
“பிறவியே நரகம்.
பிறவிப் பிணியை நீக்கி மரணமில்லாப் பெருவாழ்வை அடைவதே சொர்க்கம்.”
“எல்லோரும் வெல்ல வேண்டியது நமக்குள்ள கோபம் என்னும் கொடியவனை.”
“எல்லோரும் கொல்ல வேண்டியது தான் என்னும் ஆணவத்தை.”
*****
“சேர்ப்பது மிகக் கடினம்.
செலவு செய்வது மிக எளிது.
பணம் மட்டுமல்ல, அடுத்தவர் உள்ளத்தில் நாம் சேர்த்துவைக்கும் நல்லெண்ணம் கூட.”
*****
“உயிருக்கு ஊதியமாவது ஏழைகளுக்கு கொடுத்தலும் , அதனால் புகழுண்டாகி வாழ்வதும்தான் உயிருக்கு நாம் கொடுக்கும் ஊதியம் (சம்பளம் ) . ஊதியமில்லாத (சம்பளமில்லாத ) வேலைக்காரன் என்றும் வேலைக்கு இருக்க மாட்டான் . அது போல ஊதியமில்லாத (சம்பளமில்லாத ) உயிர் உடலுடன் ஒட்டி இருக்காது .
நாம் நம் உடலுக்கும் வாழ்வுக்கும் ஊதியமாக பணத்தைத் தேடுகிறோம் . அதன் மூலம் நமக்கு நம் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் வாங்கி உடலால் அனுபவிக்கின்றோம் . ஆனால் உயிருக்கு என்ன தேவை என்று நாம் எண்ணுவதில்லை . அதைத் தேடுவதும் இல்லை .ஒரு நாள் உடலுக்கு தேவையானவற்றை எல்லாம் தேடித் தந்த உயிர் , தனக்கு ஊதியம் தராத உடலை விட்டு பிரிந்தது பறந்து தனக்கு ஊதியம் தரும் உடலை நாடி அடுத்த பிறவி எடுக்க ஓடுகிறது .
இப்படி பிறவி தோறும் பிறந்து இளைக்கிறது உயிர். நாம் அந்த உயிரின் ஓலத்தை கண்டு கொள்வதே இல்லை.ஆனால் பலர் இந்த உயிரின் ஆசையை நிறைவேற்றுகிறார்கள்.ஆனால் அதற்கு பணம் வேண்டுமே என்பர் பலர் .ஆனால் அதுவல்ல வேண்டியது மனம் மட்டுமே !!!!!
ஒரு முறை தருமன் செய்த ராஜ சூய யாகத்தின் முடிவில் தேவர்களுக்கு அவிர்ப்பாகம் கொடுத்ததன் பின்னர் பலரும் தருமனுடைய யாகத்தைப் புகழ்ந்தனர் . அப்போது பாதியுடல் பொன் வண்ணமான கீரி ஒன்று அங்கு வந்தது . அந்த யாகசாலையில் புரண்டு எழுந்துவிட்டு சொன்னது ” தருமா ஒரு ஏழைப் பிராமணன் ஒரு முறை தான் சம்பாதித்து கொண்டு வந்த மாவை தனது குடும்பத்துக்கு கொண்டு வந்து கொடுத்தான். ஒரு பசித்த வழிப் போக்கன் கடும் பசியாக இருப்பதாக ஏழைப் பிராமணன் வீட்டில் யாசகம் கேட்டான். உடனே பிராமணனுடைய இல்லாள் மாவை நான்கு பங்காக்கி ஒன்று தனக்கும் , மற்றொன்றை தன் குமாரத்திக்கும் , மூன்றாம் ஒன்றை தன் கணவனுக்கும் , நான்காம் ஒன்றை யாசகனுக்கும் எடுத்து வைத்தாள் . முதல் பங்கை யாசகனுக்கு கொடுத்தார்கள் , யாசகனுடைய பசி தீராது மேலும் உணவு வேண்டினான். அடுத்து மனைவி தனது பாகத்தை கொடுத்தாள் . அப்போதும் யாசகனுடைய பசி தீராது மேலும் உணவு வேண்டினான்.அடுத்து மகள் தனது பாகத்தை கொடுத்தாள் . யாசகன் தனது பசி தீர்ந்து வாழ்த்தினான் . தேவ லோகத்தில் இருந்தது புஷ்பக விமானம் வந்து அந்த பிராமணனது குடும்பத்தை ஏற்றிக் கொண்டு சுவர்க்கம் சென்றது .அந்த மாவு தானத்தின் போது சிதறிய மாவின் மீது புரண்டெழுந்தபோது எனது உடல் பாதி பொன்னானது . மீதி உடலும் பொன்னாக நானும் எங்கெல்லாம் தான , தருமங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் போய் நானும் புரண்டு எழுந்து வருகிறேன் . ஆனால் எனது உடல் இன்னும் பொன்னாகவில்லை . உனது பல லட்சம் பொன் செலவழித்து பலருக்கு தானம் செய்த யாகம் என்னுடலை பொன்னாக்கவில்லை . எனவே உன்னுடைய யாகம் அந்த பிராமணனது உணவுத் தியாகத்தினால் செய்த தானத்திற்கு எள்முனையளவு கூட ஈடாகாது என்று சொன்னது. அதைக் கேட்ட தருமனின் ஆணவம் அழிந்தொழிந்தது .
எனவே தானம் என்பது பொருளின் அளவையும் ,மதிப்பையும் வைத்துக் கிடையாது. தனக்குப் போகத் தானம் என்றெண்ணாமல், யாசகன் தேவைக்கு ஏற்றார்போல் தனது பொருளின் முழு அளவையும், முழு மனதோடு கொடுப்பதுதான் தானத்தின் அளவை நிர்ணயம் செய்கிறது.”
*****