குவியல் 8
நாட்டையும் நாட்டு மக்களையும் மேம்படுத்தும் நோக்கிலும்; சகல விதங்களிலும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும்; நாட்டு வளங்களும் உயிரினங்களும் அழியாதிருக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கும்; சமயம், கலை, கலாச்சாரத்தையும் சூழலையும் பேணுவதற்கும் ஒரு நாட்டில் பல துறைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மருத்துவம், கல்வி, விசவாயம், நீதி, நிதி, பொறியியல், கட்டுமானம், பாதுகாப்பு, வியாபாரம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, போக்குவரத்து, அரசியல், சுற்றாடல், சமயம், கலாச்சாரம், சுற்றுலா, பொழுதுபோக்கு எனப் பல துறைகள் இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் வேறுபாடின்றி மக்கள் பல்வேறு துறைகளில் முன்னேறிச் சென்று பல சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு துறையிலும் நேரடியாக தொழில்புரிவோரும் மறைமுகமாக தொழில்புரிவோரும் கடமையாற்றுகின்றனர். உதாரணமாக மருத்துவத் துறையில் மருத்துவர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தாதியர், மருந்தாளர்கள் போன்றோர் நேரடி தொடர்புடையவர்கள். மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துகள் விற்பனை நிலையங்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் போன்றவை மறைமுக தொடர்புடையவை ஆகும். உயர் பட்டப்படிப்புகளையும் சிறப்புப்பட்டங்களையும் பயிற்சிகளையும் பெற்ற துறைசார் நிபுணர்கள் (Subject Matter Specialist – SMS) ஒவ்வொரு துறையிலும் கடமையாற்றுகின்றனர். இவர்கள் காலத்திற்குக் காலம் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இவற்றில் சில துறைகள் சேவை மனப்பான்மை உடையவை ஆகும். இத்துறைகளில் சில துறைகளைத் தெரிவுசெய்து, அவற்றைப்பற்றிய எனது எண்ணங்களை இங்கு பகிர்கிறேன்.
குவியல் 8 எண்ணம் 1
மருத்துவத்துறை

எமக்குத் தெரிந்தளவில் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஓமியோபதி மருத்துவம், யுனானி மருத்துவம் என மருத்துவக் கல்வி பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகின்றன. மருத்துவம் என்பது பல்வேறு பதவிகளைக் கொண்ட துறையாகும். இத்துறையில் மருத்துவர், பேராசிரியர், உடற்பயிற்சி/உடலியக்க மருத்துவர் (Physiotherapist), ஊடுகதிரியலாளர்கள் (x-ray), தாதியர் (Nurse), மருந்தாளர் (Pharmacist), மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் (Medical Laboratory Technicians}, மருத்துவச்சி (Midwife) மருத்துவப் பணியாளர் (Attendant) எனப் பலர் கடமையாற்றுகின்றனர். இவர்களில் சிலர் தங்கள் வேலை தொடர்பான சிறப்புப் படிப்புகளையும் பயிற்சிகளையும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்று துறைசார் நிபுணர்களாகத் திகழ்கின்றனர்.
மருத்துவர்கள் – இதயம், தோல், கண், காது-மூக்கு-தொண்டை, சிறுநீரகம், நரம்பியல், மனநலம், மகப்பேறு, குழந்தை நலம், புற்று நோய், தொற்று நோய் போன்ற பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்று சேவையாற்றி வருகின்றனர். மருத்துவத்துறையுள் பல் மருத்துவமும் கால்நடை மருத்துவமும் அடங்கும். சேவைமனப்பான்மை மிக்கவர்களாகக் காணப்படும் மருத்துறையில் இவர்கள் அன்பே உருவானவர்களாகவும், கருணையின் வடிவினராகவும், பொறுமையின் சிகரமாகவும், சாந்தம், நிதானம் போன்ற குணங்களுடன் தேவையான இடத்தில் துரிதமாக முடிவெடுத்து செயற்படுபவர்களாகவும் இருத்தல் நன்று.
உயிர்களைக் காப்பது மருத்துவர்களின் கடமையாதலால் இவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்றால் மிகையாகாது. அர்ப்பணிப்புடன் செயற்படுவது மருத்துவர்களின் பண்பாக இருத்தல் அவசியமாகும். மருத்துவத் துறையில் கடமையாற்றுபவர்கள் காலம் நேரம் பார்க்காது, சூழ்நிலைகளுக்கேற்றவாறு தம்மைத் தயார்படுத்திக்கொள்வது முக்கியமாகும். நோய்களைக் கண்டுபிடிப்பது, குணப்படுத்துவது மட்டுமன்றி அவை வராமலிருக்கத் தடுப்பது என்பவையும் மருத்துவத் துறையின் கடமைகளே.
