குவியல் 8 எண்ணம் 3
சுற்றுலாத்துறை

ஒரு நாட்டிற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் ஒன்று சுற்றுலாத்துறையாகும். இது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கினை வகிக்கிறது. அத்துடன் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கிறது. வெளிநாட்டுப் பயணிகளின் வருகையால் மக்களின் பொது அறிவு விருத்தி அடைவதுடன் அவர்களை வழிநடத்துவதற்கு பல மொழிகளை அறிந்தும் கற்றும் மக்கள் தங்களை தயார்படுத்துவதன் மூலம் தங்கள் அறிவை மேம்படுத்துகின்றனர். இதனால் மக்களின் முன்னேற்றத்திற்கும் சுற்றுலாத்துறை வழிவகுக்கிறது. சுற்றுலா, நாடுகளுக்கிடையிலான உறவை பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு பயணிகளின் வருகை காரணமாக நாடு சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்கப்படுகிறது.
விடுமுறை, ஓய்வு, தேனிலவு, ஆன்மீகம், போன்றவற்றிற்கு மக்கள் சுற்றுலா செல்கிறார்கள். படிப்பு, பயிற்சி, விளையாட்டு, வர்த்தக ரீதியாக வருபவர்களும் மீதி நாட்களை சுற்றுலாவில் கழிக்கிறார்கள். தாம் செலவிடும் நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு இயற்கைவளங்கள் நிறைந்த இடங்களை மக்கள் நாடுகிறார்கள். இயற்கையை இரசிப்பதற்கும் அதை அனுபவிப்பதற்கும் அவர்கள் முதலிடம் கொடுக்கிறார்கள். நாட்டில் காணப்படும் இயற்கை வளங்களை பாதுகாப்பாகவும் அழகாகவும் சுத்தமாகவும் பழமைமாறாமலும் பராமரிப்பதால் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கறது.
ஆய்வு நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் மறைந்திருக்கும் பண்டையகாலத்துக் கட்டடங்களின் எச்சங்களையும் அக் காலத்தில் பாவித்த பொருட்களையும் அடையாளம் கண்டு, அவற்றின் விபரங்களை ஆராய்ந்து பகிரங்கப்படுத்திக் காட்சிப்படுத்துவதன் மூலமும் அவற்றை உரிய முறையில் பேணிப் பராமரித்து பாதுகாப்பதன் மூலமும் மக்களைக் கவர முடியும். புராதன கட்டடங்களையும் கோவில்களையும் நவீனமயப்படுத்தாமல் பழமை மாறாமல் அப்படியே அவற்றை பராமரிப்பது மக்களைக் கவரும் செயல் மட்டுமல்லாது வரலாறையும் அழியாது பாதுகாக்கும் செயலுமாகும்.
நாட்டின் கலாச்சாரத்தைப் பேணி வளர்க்கும் வகையில் கிராமங்களில் சுற்றுலா மையங்களை அமைத்து அங்கு காணப்படும் மாசற்ற சூழலையும் எழிலையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் அவர்களின் கைவினைப் பொருட்களையும் காட்சிப்படுத்துதல் சிறப்பாகும். இதனால், வாகனங்களாலும் சன நெரிசலினாலும் மாசடையும் சூழலுள்ள நகரங்களில் வாழும் மக்கள் விடுமுறை நாட்களில் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கும் கிராமங்களை நாடுவர்.
நவீன தொழில்நுட்பம் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு மிக அவசியமானதாகும். அதிவேக நெடுஞ்சாலைகள், நவீன வசதிகளைக் கொண்ட உயர்தர தங்குமிட வசதிகள், அதிவேக இணைய வசதி, சீரான மின்சாரம், என்பவை சுற்றுலாப் பயணிகளை கவரும் விடயங்களாகும். இவற்றில் உணவகங்களில் பல்நாட்டு உணவு வகைகள் தரமான முறையில் கிடைப்பதற்கான வசதிகள் இருத்தல் முதன்மையானதாகும். பயணிகள் தாங்கள் செலவழிக்கும் பணத்திற்கேற்ற தரத்தையே எதிர்பார்ப்பார்கள். நாட்டில் காணப்படும் சுற்றுலா மையங்களையும் அவற்றின் சிறப்புக்கள் பற்றியும் விளம்பரங்கள் செய்வது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் முக்கிய காரணியாகும்.
70% மான பயணிகள் குறுகிய தூரப் பயணத்தையே விரும்புகிறார்கள் என அறியப்படுகிறது. எனவே அயல்நாடுகளில் வசிப்பவர்களின் ஆர்வங்களை அறிந்து அதற்கேற்ப ஒழுங்குகள் செய்வதால் நாட்டின் வருமானத்தை அதிகரிக்க முடியும்.
அதேநேரம் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் அவர்களது கழிவுப் பொருட்கள் உரிய முறையில் அகற்றப்படாதிருந்தால் அதனால் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கு நேரிடும் வாய்புண்டு. வெளிநாட்டு பயணிகளின் வருகையினால் கலாச்சார சீரழிவும் ஏற்படலாம், அத்துடன் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இவற்றைக் கருத்திற்கொண்டு சுற்றுலாத்துறை மட்டுமல்ல பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டியது கட்டாயமாகும்.
