
இயற்கை தந்துகொண்டிருக்கும் வரங்களில் ஒன்று நீர். நீர் இல்லாமல் இவ்வுலகில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. நீரை மழை தருகிறது. அந்த மழையை இயற்கை எமக்குத் தருகிறது.
“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு.”
என்ற திருவள்ளுவரின் திருக்குறள், நீர் இல்லாமல் இந்த உலகமும் உயிர்களும் நிலைத்து நிற்க முடியாது என்பதையும் நீர் கிடைப்பதற்கு மழையும் அவசியம் என்பதையும் குறிப்பிடுகின்றது.
பூமியின் பெரும்பகுதி நீரினால் ஆனது. எமக்குத் தேவையான நல்ல நீரை மழை மூலம் கிணறு, ஆறு, குளம், நீர் நிலைகள், என்பவற்றிலிருந்து பெறக்கூடியதாக இருக்கிறது.
பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தினதும் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்கிறது நீர். எமது அடிப்படைத் தேவைகளில் முக்கிய பங்கு வகிக்கும் நீரானது குடிக்க, சமைக்க, குளிக்க, துவைக்க என எமது தேவைகளை நிறைவேற்றுவதோடு பயிர்கள் விளைந்து உணவாவதற்கும் தேவைப்படுகிறது. நீர் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
எமது தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாது இந்த பூமியை அழகாக வைத்திருப்பதில் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. நீர் வீழ்ச்சிகள், அருவிகள், ஆறுகள், குளங்கள் என்பன கண்களைக் கவர்ந்து எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. மரம், செடி, கொடிகள் பூத்துக் குலுங்கி சூழலை அழகூட்டுவது மட்டுமன்றி நறுமணத்தையும் பரவச்செய்கின்றன. பச்சைப் பசேல் என வயல்வெளிகள், தோட்டங்கள் கண்களுக்கு விருந்தையும் பசியைப் போக்கும் உணவையும் தருகின்றன. இதற்குக் காரணம் இயற்கை தரும் நீரே. மழை பொழிவதால் வெப்பம் குறைந்து குளிர்மை ஏற்படுகிறது. இவை யாவும் எமது உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
நீரின் முக்கியத்துவத்தை தெரிந்தும் மனிதனின் சில முறையற்ற நடவடிக்கைகளினால் மழைவீழ்ச்சி குறைவடைந்து நீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன் நீரை மாசடையவும் செய்கின்றன. மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல், தொழிற்சாலைகளின் கழிவுகளை நீர் நிலைகளில் கலக்கச் செய்தல், மழை நீர் வடிந்து செல்லும் வழிகளை அடைத்து கட்டிடங்களை கட்டுதல் போன்ற செயல்கள் இயற்கையை சீற்றம் கொள்ளச் செய்கின்றன. இவைகள் வெள்ளப்பெருக்கு, மண் சரிவு, போன்ற இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்துவதுடன் நோய்களையும் பரவச் செய்கின்றன.
நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு மனிதர்களின் அலட்சியமும் காரணமாகின்றது. குழாய்களை சரியாக மூடாதிருத்தல், நீர் தாங்கிகள் நிரம்பி வழிந்தோடுவதை கவனியாதிருத்தல், சிறுவர்கள் நீரில் விளையாடுவதை தடுக்காதிருத்தல் போன்ற நடவடிக்கைகளினால் நீர் வீணாக விரயமடைகின்றது.
ஒரு நாட்டின் செழிப்பு அங்குள்ள பயிர்களின் வளர்ச்சியில் தங்கியுள்ளது எனக் கூறலாம். அரசர்கள் மழை நீரை வீணாக்காது சேமித்துவைத்து கோடை காலத்தில் பயன்பெறுவதற்கு குளங்களை கட்டியுள்ளார்கள். அக்குளங்கள் சில இடங்களில் தூர்ந்துபோய் காணப்படுகின்றன. அவ்வாறான குளங்களை அடையாளம் கண்டு புனரமைத்து நீரை சேமிப்பது சிறப்பாகும். பாவனையிலுள்ள குளங்களையும் காலத்திற்குக் காலம் புனரமைத்தல் அவசியமாகும்.
வீட்டுத் தேவைகளுக்கு பயன்படுத்தி வெளியேறும் கழிவு நீரை, செடி கொடிகளுக்குச் செல்ல வழி செய்வோம். பழுதடைந்து நீர் சொட்டிக்கொண்டிருக்கும் குழாய்களை கவனித்து உடனடியாகத் திருத்துவோம். மழை நீரை சேமித்து பயன்படுத்துவோம். மழை நீர் வடிந்தோடும் பாதைகளை சீர் செய்வோம். மரங்களை வெட்டும்போது அதற்கு நிகரான மரக்கன்றுகளை நடுவோம்.
மரம் நடுதலை ஊக்குவிப்பதற்கு திருமணவிழா, பிறந்தநாள் விழா, போன்ற நிகழ்வுகளுக்கு வரும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு பயன்தரு மரக்கன்றுகளை பரிசளித்து நன்றியை தெரிவிப்போம். பூமியை பச்சைப் பந்தாக மாற்றி மழையை வரவேற்போம். சுத்தமான நீரைப் பெறுவோம்.
நீர், நிலம்,நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஐந்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும் இயற்கையுடன் நாமும் கைகோர்த்து இணைந்திருப்போம். நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வோம்.
*****