
இந்த விடுமுறைக்கு நாங்கள் சிகிரியா குன்றுக்கு (இலங்கை) சென்றோம்.
அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பிலிருந்து காரில் பயணத்தை தொடங்கினோம்.
காலை 7 மணியளவில் சிகிரியாவை சென்றடைந்தோம்.
குன்றில் ஏறு முன் குன்றின் நுழைவாயிலுக்கு அருகாமையில் இருந்து காலை உணவை உண்பதற்காக எடுத்தபோது எதிர்பாராத விதமாக பல குரங்குகள் எங்கிருந்தோ வந்து எம்மிடமிருந்த உணவை பறிப்பதற்கு முயன்றன.
அந்நேரம் அங்கிருந்த துப்பரவு செய்யும் பணியாளர்கள் அவற்றைத் துரத்தி எமக்கு உதவி செய்தனர்.
இது ஒரு சுவாரஸ்யமான மறக்க முடியாத அனுபவமாகும்.
நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் ஒரு பிராணியின் கால் விரல்கள் மிகப் பெரிய அளவில் காணப்பட்டன.
குன்றின் உச்சியை அடையும் வரை இடையிடையே பல சிறு குகைகள், மிகப் பெரிய இருக்கைகள், பெரிய நீர்த் தடாகம், சம தரைகள், வர்ண ஓவியங்கள், என்பவற்றைப் பார்வையிட்டோம்.
குன்றின் உச்சியில் சிறிது நேரம் நின்று இயற்கை அழகை இரசித்தோம்.
மதியம் 11 மணியளவில் சிகிரியா குன்றிலிருந்து இறங்கிவிட்டோம்.
அன்று காலநிலை நன்றாக இருந்தமையால் தம்புள்ளவில் உள்ள யானைகள் நிறைந்துள்ள காட்டை பார்வையிட முடிவு செய்தோம்.
திறந்த வாகனமொன்றில் எம்மை அழைத்துச் சென்று மூன்று மணித்தியாலங்கள் சுற்றிக் காட்டினார்கள்.
பெரிய யானைகளிலிருந்து குட்டி யானைகள் வரை அங்கு காணப்பட்டன.
அவற்றுடன் மயில், முதலை, பலதரப்பட்ட பறவைகள் என்பவற்றையும் பார்த்து மகிழ்ந்தோம்.
இரண்டு மணியளவில் தம்புள்ளவில் உணவு விடுதி ஒன்றில் மதிய உணவை உண்டோம்.
பின்பு வீடு திரும்பும் வழியில் தம்புள்ளவில் மலையில் அமைந்துள்ள பொற்கோவிலுக்கும் சென்றோம்.
மலையில் நீண்ட தூரம் நடந்து சென்று குகைகளில் உள்ள புத்த பிரானையும் மற்றும் தெய்வங்களையும் வழிபட்டு அங்கிருந்த குகை ஓவியங்களையும் பார்த்து இரசித்து வீடு திரும்பினோம்.
அந்த நாள் மிகவும் பயனுள்ள மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக அமைந்தது.
*****