காதல் திருமணத்தை சொந்தங்கள் மற்றும் சமூகம் அங்கீகரிக்கவில்லை என்பதே எனது கருத்து.
சாதி, மதம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் காதல் திருமணங்களில் சொந்தங்களோ சமூகமோ அக்கறைகொள்ள மாட்டார்கள்.
பெற்றோர்தான் குணம், குடும்பப் பின்னணி, வருமானம்/சீதனம், சீர்வரிசை என்பவை குறித்து ஆராய்ந்து ஒத்துவந்தால் அங்கீகரிப்பார்கள் இல்லாவிட்டால் எதிர்ப்பார்கள்.
மதம் வேறுவேறு ஆயின் பொதுவாக சமூகம் அக்கறை கொள்ளாது, ஆனால் சொந்தங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சாதி வேறாயின் சொந்தங்களும் சமூகமும் சேர்ந்து எதிர்த்து நிற்கும்.
இந்த நவீன யுகத்தில் எத்தனை மாற்றங்கள் ஏற்ப்பட்டாலும் எங்கள் தமிழ் சமூகம், சாதி/மதம் பாகுபாடில்லாமல் பழகினாலும், திருமணம் என்று வரும்போது பழமைவாதிகளாகவே மாறிவிடுவார்கள்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக விட்டுக்கொடுக்கும் எண்ணம் இருந்தாலும், சொந்தங்களுக்கும் சமூகத்திற்கும் பயந்து அங்கீகரிக்க மாட்டார்கள். எல்லோரும் தங்களை விலக்கி வைத்து விடுவார்களோ மற்றப் பிள்ளைகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடுமோ என்ற பயமே காரணம்.
என்னதான் காதல் திருமணத்தில் எல்லாப் பொருத்தங்களும் இருந்தாலும் “வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா” என்ற சினிமா பாடலுக்கிணங்க, இந்த சமூகம் பொறாமையால் ஏதாவது நொண்டிக் காரணங்கள் கூறி மனதை நோகச் செய்துகொண்டே இருக்கும்.
எனவே காதல் திருமணத்தை சொந்தங்கள் மற்றும் சமூகம் அங்கீகரிக்கவில்லை என்று நான் கருதுகிறேன்.