ஈசனது நெற்றிக்கண்கள் தந்த சிவகுமாரா
கார்த்திகைப் பெண்கள் வளர்த்த கார்த்திகேயா
பார்வதியன்னை அள்ளி அணைத்த பார்வதி நந்தனா
நம்பியோர்க்கு துணையாயிருக்கும் ஆறுமுகா
சரணம் ஐயா
உயிர்களை வருத்தி வதைத்த
அசுரரை அழித்து ஒழிக்க
சரவணப்பொய்கைதனில்
அவதரித்த சரவணபவனே
சரணம் ஐயா
பிரபஞ்சத்தின் இருள் போக்க
அஞ்ஞான இருள் நீக்க
காலத்தால் அழியாத
ஒளிப்பிழம்பாய்த் திகழ்கின்ற
குகனே
சரணம் ஐயா
உயிர்களை தாங்குகின்ற
பூமகளை காப்பதற்கு
வானிலே சஞ்சரிக்கும் முனிவர்களை
காத்து நிற்கும்
கந்தா
சரணம் ஐயா
பிரணவத்தின் பொருள் தெரியா
பிரம்மாவை சிறையிலிட்டு
தந்தைக்கு குருவாகி
பாடம் பகர்ந்த
சுவாமிநாதா
சரணம் ஐயா
சுட்டபழம் கேட்டு நின்ற
ஔவைப்பாட்டியது
ஐயம் தீர்த்து வைத்து
புலமை அறியச் செய்த
தமிழ்க் கடவுளே
சரணம் ஐயா
சூரனை அழித்தொழித்து
சேவலும் மயிலுமாக
நின்னருகே வைத்திருந்து
தேவர்கள் துயர் துடைத்த
வெற்றிவேலா
சரணம் ஐயா
குன்றுதோறும் வீற்றிருந்து
பக்தர்களின் அழைப்பையேற்று
மயிலேறி விரைந்து வந்து
கருணை மழை பொழிகின்ற
கலியுகவரதா
சரணம் ஐயா
வெற்றி வாகை சூடிக்கொண்டு
தேவேந்திரன் திருமகளாம்
தேவயானை அம்மையாரை
மணம்புரிந்த
மாயோன் மருகா
சரணம் ஐயா
தான் கொண்ட காதலினால்
தமையனவன் துணையோடு
குறவள்ளி நாயகியை
மணம்புரிந்த
ஆனைமுகன் தம்பியே
சரணம் ஐயா
நின் திருவடிகள் இறுகப்பற்றி
சரணடையும் உயிர்களுக்கு
காவல் தெய்வமாகி
உடனிருந்து காத்தருளும்
கதிர்வேலா
சரணம் ஐயா
வேதனை சூழும் நேரம்
நின்னை நினைத்தவுடன்
சிந்தையிலே வந்தமர்ந்து
ஆறுதல் அள்ளித்தரும்
சண்முகனே
சரணம் ஐயா
நின்னை
உள்ளத்துள் வைத்திருப்போர்க்கு
உறுதுணையாய் நீயிருந்து
பயங்கள் அழித்தொழித்து
துணிவைத் தந்தருளும்
சரவணா
சரணம் ஐயா
நின்னையே நினைந்துருகி
வழிபடும் அடியவர்க்கு
துன்பங்கள் வரும் சமயம்
தாங்கும் சக்தியினை தந்தருளும்
செந்தில்நாதா
சரணம் ஐயா