பொதுவாக பெண்கள் சேலை கட்டுவதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் சூழ்நிலைகளும் தேவைகளும் அவர்களை சேலை கட்டவிடாமல் தடுக்கிறது.
முன்பு பெண்கள் கல்வியை குறிப்பிட்ட நிலைக்குப்பின் தொடருவதில்லை. விஷேட வைபவங்களுக்கும் – திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் … – கோவிலுக்கும்தான் வெளியே செல்வார்கள். ஆனால் இப்போது பெண்கள் வீட்டில் அடைந்திருப்பதில்லை வெளித் தேவைகளுக்கும் உத்தியோகத்திற்கும் வெளியே செல்லத் தொடங்கிவிட்டார்கள். கல்வியும் ஆண்களுக்கு நிகராகக் கற்கிறார்கள். இத்தகைய தேவைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் அவர்கள் இலகு உடைகளையே நாடுகிறார்கள்.
இலகுவான உடைகள் எனும்போது சுடிதார் வகைகளைக் குறிப்பிடலாம். இந்த உடைகளை விரைவாக அணிய முடிகிறது. அவசரமாக ஒரு இடத்திற்கு செல்வதற்கு மிகக் குறைந்த நேரத்தில் தயாராக முடிகிறது. உடை விலகியிருக்கிறதா என்ற கவலையின்றி வேலைகளைக் கவனிக்க முடிகிறது. குழந்தைகளுடன் செல்லும்போது அவர்களை பராமரிக்க வசதியாக இருக்கிறது. பிரயாணங்களின் போதும் வசதியாக இருக்கிறது. கோடை காலத்தில் சுகமாக இருக்கிறது. தோய்த்து உலர்த்துவது இலகுவாக இருக்கிறது. செலவும் குறைவு. அதுமட்டுமல்ல, தேவையில்லாத சலனங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது. இப்படி பலப் பல காரணங்களினால் பெண்கள் சேலை கட்டுவதை தவிர்க்க வேண்டியுள்ளது.
ஆனால் விஷேட வைபவங்களுக்கும் கோவில்களுக்கும் பெண்கள் விதம் விதமாக சேலை கட்டி தங்கள் ஆசையை நிறைவேற்றுகிறார்கள்.