இரு உணவு வகைகளிலுமே சத்துக்கள் இருந்தாலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பது சைவ உணவு வகைகளிலேயே. இலகுவாக சமிபாடடைவதும் அவை தான்.
சுகயீனத்திற்காக மருத்துவரிடம் சென்றால், அவர் மருந்துகளை கொடுத்துவிட்டு இறுதியாக தினமும் ஏதாவது ஒரு கீரை வகையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வார்.
குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தபின் தான் அசைவ உணவு கொடுக்கிறோம். அதேபோல முதியவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதின் பின் அசைவ உணவை தவிர்க்கிறோம். காரணம் அசைவ உணவு சமிபாடடைய தாமதம், கடினம் என்பதாலேயே.
அசைவ உணவுகளில் உள்ள எல்லா சத்துக்களும் சைவ உணவுகளில் தாராளமாக இருக்கின்றன. ஆனால் சைவ உணவில் கிடைக்கும் எல்லாவித சத்தும் அசைவ உணவில் கிடைப்பதில்லை. உதாரணமாக உடலிலுள்ள தேவையில்லாத, சமிபாடடைய முடியாத பொருட்களை அகற்ற நார்ச்சத்து அதிகமுள்ள வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணி, சுரைக்காய் உதவுகின்றன. நார்ச்சத்து அசைவ உணவில் மிக மிக குறைவு.
சுகயீனமாக இருக்கும் தருணங்களில் சைவ உணவே உண்ணவேண்டும். சமிபாடடைவது இலகு என்பதுடன் நோய்களை குணமாக்கும் மருத்துவ குணங்களும் சைவ உணவிலே கிடைப்பதே காரணம்.
அசைவ உணவுகள், சமிபாடு அடையச்செய்யும் உறுப்புக்களுக்கு அதிக வேலை கொடுப்பதால் அதிக சக்தி விரயமாவதுடன் பழுதடையவும் செய்கிறது. நாம் அன்றாடம் உண்ணும் மரக்கறி வகைகளும் கீரை வகைகளும் உடலுக்கு தேவையான சத்துக்களையும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வலிமையையும் கொடுக்கிறது.
அசைவ உணவில் உடலுக்கு கேடுதரும் கொழுப்பு நிறைந்து காணப்படுகிறது. இவை ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகியவற்றை எதிர்பாராத நேரத்தில் தந்துவிடும். எனவே அவற்றை அளவோடுதான் உண்ணவேண்டும். ஆனால் மரக்கறி, கீரை வகைகளை வேண்டிய அளவு, கூடுதலாகவும் உண்பதால் நன்மையே அன்றி தீமை இல்லை.
உடலுக்கு தேவையான காபோவைதரேற்று, அசைவ உணவு அதிகம் உண்பவர்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது.
மரக்கறி வகையில் உள்ள மருத்துவக்குணங்கள் சில,
வெண்டைக்காய் – அதிக கொழுப்பை குறைக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
வல்லாரை, பொன்னாங்காணி – கண் பார்வைக்கு சிறந்தது. ஞாபக சக்தியையும் தருகிறது.
தக்காளி, சோயா – கொழுப்பை குறைப்பதுடன் புற்றுநோயையும் தடுக்கிறது.
உருளைக்கிழங்கு – உணவுப் பாதையில் சமிபாட்டுக்கு உதவும் பக்றீரியாக்களை வளர்த்துவிடுகிறது.
பாகற்காய் – நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
கரட் – புற்றுநோயை தடுக்கிறது. கண் பார்வைக்கு உதவுவதுடன் முகத்திற்கு பொலிவையும் தருகிறது.
பீட்ரூட் – புற்றுநோய் பரவுவதை தடுக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது.
இப்படி கூறிக்கொண்டே போகலாம்.
சைவ உணவுகள் உடலுக்கு வலிமையோடு பொலிவையும் தருகிறது. அத்துடன் மனதிற்கு சாந்தியையும் தருகிறது என்பதை மறுக்க முடியாது.
எனவே சைவ உணவு வகையே சிறந்தது, ஆரோக்கியமானது என்பது எனது கருத்தாகும்.