முன்பு ஒரு ஆசிரியரே எல்லாப் பாடங்களையும் கற்பிப்பார். சிறிய கட்டிடம், குறைந்த வசதிகள், குறைவான அளவு மாணவர்கள், மக்கள் தொகையும் குறைவு, நிறைந்த அறிவு. குரு சிஷ்யன் என்ற முறையில் ஒழுக்கத்துடன் எல்லா அறிவும் சிறப்பாக முறையாக பெறப்பட்டது. உதாரணமாக கட்டிடங்கள் கட்டும் மேஸ்திரி, அதற்குரிய படிப்பை கல்லூரிகளில் படித்துப் பெறவில்லை. உறுதியான கட்டிடங்கள் முறைப்படி கட்டி புகழ் பெற்றிருக்கிறார்கள்.
இன்று பெரிய பெரிய பாடசாலைகள், நிறைந்த நவீன வசதிகள், அதிக மாணவர்கள் ஆனால் குறைந்த அறிவுடன் பிள்ளைகள். அத்துடன் பணம் படைத்தவர்களுக்குத்தான் கல்வி என்றாகிப்போனது. ஊழல் நிறைந்த சமுதாயம் புற்றுநோய் போல எல்லா இடங்களிலும் பரவி வருகிறது. பணத்திற்கே முதலிடம் என்றாகிவிட்டது. பணம் கொடுத்து பட்டம் பெரும் காலம் வந்துவிட்டது. ஏழைப் பிள்ளைகள் சிறு வயதிலேயே உழைக்கப் பிறந்தவர்கள் ஆகிவிட்டார்கள்.
இந்தப் போக்கை மாற்றியமைக்க எடுக்கும் நடவடிக்கைகளாக நான் கருதுபவை;
அரசாங்கம்
* பாடசாலைகள் எல்லாவற்றையும் அரசமயமாக்குதல்.
* கட்டணங்களை இல்லாதொழித்து அரச மானியங்களை கல்வி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துதல்.
* பாடசாலைப் புத்தகங்கள், சீருடைகளை இலவசமாக வழங்குதல்.
* ஐந்து வயதை அடையும் ஒவ்வொரு குழந்தையும் பாடசாலை செல்வதை கட்டாயமாக்குதல்.
* பிள்ளைகள் தமது நிரந்தர இருப்பிடத்திற்கு அருகே இருக்கும் பாடசாலையில்தான் கல்வி கற்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குதல்.
* வாழ்க்கைக்கு அடிப்படையாகத் தேவையான தமிழ், கணிதம் கட்டாய பாடமாக்குதல் வேண்டும். இவற்றில் சித்தியடைந்தால்தான் அடுத்த வகுப்புக்கு அனுமதி வழங்கல்.
* ஆங்கிலத்தில் திறமைச் சித்தி பெற்றவர்களுக்கு மட்டும் கல்லூரிகளில் அனுமதி வழங்கல்.
* தமிழ், ஆங்கிலப் போட்டிகள் (பேச்சு, கட்டுரை, பாட்டு, நடனம், நாடகம், ….), விளையாட்டுப் போட்டிகள் பாடசாலை மட்டங்களில் நடாத்தி பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்தல்.
* என்ன வேலைக்கு செல்வதாயினும் (வீட்டு வேலைகள், கூலி வேலைகள் ….) ஆகக் குறைந்தது 10 ஆம் வகுப்புவரை கல்வி கற்றிருக்க வேண்டும் என்று நிர்ணயித்தல்.
* தற்போது நிலவும் பலாத்காரம், சீரழிவுகளைத் தடுக்கும் நோக்கில், ஆரம்பக் கல்வியிலிருந்தே வாழ்க்கைக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள், அடுத்தவர்களுடன் (ஆண், பெண் வேறுபாடு) பழகும் முறை, தீய நடவடிக்கைகளால் பிற்காலத்தில் ஏற்படும் உடல், உள ரீதியிலான விளைவுகள், தலைகுனிவுகள் போன்ற அறிவுரைகளை ஒரு பாடமாக (வாழ்க்கைப் பாடம்) நடாத்துதல்.
* லஞ்சம் கொடுத்து பட்டம் பெறுபவர்களுக்கும் லஞ்சம் வாங்குபவர்களுக்கும் கடும் தண்டனை வழங்குதல்.