
புத்தகங்களை அறிவியலின் திறவுகோல், சிறந்த வழிகாட்டி, எண்ணங்களின் வெளிப்பாடு, தகவல்களின் பரிமாற்றம், உற்ற தோழன் எனக் கூறிக்கொண்டே போகலாம். இருந்த இடத்திலிருந்து உலகைச் சுற்றி வர புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் ஒரு மனிதனின் அறிவை வளர்ச்சியடையச் செய்கின்றன. மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை மாற்ற வல்லன. பொழுதுபோக்கிற்காக புத்தகங்களை வாசிக்கும் சிறுவர்களை வேண்டாத பழக்கவழக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றன.
ஆதிகாலத்தில் தகவல்களை கற்களில் பொறித்தார்கள். பின்பு ஓலைச்சுவடிகள், கடிதங்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் என மாற்றங்கள் ஏற்பட்டு தற்காலம் இலத்திரனியல் சாதனங்கள் மூலம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. முன்பு ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு தகவல் சென்றடைய நீண்ட நாட்கள் தேவைப்பட்டன. ஆனால் இன்று இந்த நவீன யுகத்தில் ஓரிடத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் மற்றும் தகவல்களையும் தாமதமின்றி உலகமே கேட்டவும் பார்க்கவும் முடிகிறது. இப்படியான காலகட்டத்தில் புத்தகங்களைக் கூட கணிணி முதல் கைபேசி வரையான இலத்திரனியல் சாதனங்கள் மூலம் மென்நகல் (soft copy) பெறப்பட்டு வாசிக்க முடிகிறது. ஆனால் இலத்திரனியல் புத்தகங்களை நீண்ட நேரம் வாசிக்க முடிவதில்லை. மின் தடைப்பட்டால் இலத்திரனியல் சாதனம் தனது வேலையை நிறுத்திவிடும். சிலசமயங்களில் புத்தகங்கள் அழிந்துவிடவும் நேரலாம். ஆனால் அச்சுப் புத்தகங்கள் எப்போதும் எவ்வளவு நேரமும் தொடர்ந்து வாசிக்கலாம்.
குழந்தைகள் முதல் முதியோர்வரையானவர்களின் வாழ்க்கையில் புத்தகங்கள் பெரும் பங்கினை வகிக்கின்றன. குழந்தைகள் ஒரு வயதைத் தொடும் முன்னரே சித்திரப் புத்தகங்கள் மூலம் அவர்களின் அறிவு வளர்ச்சி ஆரம்பமாகிறது. கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி, பொது அறிவு, சமயம், ஆன்மீகம், ஆரோக்கியம், தியானம், தத்துவம், நீதி, சுயசரிதை, சரித்திரம், வரலாறு, சமையல், கதைகள், பொழுதுபோக்கு என புத்தகங்களின் வகைகள் நீண்டுகொண்டே செல்கின்றன.
பலர் தங்கள் கவலைகளையும் கஷ்டங்களையும் மறக்க வாசிப்பை நாடுகின்றனர். மன அழுத்தத்தை நீக்கி அமைதியைத் தருகின்றது வாசிப்பு. நீண்ட தூரப் பயணங்களின்போது, தேவைக்குச் செல்லும் இடங்களில் காத்திருக்க நேரும் போது, புத்தகங்கள் பெரிதும் உதவுகின்றன.
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை வாசிப்புக்கு ஒதுக்குவது மிகவும் பயனுள்ளதாகும். புத்தகங்கள் வாங்க முடியாதவர்களுக்காகவும் வாசிப்பை ஊக்குவிப்பதற்காகவும் ஊர்கள்தோறும் நூலகங்கள், வாசிகசாலைகள் இயங்குகின்றன. பாடசாலைகளிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் நூலகங்கள் இயங்குகின்றன. வசதியுள்ளவர்கள் மாதமொரு புத்தகம் வாங்கி வீடுகளிலும் சிறு நூலகங்களை உருவாக்கி பிள்ளைகளுக்கு வாசிப்பில் விருப்பத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்துகின்றனர்.
நாம் வாசிக்கும் புத்தகங்கள் எமது எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியவை. எனவே பயனுள்ள நல்ல புத்தகங்களை வாசித்து எமது வாழ்க்கையை வளமானதாக மாற்றுவோம்.
எமது அறிவு வளர்ச்சிக்கு உதவும் புத்தகங்களை ஒழுங்காக பராமரித்து பாதுகாத்து அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கு கிடைக்கும்படி செய்வது எமது தலையாய கடமையாகும்.
*****
கேட்டதில் பிடித்தது – “தொட்டால் காகிதம், தொடர்ந்தால் ஆயுதம்.” – சுகிசிவம்.
அவரது விளக்கம் – ஒரு புத்தகத்தை தொட்டால் வெறும் காகிதத்தினால் ஆனது என அறிவோம். சில புத்தகங்கள் போர்களையே உருவாக்கி இருக்கின்றன. தீவிரவாத கருத்துள்ள புத்தகங்கள் ஒரு நாட்டின் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டிருக்கலாம். அதே புத்தகத்தை இன்னொரு நாட்டிற்குச் சென்று வாங்கி வாசிக்கலாம். தடை செய்த சில அரசாங்கங்கள் சில காலத்திற்குள் காணாமல் போயுள்ளன. ஆனால் புத்தகத்திலுள்ள கருத்துக்கள் மறைவதில்லை, அழிவதில்லை.