தற்காலத்தில் வளர்ந்துவரும் அறிவியலில் நவீன கண்டுபிடிப்புக்களில் ஆங்கில மருத்துவம் நன்கு முன்னேறி பல சாதனைகளை படைத்து வருகின்றது.
வள்ளுவப் பெருந்தகை, கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சாதாரணமாக ஒரு மருத்துவர் எப்படிச் செயற்படவேண்டும் என பின்வரும் குறளின் மூலம் கூறியுள்ளார்.
குறள் – உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
சாலமன் பாப்பையா அவர்களின் விளக்கவுரை – மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.
பிரிதொரு குறளில் திருவள்ளுவர் பின்வருமாறு கூறியுள்ளார்.
குறள் – நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
சாலமன் பாப்பையா அவர்களின் விளக்கவுரை – நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.
ஆடம்பரவாழ்வில் ஈர்க்கப்படுவதால் பணத்தேவை அதிகரிக்கின்றது. அதனால் குறுக்கு வழிகளில் சம்பாதிக்கத் தொடங்கிவிட்ட சமூகத்தில் போலிப் பொருட்கள் மட்டுமன்றி போலித் தகுதிகளையும் ஏற்படுத்தி சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அந்த வரிசையில் போலி மருத்துவர்களும் மருந்தாளர்களும் அடங்கியுள்ளனர். அத்துடன் காலாவதியான மருந்துவகைகள் மீள்பொதி செய்யப்பட்டு விற்கக்கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படலாம். மருத்துவம் தொடர்பில் அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் செயற்படுகின்றது என்றாலும் மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
பாமர மக்களுக்கு அரசு இலவச மருத்துவ வசதிகளை நாடு முழுவதும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விடயமாகும்.
பெற்றோரின் நிர்ப்பந்தத்தினாலும் குடும்பத்தின் மதிப்பையும் தராதரத்தையும் உயர்த்தும் நோக்குடனும் மருத்துவத்துறையை தேர்வு செய்தல் ஆனது பிள்ளைகளது எதிர்காலத்தை மட்டுமல்லாது மக்களையும் பாதிக்கும் செயலாகலாம்.
மருத்துவத்துறையில் சுயவிருப்பத்துடன் இணைவதே சிறந்த செயலாகும். ஒரு நாட்டின் பிரஜைகள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மருத்துவத் துறை மிக முக்கிய பங்கினை வகிக்கிறது என்பது யாவரும் அறிந்ததே.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”.
உதாரணக்கதை
அன்று காலை,
“கலா, உனக்கும் வயது ஏறிக்கொண்டு போகிறது. உனது அக்காவும் தங்கையும் திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் சந்தோஷமாக இருக்கிறார்கள். நீயும் இந்த திருமணத்திற்கு சம்மதித்துவிட்டால் நானும் மகிழ்ச்சியாக எஞ்சிய காலத்தை கடத்திவிடுவேன்.”
அன்றைய புலம்பலை ஆரம்பித்துவிட்டாள் கற்பகம். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வரன்கள் புலம்பலில் இடம்பெறுவார்கள். கணவனை இழந்து தனியாளாக நின்று மூன்று பெண்களையும் ஆளாக்கி விட்டாள். கணவன் விட்டுச் சென்ற பணமும் சொத்தும் அவளுக்கு பெரிதும் உதவியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தன. சேவை மனப்பான்மை மிக்க கலாவும் தாதியாக வேண்டும் என்ற தனது இலட்சியத்தை நிறைவேற்றி தற்போது தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியராகக் கடமையாற்றுவதுடன் ஒரு பிரபலமான வைத்தியசாலையிலும் மேற்பார்வை செய்துகொண்டிருக்கின்றாள். திருமணம் தனது சேவையைப் பாதித்துவிடுமோ என்ற பயத்தில் தேடி வரும் வரன்களை எல்லாம் தட்டிக்கழித்துக்கொண்டிருக்கிறாள். தாதியருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து சிறந்த சேவை மனப்பான்மையுள்ள தாதியரை உருவாக்கவேண்டும் என்பதே தனது கடமையாக மேற்கொண்டுள்ளாள்.
