ஆண் பெண் இன பாகுபாடு இன்றும் சமூகத்தில் நிலவுகிறது என்பதே எனது கருத்தாகும். இது தவிர்க்க முடியாதது. இருபாலாரும் உடலமைப்பிலிருந்து உணர்வுகள் உட்பட கடமைகள் வரை முற்றிலும் வேறுபட்டிருக்கிறார்கள்.
குழந்தையை கருவிலே சுமந்து, பெற்று, அது தானாக செயற்படும்வரை கண்ணுக்குள் வைத்து பாதுகாத்து, வளர்ப்பது பெண்களின் கடமை. அதற்கேற்றவாறே அவர்களின் உடலமைப்பும் படைக்கப்பட்டுள்ளது. இதை யாராலும் மாற்றமுடியாது. அத்துடன் ஆண்களாலும் முடியாது. வீட்டு நிர்வாகமும் (சமையல், சுத்தம், அலங்காரம், …) பெண்களுக்குரியதாகவே இருக்கிறது.
சம்பாதிப்பதும் வெளித்தேவைகளை கவனித்து குடும்பத்தின் பணத்தேவையை பூர்த்திசெய்வது ஆண்களின் கடமை. வெளி நிர்வாகம் ஆண்களுக்குரியது.
இதுவே காலம் காலமாக நடந்துவருகிறது.
இன்று பெண்களும் ஆண்களுக்கு நிகராக வெளிவேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். மன்னராட்சிக் காலத்திலேயே பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஆட்சி செய்திருக்கிறார்கள், போர் புரிந்திருக்கிறார்கள். இன்றும் அவர்கள் ஆண்களுக்கு நிகராக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. தங்களாலும் முடியும் என்று பல சாதனைகள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இச் சூழ்நிலையில் புரிந்துணர்வுடன் பெண்களுக்குரிய வீட்டு நிர்வாகத்தில் உதவி செய்யும் ஆண்களும் இருக்கிறார்கள். என்னதான் சாதனைகள் செய்தாலும் நீ ஒரு பெண் வீட்டு நிர்வாகமும் முழுவதும் நீதான் பார்க்கவேண்டும் என செயற்படும் ஒருசில ஆண்கள் இன்றும் இருக்கிறார்கள். இப்படியானவர்கள் வீட்டு வேலைகளில் உதவுவதை கௌரவ குறைச்சலாக நினைப்பதுடன் உதவி செய்பவர்களையும் கேலி செய்து தடுத்துவிடுகிறார்கள்.
மேலும் கற்பை நோக்கும்போது, இருபாலாருக்கும் உள்ளது என்றாலும் அதன் மாற்றங்கள் பெண்களிடமே ஏற்படுகிறது. இதனால் சில ஆண்கள் கவலையின்றி, பயமின்றி தைரியமாக பெண்களை சீரழிக்கிறார்கள். அதனால் பெண்கள் பயத்துடனும் அவதானமாகவும் இருக்கவேண்டியுள்ளது. சுதந்திரமாக நடமாட முடியாது. இதனை தமக்கு சாதகமாகக்கொண்டு ஒரு சில குடும்பங்களில் பெண்கள் அடிமைகளாக இருக்கப் பிறந்தவர்கள் என்று அடக்கி வைக்கிறார்கள். அதை தகர்த்தெறிந்து வெளியே வந்தால் அவளுக்கு பாதுகாப்பு இல்லை. அப்படியான பெண்கள் அடிமைகளாக வாழவேண்டியிருக்கிறது.
பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பதில் சிரமம், வரதட்சணை போன்ற கஷ்டங்களால் கருவிலேயே அழிக்கும் கொடுமை இன பாகுபாட்டின் உச்சகட்டம்.