ஒரு குட்டிக்கதை
மலர், கலை, சங்கவி, ஆனந்தி நால்வரும் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் மாணவிகள். அன்று பாடசாலை விட்டதும் ஆனந்தி உடனே வீட்டிற்குச் சென்றுவிட்டாள். மற்ற மூவரும் கதைத்தபடி ஆறுதலாக புத்தகப்பையை அடுக்கிக்கொண்டிருந்தனர்.
“வரும் புதன்கிழமை ஆனந்திக்கு பிறந்தநாள். நினைவிருக்கிறதா?” எனக் கேட்டாள் மலர்.
“நன்றாக நினைவிருக்கிறது.” என்றாள் கலை.
“அவள் தரும் இனிப்பை வாங்கிக்கொண்டு வாழ்த்துக் கூறுவதுதானே காலம் காலமாக நடக்கின்றது.” அலுத்துக் கொண்டாள் சங்கவி.
“அப்போ வேறு என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கின்றாய்?” கலை கேட்டாள்.
தொடர்ந்து, “பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கெல்லாம் செல்ல வீட்டில் அனுமதி தர மாட்டார்கள். அத்துடன் கொண்டாடுவதற்கு ஆனந்தி வீட்டில் வசதியும் இல்லை என்பது உனக்குத் தெரியாதா?” என படபடத்தாள்.
“தெரியும் தெரியும்” என்ற சங்கவி, மேலும் “இப்போது நாங்கள் சிறு பிள்ளைகள் அல்ல. பாடசாலை இடைவேளையில் ஏதாவது வாங்கி உண்பதற்கு அப்பா, அம்மா தரும் பணத்தில் நாம் சிறிது சேமித்து வைத்திருக்கிறோம் அல்லவா?”
“ஆமாம் என்னிடமும் இருக்கிறது.” என்றார்கள் மலரும் கலையும்.
“அப்படி என்றால் நாம் மூவரும் சேர்ந்து ஆனந்திக்கு சிறு பரிசுப்பொருள் வாங்கிக் கொடுப்போமா?” என்றாள் சங்கவி ஆர்வத்துடன்.
உற்சாகத்துடன் சம்மதித்த கலை, “அப்பா, அம்மா சம்மதத்துடன் அதை செய்வோம். சரிதானே?”
“எங்கள் வீட்டில் சம்மதிப்பார்கள்.” என்றாள் மலர் சந்தோஷத்துடன்.
“சரி, என்ன பரிசுப்பொருள் வாங்கலாம்? மேசையில் வைப்பதற்கு ஏதாவது அலங்காரப் பொருள் கொடுக்கலாமா?” என்றாள் சங்கவி.
“அழகுசாதனப் பொருட்கள் ஏதாவது வாங்கலாமா?” என்றாள் மலர்.
“அல்லது அவளுக்குப் பிடித்த இனிப்புப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாமா?” என்றாள் சங்கவி.
“இவை எல்லாமே சிறிது நாட்களுக்குத் தான் அவளிடம் இருக்கும். காலத்திற்கும் அழியாத, வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள ஒரு பரிசுப் பொருள் உள்ளது.” என்றாள் கலை.
“அப்படி என்னதான் இருக்கிறது?” என்றார்கள் சங்கவியும் மலரும் ஆர்வத்துடன்.
“சிறிய திருக்குறள் புத்தகம்.” என்றாள் கலை.
“அற்புதம். அது மிகவும் அருமையான உபயோகமான பரிசுதான்.” துள்ளிக் குதித்தாள் சங்கவி.
“அருமை. அத்துடன் ஆனந்தியிடம் திருக்குறள் புத்தகம் இல்லை.” என்றாள் மலர்.
மூவரும் திருக்குறள் புத்தகம் பிறந்தநாள் பரிசாக ஆனந்திக்கு கொடுக்க முடிவு செய்தனர்.
“இதே போல மற்றவர்களுக்கும் பிறந்தநாள் பரிசாக பயனுள்ள புத்தகம் பரிசளிப்போம். இன்னுமொரு யோசனை எனக்குத் தோன்றுகிறது. எமக்குக் கிடைக்கும் பணத்தை சேமித்து மாதமொரு பயனுள்ள புத்தகம் வாங்கி வீட்டில் ஒரு சிறிய நூலக உருவாக்குவோமா?” என்றாள் கலை.
“அப்படிச் செய்தால் நாங்கள் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி நிறைய புத்தகங்கள் வாசிக்கலாம்.” என்றாள் மலர்.
“வாசிப்பு எங்கள் அறிவை வளர்ப்பது மட்டுமல்ல பயனுள்ள பொழுதுபோக்குமாகும். புத்தகங்கள் வாங்கும் போது மற்றவரிடம் இல்லாததை கதைத்துப் பேசி வாங்குவோம்.” என்றாள் கலை.
“நல்ல புத்தகங்கள் வாங்குவதற்கும் வாசிப்பதற்கும் வீட்டில் ஒன்றும் கூறமாட்டார்கள். எனவே நாங்கள் கதைத்தபடி செய்வோம்.” என்று சங்கவி கூற, மூவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
*****
இளைய தலைமுறையினருக்கு: எதிர்காலத்தை வளமானதாக மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த, தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல புத்தகங்களை வாசிப்போம். அவற்றை நல்லமுறையில் பராமரித்து பாதுகாப்போம்.