருட்படுத்தாது, அவர்களின் நற்பண்புகளை கருத்திற்கொண்டு உறவுகளையும் நட்புகளையும் பேணி இனிதாக வாழ்வோம்.
உதாரணக்கதை
“அப்பா! எப்போதுதான் இதை நிறுத்தப்போகிறீர்கள்?”
ஆதங்கத்துடன் கேட்டாள் சுதா.
“எதை நிறுத்தச் சொல்கிறாய்?”
“எல்லோரையும் குறை கூறிக்கொண்டிருப்பதைத்தான்.”
“உள்ளதைத்தானே சொல்கிறேன். உனக்கே அது தெரியும்.”
“அதைத்தான் ஏன் சொல்கிறீர்கள்? அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்கள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? ஏன் அவற்றை சொல்வதில்லை?”
“எல்லாம் ஒரு எச்சரிக்கைதான். நீங்களும் பாதிக்கப்படக்கூடாது. அவர்களும் திருத்திக் கொள்ளலாம் தானே?.”
“உங்களுக்கு குறையாகத் தெரிவது அவர்களுக்கு அது ஒரு குறையாகவே தெரிவதில்லை. அதை அவர்கள் முன்னிலையில் கூறாது எங்களுக்கு தனிமையில் எச்சரிக்கலாம் அல்லவா? யாருடைய மனமும் புண்படாதிருக்கும்.”
“அப்படிச் சொன்னால்தான் அது எங்களுக்கு பிடிக்கவில்லை என்பது தெரிந்து அடுத்தமுறை அவர்கள் அந்தத் தவறை செய்யமாட்டார்கள்.”
“அடுத்தமுறை அவர்கள் வாந்தால்தானே. முதல் தடவையிலேயே எல்லோருடைய வெறுப்பையும் சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் இல்லாத நேரம் பார்த்துத்தான் எல்லோரும் வருகிறார்கள். நீங்கள் திரும்பி வருமுன் ஓடிவிடுகிறார்கள். என்ன வாழ்க்கை அப்பா இது? மற்றவர்களில் எப்போதும் குற்றம் கண்டுபிடிப்பதே ஒரு குறை என்று ஒருவரும் உங்களுக்கு சொன்னதில்லையா? இன்று என் சிநேகிதியிடம். அவள் இனி வரமாட்டாள்.”
“அதற்கு நான் என்ன செய்வது? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது. குறை இருந்தால் நான் சுட்டிக்காட்டத்தான் செய்வேன். ஏன் உங்களை நான் சொல்வதில்லையா?”
“ஐயோ அப்பா, நாங்கள் வேறு, உறவினர் நண்பர்கள் வேறு. நாங்கள் பொறுத்துப் போவோம். மற்றவர்கள் அனுசரித்துப் போவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். இப்படியே போனால் உங்கள் அம்மா, அண்ணா, தம்பியைத் தவிர வேறு ஒருவரும் எங்களிடம் வரமாட்டார்கள்.”
“குற்றம் குறை இல்லாதவர்கள் வந்து போகிறார்கள்.”
சுதாவுக்கு கோபம் உச்சத்தில் ஏறியது. தன்னை கட்டுப்படுத்தி, இன்றைக்கு இதற்கு ஒரு முடிவுகட்டியே தீரவேண்டும் என முடிவெடுத்தவள்,
“உங்கள் அம்மா, அண்ணா, தங்கை, மருமகள் எல்லோரும் என்னென்ன செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியாது. ஏனென்றால் அவற்றையெல்லாம் ஒரு குறையாக நாங்கள் பார்க்காது அவர்களது நல்ல குணங்களை மட்டுமே கருத்திற்கொண்டு பாசமாகவும் அன்பாகவும் பழகுகின்றோம்.”
“சும்மா சொல்லவேண்டும் என்பதற்காக ஒன்றும் சொல்லவேண்டாம்.”
“அது சரி. உங்கள் பார்வைக்கு அதையெல்லாம் கொண்டுவராதது எங்கள் தப்புத்தான்.”
“அப்படி என்னதான் நடக்கிறது என்று சொல் பார்ப்போம்.”
“வரிசையாகச் சொல்கிறேன் கேளுங்கள்….”
“சுதா! சுதா! இங்கே வா…” நிலைமை கடுமையாகப் போவதை தாய் பார்வதி உணர்ந்து மகளை அழைத்தாள்.
