பெண் நினைத்தால் தான் நிர்ணயித்த இலக்கை நிச்சயமாக அவளால் அடைய முடியும்.
பெண்ணின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பது அவளிடம் இயற்கையாக நிறைந்திருக்கும் அன்பு, பாசம், இரக்கம், பணிவு, பொறுப்பு போன்ற குணங்கள் தான்.
குடும்ப சூழ்நிலை, சமுதாய சீர்கேடு இவற்றை மனதில் கொண்டு தனது முடிவுகளை எடுக்கின்றாள்.
கல்வியை இடைநிறுத்தி வேலைக்குச் செல்லவேண்டிய வறுமை நிலை. தனது முன்னேற்றம், எதிர்காலம் பற்றி சிறிதும் சிந்திக்காது குடும்பத்தை காப்பாற்றுவதிலேயே முழுமூச்சாக ஈடுபடுகிறாள். அவள் நினைத்தால், தன்னைப்பற்றியும் சிறிது சிந்தித்தால் பகுதிநேரக் கல்வியை/தபால் மூலம் கல்வியை தொடர்ந்து தன்னை வளர்த்துக்கொள்ள முடியும்.
பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு கல்வி அறிவு போதும் என்று முடக்கிவைத்திருக்கும் குடும்பங்களில், வீண் விவாதங்கள், சண்டைகள் வேண்டாம் என்று பணிவுடன் சொல்கேட்டு நடக்கின்றாள்.
அதிகம் படித்தால் அவள் தகுதிக்கேற்ற வரன் பார்க்கவேண்டும், பதவிக்கேற்ற வரதட்சணை/சீர் செய்ய வேண்டும் போன்ற காரணங்களினாலும் பெண்ணின் உயர்கல்விக்கு தடை விதித்து சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கின்றார்கள்.
தனது கல்வியை தொடர அவள் முடிவெடுத்தால், கல்வியால் கிடைக்கும் சிறப்புக்களை பக்குவமாக எடுத்துரைத்தும் முடியாவிட்டால் போராடி தடைகளை உடைத்தெறிந்து தனது எதிர்காலத்தை வளமாக்க முடியும்.
தவிர்க்க முடியாது திருமணம் நடந்தால் , புகுந்த வீட்டினரதும் கணவரினதும் மனங்களில் இடம் பிடித்து அவர்களின் அனுமதியுடன் கல்வியை தொடரமுடியும்.
பெண் நினைத்தால் இதை சாதிக்க முடியும்.
கல்வி அறிவு பெறுவது மாணவர்கள் உரிமை. அதை யாராலும் தடை செய்ய முடியாது.
வெளியே பெண்ணுக்கு நடக்கும் கொடூர செயல்களால் பயம் கொண்டு அவளை வெளியே செல்ல அனுமதிக்காததால் அவளின் முன்னேற்றம் கேள்விக்குறியாகின்றது.
பல வழிகளில் தன்னை கட்டுப்படுத்தியும் தற்காப்பு வழிகளை கடைப்பிடித்தும் பெண்ணவள் தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
ஆபாச/கவர்ச்சி உடைகளை தவிர்த்து, தனிமையான இடங்களிலும், இரவு வேளைகளிலும் தனியாக செல்வதை தவிர்த்து, ஆடம்பர கேளிக்கை நிகழ்சிகளில் பங்குபற்றுகையில் எச்சரிக்கையுடன் நடந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும். தனது இலக்கையும் அடைய முடியும்.
தனது தோற்றத்தில் கவலைகொண்டு – அழகு/நிறம் இல்லையென தாழ்வுமனப்பான்மை கொண்டு முடங்கியிருக்கும் பெண்ணும் உண்டு.
நிரந்தரமில்லா புற அழகை நினைத்து ஏக்கம் கொள்ளாது, எக்காலத்திலும் அழியா அக அழகை புரிந்து கூடவே மெருகூட்டும் கல்வி அறிவும் அதனால் கிடைக்கும் நற்பெயர், புகழ், பட்டம், பதவி, இவைகளே பேரழகு என்பதை அவள் உணர்ந்துவிட்டால் அவளால் சாதிக்கமுடியாதது எதுமில்லை.
பெண், தன்னுள்ளே புதைந்திருக்கும் மனவலிமை, துணிவு, ஆற்றல் என்பவற்றை அறியாதிருக்கின்றாள். இவற்றை தட்டி எழுப்பி, தானே, தன்னுள்ளே போட்டிருக்கும் தளைகளை உடைத்தெறிந்து வெளியே வருவாளேயாயின் அவள் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் புறத்தடைகள் ஒரு பொருட்டல்ல.