
இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகரிக்க அவர்களின் தேவைகளும் அதிகரிக்க அவற்றை பூர்த்தி செய்வதற்கு மனிதன் நேரம், காலம் பார்க்காது ஓடி ஓடி உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அவனது வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறிவிட்டது. இப்படியான சூழ்நிலையில் மனிதன் சற்று ஓய்வெடுக்கவும், ஒன்றுசேர்ந்து இன்புற்றிருக்கவும் பண்டிகைகள் துணை புரிகின்றன. அது மட்டுமல்லாது மனிதன் தனது மதம், கலாச்சாரம், கலைகள், வாழ்க்கைமுறை, கட்டுப்பாடுகள், மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் என்பனவற்றை மறக்காமல் இருக்க பண்டிகைகள் காரணமாக அமைகின்றன.
படிப்பு காரணமாகவோ, வேலை காரணமாகவோ பிரிந்திருக்கும் உறவுகள் ஒன்றிணைந்து மகிழ்ந்திருப்பது இப் பண்டிகைகளின் போதே. அச்சமயங்களில் திருமணங்களும் நிச்சயிக்கப்படுகின்றன, உறவுகள் பலப்படுகின்றன. சண்டை சசரவுகளினால் பிரிந்திருப்போரும் எல்லாவற்றையும் மறந்து ஒன்று சேர்வது இப் பண்டிகைகளின் மூலமே. பண்டிகைகள் தனிமையையும் மன அழுத்தத்தையும் அகற்றி உற்சாகத்தையும் பெருமகிழ்ச்சியையும் தருகிறது.
உறவுகளுடன் இணைந்திருக்கும் இப் பண்டிகை நாட்கள் இளைய தலைமுறையினருக்கு வாழ்க்கையில் பிடிப்பையும் நம்பிக்கையையும் கொடுக்கின்றது என்பது திண்ணம்.
*****