தனி மனிதர்கள் சேர்ந்த தொகுதியே சமுதாயம்.
ஒரு தனி மனிதனின் தீய நவடிக்கை அவனது குடும்பத்தைப் பாதிக்கின்றது.
அவனைச் சுற்றி இருப்பவர்களை அவனது வழிக்கு இழுக்கின்றது.
இதனால் ஒரு குழு உருவாகி சீர்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.
இது சமுதாயத்தையே பாதிக்கின்றது அன்றி இந்த அவலங்களுக்கு காரணம் சமுதாயம் அல்ல.
சமுதாயத்தில் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல. அதே சமயம் எல்லோரும் நல்லவர்களும் அல்ல.
ஒவ்வொரு மனிதனுள்ளும் மனிதத்தன்மையும் இருக்கின்றது, மிருகத்தன்மையும் இருக்கின்றது.
இதில் எது அவனிடத்தில் மேலோங்கி இருக்கிறதோ அதற்கேற்றவாறு அவனது நடவடிக்கைகள் இருக்கும்.
சிறு வயது முதலே பெற்றோரின் அன்பிலும், வழிகாட்டலிலும், அதிக கவனிப்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல சமூகத்தில் இணைந்து மனிதத்தன்மை உள்ளவர்களாக காணப்படுகிறார்கள்.
வீட்டில் இவை எதுவும் கிடைக்காத குழந்தைகள் அதிஷ்டவசமாக நல்ல நண்பர்கள் கிடைக்கும்போது தப்பிவிடுகிறார்கள்.
தூரதிஷ்டவசமாக தீய நண்பர்களின் சேர்க்கையினால் தடம் மாறிப்போகிறார்கள். அவர்களுக்கு நல்லது கெட்டது பிரித்தறியத் தெரிவதில்லை.
புகைத்தல், மது, போதைப் பழக்கங்கள் ஏற்படுகிறது. மிருகத்தன்மை மேலோங்கி நிற்கிறது. இது சமுதாய சீர்கேடான விடயங்களில் ஈடுபடவைக்கிறது.
கைபேசி, தொலைக்காட்சி, வலைப்பின்னல் என இந்த நவீன யுகத்தில் கிடைக்கும் வசதிகளில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.
நல்ல வளர்ப்பில் வளரும் பிள்ளைகளும், நல்ல தோழர்களுடன் பழகும் பிள்ளைகளும் எல்லாவற்றிலும் நல்ல விடயங்களைக் காணும் பக்குவத்தைக் கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு மனிதனும் நல்லது, கெட்டது பிரித்தறிந்து, பொறுப்புணர்வுடனும் மனிதத்தன்மையுடனும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் குடும்பம் மட்டுமல்ல, சமுதாயமே பாதிப்படையாது என்பதில் ஐயமில்லை.
இதில் பெற்றோர்களின் பங்கே முக்கியமாகும்.
எனவே இன்றைய சமுதாய அவலங்களுக்கு காரணம் தனி மனிதனே என்பது எனது கருத்தாகும்.