சுற்றுலாப்பயணிகளின் வருகையால் நாட்டில் பொருளாதார வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் ஏற்பட்டாலும் அவர்களால் ஏற்படும் தீமைகளையும் கருத்திற்கொண்டு எச்சரிக்கையுடன் செயற்படவேண்டியது மிக மிக அவசியமாகும்.
உதாரணக்கதை
மாலா, சுதா, திலகா மூவரும் பத்தாம் தரத்தில் படிக்கும் ஒரே ஊரில் வசிக்கும் சிநேகிதிகள். மூவரும் பாடசாலை படிப்புடன் சுய தொழிலில் ஈடுபட்டு குடும்பத்திற்கு உதவியாக செயற்படுகிறார்கள். மாலாவும் திலகாவும் அலங்காரப் பொருட்கள் செய்வதிலும், சுதா பூத் தையல்வேலைகள் செய்வதிலும் சிறந்தவர்கள். மூவரும் தயாரிக்கும் பொருட்களை அவ்வூரில் உள்ள இரு கடைகளில் கொடுத்து விற்பனை செய்கின்றனர்.
“பொருட்களை பெரிய அளவில் தயாரிக்க வேண்டாம். தந்தவை விற்று முடிந்ததும் கூறுகிறேன். அதன்பிறகு கொண்டு வாருங்கள் என்று கடைக்காரர்கள் கூறிவிட்டனர்.” என்றாள் மாலா ஏமாற்றத்துடன்.
“என்ன செய்வது? ஊரில் இருப்பவர்கள்தானே பொருட்களை வாங்குகிறார்கள். வெளியிலிருந்து ஊருக்கு வருபவர்களும் மிகக் குறைவு. எப்படி விற்பனை நடைபெறும்.” அலுத்துக்கொண்டாள் திலகா.
“எங்கள் வீட்டிற்கு அருகிலிருக்கும் குமார் மாமா, அவர்கள் தோட்டத்தில் விளையும் பொருட்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பக்கத்து ஊருக்கு தங்கள் வாகனத்தில் எடுத்துச் சென்று வியாபாரம் செய்கிறார். அங்கு மிகவும் நன்றாக வியாபாரம் நடைபெறுவதாக கூறுகிறார்.” என்றாள் சுதா.
“எப்படி?” ஆச்சரியத்துடன் கூவினர் மற்ற இருவரும்.
“அங்கு இருக்கும் இயற்கை வளங்களை பார்த்து ரசிப்பதற்கும் அமைதியாக இருந்து பொழுதைக் கழிப்பதற்கும் அதிக அளவில் மக்கள் அங்கு சுற்றுலா வந்து போகிறார்களாம். உள்நாட்டு மக்களுடன் வெளிநாட்டு மக்களும் வருகிறார்கள் என்றும். அவர்கள் தங்குமிட வசதிகளும் உணவகங்களும் அங்கு இருக்கின்றன எனவும் குமார் மாமா கூறினார்.”
“எங்களுக்கு இது தெரியாமல் போய்விட்டதே? நாங்களும் ஒருமுறை சென்று பார்ப்போமா?” என்றாள் ஆவலுடன் மாலா.
“பார்ப்பது மட்டுமல்ல, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.” என்றாள் சுதா.
“என்ன, நாங்களும் அங்கு சென்று வியாபாரம் செய்யலாம் என்றுதானே கூறப்போகிறாய். அதற்கு எங்கள் வீடுகளில் சம்மதிக்க வேண்டுமே.”, மாலா.
“அது மட்டுமா? அங்கு எங்கு வைத்து வியாபாரம் பார்ப்பது?”, திலகா.
“அதற்கும் ஒரு யோசனை உள்ளது. ஒவ்வொரு கிழமையும் எங்கள் மூவரது அப்பாக்களில் ஒருவர், மாறி மாறி எங்களுடன் வரும்படி கேட்பது. அதற்கு அவர்கள் நிச்சயம் சம்மதிப்பார்கள். அடுத்தது, குமார் மாமா ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்திவைத்து சில பொருட்களை வாகனத்திற்குள்ளும் சில பொருட்களை தரையிலும் பரவி வைத்துத்தான் வியாபாரம் செய்கிறார். நாங்களும் அவருடன் கதைத்து அவருக்குப் பக்கத்திலே தரையில் ஒரு கம்பளத்தை விரித்து வைத்து எங்கள் பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம்.” என்றாள் சுதா.
“அதற்கு உன்னுடைய குமார் மாமா சம்மதிப்பாரா?” இழுத்தாள் திலகா.
“அவரது பொருட்கள் வேறு. எங்களது வேறு. எனவே நிச்சயம் சம்மதிப்பார்.” என்றாள் சுதா.
“அப்படியென்றால் முதலில் எங்கள் வீடுகளில் கதைத்து அனுமதி வாங்குவோம். அதன்பிறகு நாங்கள் மூவரும் குமார் மாமாவுடன் கதைப்போம். சரிதானே?” என்றாள் மாலா.
“சரி, அப்படியே செய்வோம்.” என நம்பிக்கையுடன் மூவரும் பிரிந்து சென்றனர்.
*****