“பாருங்கள் உங்கள் தர்மபத்தினி உங்கள் உறவுகளை காப்பாற்றுகிறார்களாம். அப்பா, ஒவ்வொருமுறையும் அப்பாச்சி இங்கு வந்திருக்கும் போது சமையலறையை தன் கைவசம் எடுத்துவிடுவார்கள். அது நல்ல விஷயம் தான். அம்மாவுக்கு ஓய்வு கிடைத்தமாதிரி இருக்கும். ஆனால் அவர் செய்யும் வேலை மனதிற்குக் கஷ்டமாக இருக்கும். அளவுக்கு அதிகமாக உணவை சமைத்து மிஞ்சுவதை பழையது உடம்புக்கு ஆகாது என கொட்டிவிடுவார்கள். அம்மாவும் அளவுகளை சாடை மாடையாகச் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அதனால் இப்போதெல்லாம் வீட்டிலிருப்பவர்களில் ஓரிருவருக்கு இன்று சாப்பாடு தேவையில்லை எனக் கூறி அளவை குறைத்துவிடுவார்கள். அதுவே எல்லோருக்கும் போதுமானதாக இருக்கும்.
அடுத்தபடியாக அத்தையும் மாதுரியும், எனது அழகுசாதனப் பொருட்களை கண்டபடி பாவித்து விரைவில் முடித்துவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் வீட்டில் அளவாகப் பாவிப்பதை நானே பார்த்திருக்கிறேன். அதனால் இப்போதெல்லாம் முடியும் தருவாயில் இருப்பவற்றை கவனமாக வைத்திருந்து அவர்கள் வரும்போது பாவிப்பதற்கு வைத்துவிடுவேன். அதனால் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. எப்படி எனது யோசனை?”
“சரி, சரி அப்புறம் அண்ணாவைப் பற்றி என்ன?” திகிலுடன் வினவினார் சுந்தரம்.
“நீங்கள் தானே கண்டும் காணாத மாதிரி இருக்கிறீர்கள். வீட்டிற்குள் வருமுன் வெளியே இருக்கும் குழாயில் கை கால் கழுவி வரவேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தை பெரியப்பா கடைப்பிடிக்கிறாரா? அவருக்கு மட்டும் என்ன விதிவிலக்கு? அவரின் கை கால்களில் கிருமிகள் வந்து ஒட்டாதோ?”
“அது, அது…….”
“இதையெல்லாம் நாங்கள் கண்டும் காணாது சமாளித்து சந்தோஷமாக பழகுகிறோமா இல்லையா? நீங்கள் ஏன் அப்பா இப்படி இருக்கிறீர்கள்? உங்களால் அம்மா வீட்டிலிருந்து ஒருவரும் வருவதில்லை. கைபேசியிலே சுகம் அறிந்து கொள்கிறார்கள். இனிமேலாவது இப்படி எல்லாம் குற்றம் கண்டு முகத்திற்கு நேராக சொல்லாதீர்கள்.”
“சரி, சரி நான் பார்த்துக்கொள்கிறேன். நீ போய் படிக்கின்ற வேலையைப் பார்.” என சமாளித்தவர், சுதா அங்கிருந்து அகன்றதை உறுதிப்படுத்திக்கொண்டு கைபேசியை எடுத்து,
“சிவராமா! என்னடா இந்தப்பக்கம் ஆளையே காணோம். உன் அக்காவை மறந்துவிட்டாயா? நீ முன்பு கொண்டுவருவாயே ஒரு பலகாரம், உன் அம்மா, அத்தை செய்தது என்று, இன்று மாலை அதைக் கொண்டுவருகிறாயா? ….. ஆமாம் அதுதான். …… சரி நான் பார்த்துக்கொண்டிருப்பேன்”
தனக்குத் தெரியாமல் வீட்டில் நடந்துகொண்டிருக்கும் விஷயங்களை அறிந்தவர் மனம் குறுகுறுத்தது. இந்த சின்னப்பிள்ளைக்கு இருக்கும் அறிவு எனக்கில்லாமல் போய்விட்டதே என கவலைப்பட்டவர், எல்லோரிடமும் சுமுகமாக கதைத்து சமாதானக்கொடி ஏற்ற ஆயத்தமாகிவிட்டார்.
*****