
யானை பேசுகிறது
நான் மிகவும் பலசாலி. மனிதர்களால் சுமக்க முடியாத பாரம் மிக்க பொருட்களை என்னால் தூக்கிச் செல்ல முடியும். எனது பலம் வாய்ந்த தும்பிக்கை அதற்கு உதவுகிறது. நாங்கள் தும்பிக்கை மூலமே உணவும் நீரும் உட்கொள்கிறோம். தாவரங்களே எமது உணவு. மரக்கிளைகளை முறித்து உணவைப் பெறுவதற்கு தும்பிக்கையை பயன்படுத்துவோம். தும்பிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடுவோம். வெப்பத்தில் இருந்தும், பூச்சிக்கடியிலிருந்தும் எம்மைப் பாதுகாப்பதற்கு தும்பிக்கையால் சேற்றை அள்ளி உடம்பில் பூசிக் கொள்வோம்.
நீண்ட நாட்கள் வாழக்கூடிய நாங்கள் செழிப்பான காடுகளில் குடும்பம் குடும்பமாக வாழ்கிறோம். ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாகவும் உதவியாகவும் இருப்போம். நாங்கள் 22 மாதங்கள் கருவைச் சுமக்கிறோம். எமது குட்டிகளுக்கு பாலூட்டி கொஞ்சி விளையாடுவோம். எங்களிடம் அன்பு காட்டுபவர்களை நாங்கள் ஒரு காலமும் மறக்க மாட்டோம். பத்து, இருபது வருடங்கள் பார்க்காமல் இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு எமது மகிழ்ச்சியை தெரிவிப்போம்.
எங்களில் ஆண் யானையை களிறு என்றும் பெண் யானையை பிடி என்றும் குட்டியை கன்று, குட்டி என்றும் அழைப்பர். நாங்கள் எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர். எங்களில் ஆண்களுக்கு இரண்டு நீண்ட தந்தங்கள் வெளியே நீண்டு வளர்ந்திருக்கும். அவை எதிரியுடன் சண்டையிடவும், நீர்நிலைகளைத் தாண்டி குட்டிகளை தூக்கிச் செல்லவும் உதவுகின்றன.
எங்களுக்கென்று சில மொழிகள் உள்ளன. அதைச் சொல்லியே மனிதர்கள் எங்களைப் பழக்கப்படுத்திக்கொள்கின்றனர். பாரமான பொருட்களை சுமந்து செல்வதற்கு எங்களை பயன்படுத்துகின்றனர். மிக வேகமாக ஓடக்கூடிய நாங்கள் மன்னராட்சிக் காலத்தில் யானைப் படையாகப் போரில் கலந்து எதிரிகளை அழித்திருக்கின்றோம். எம்மில் ஒன்றைத் தெரிவுசெய்து அரசனின் பட்டத்து யானை என அலங்கரித்து மரியாதை செலுத்துவர். திருவிழாக் காலங்களில் தெய்வங்களை சுமந்து செல்வதற்கும் எங்களை அலங்கரித்து பயன்படுத்துவர்.
இப்படியாக மனிதர்களுடன் சிநேகமாக வாழ்ந்த எம்மை பெறுமதிமிக்க தந்தங்களுக்காக பேராசை கொண்ட மனிதர்கள் எம்மை இன்று கொன்று அழிக்கின்றனர். மனிதர்கள் எமது எதிரிகளாக மாறிவிட்டனர். எதிரிகளை அழிக்கத் தயங்காத எங்களை தீங்கு செய்யும் விலங்காக மாற்றிவிடாதீர்கள். எங்களை அமைதியாக வாழ விடுங்கள்.
*****