“அம்மா! எத்தனை தடவை சொன்னாலும் நீங்கள் கேட்கப்போவதில்லை. நான் திருமணம் செய்துகொண்டால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், நான் துன்பத்தில் உழலவேண்டிய சூழ்நிலை உருவாகலாம். இறுதியில் எனது வேலையை விட்டு ஒரு நடைப்பிணமாகத்தான் வாழவேண்டும். சொன்னால் புரிந்துகொள்ளுங்கள் அம்மா.”
“எனக்கு எல்லாம் புரிகிறது. அப்பா நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் இருந்தபோது அங்கு தாதியர் அவரை ஒழுங்காகப் பார்க்கவில்லை என்பதை அவதானித்து உனது இலட்சியத்தை தீர்மானித்தவள் நீ. நான் உன்னை பாழுங்கிணற்றிலா தள்ளிவிடப் பார்க்கிறேன். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்மணி உனது குணங்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு தனது மகனுக்கு நீதான் ஏற்ற மனைவி என உணர்ந்துதான் என்னை சந்தித்து கேட்கிறார்கள். அவருடைய மகன் ஒரு தொழிலதிபர். அவரும் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்கிறவர். திருமணம் தனது முன்னேற்றத்தை தடுத்துவிடுமோ என்ற பயத்தில் தட்டிக்கழித்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் இருவரும் கோவிலில் சந்தித்து நீண்ட நேரம் கதைத்ததில் நீங்கள் இருவரும் மிகவும் பொருத்தமானவர்கள் என்பதை தெரிந்துகொண்டோம்.” என்றாள் கற்பகம் ஆவலுடன்.
“அப்புறம் என்ன, சாதகப் பொருத்தத்தையும் பார்த்துவிட வேண்டியதுதானே.” கிண்டலடித்தாள் கலா.
“அடுத்த சந்திப்பில் அதையும் பரிமாறி பார்த்துவிட்டோம். எண்பது வீதம் பொருத்தம். முக்கிய பொருத்தங்கள் உத்தமம். அது மட்டுமல்ல வசியப் பொருத்தமும் இருக்கிறது.” ஆச்சரித்தோடு கூறினாள் கற்பகம்.
“அதிலென்ன ஆச்சர்யமும் துள்ளலும் இருக்கிறது.” என்ற கேள்வியுடன் தாயைப் பார்த்தாள் கலா.
“வசியப் பொருத்தம் இலகுவில் ஒருவருக்கும் அமையாது. அதுதான் ஆச்சர்யமும் சந்தோஷமும். அதனால் இந்த சம்பந்தத்தை நான் விடுவதாக இல்லை. அவர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.” கெஞ்சினாள் கற்பகம்.
கலாவுக்கும் வசியப் பொருத்தத்தைப் பற்றித் தெரியும். சிநேகிதிகள் கதைக்கும்போது இதைப்பற்றியும் கதைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் இருவருக்கும் நன்றாக ஒத்துப்போகும் வாய்ப்பு அதிகம். பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. எனது கடமையும் பாதிக்கப்படாதிருக்கும் என்றும் நம்பலாம். இப்படி பல யோசனைகள் மனதில் தோன்றியதால் கலா,
“முதலில் அவர்களது மகனின் சம்மதத்தை அறியுங்கள். அப்புறம் பார்ப்போம்.” என்றாள்.
வைத்தியசாலையில் கலாவைப் பார்த்து அவர்தான் இந்தப் பேச்சை ஆரம்பித்ததே. கலாவுடைய இலட்சியம் கடமையுணர்வு என்பவையெல்லாம் தெரிந்துதான் விருப்பப்பட்டிருக்கிறார்கள். உள்ளூர சிரித்தபடி,
“அவரிடம் கேட்டுவிட்டார்கள். உன்னை சந்தித்து கதைத்தபின் முடிவு கூறுவதாகச் சொல்லிவிட்டார். அதனால் நீங்கள் இருவரும் சந்தித்து கதையுங்கள். எங்கு எப்போது சந்தித்து கதைப்பது என்பதை தீர்மானிக்க உனது கைபேசி இலக்கத்தை அவரிடம் கொடுக்கட்டுமா?” என்றாள் கற்பகம் தயக்கத்துடனும் நம்பிக்கையுடன்.
“என்னமோ செய்யுங்கள்.” என்று அனுமதி கொடுத்தாள், சிறந்த தாதியருக்கு முன்னுதாரணமாகத் திகழும் கலா.
*****