
சுற்றம் சூழ வாழ்வதே மனிதனுக்கு நிம்மதியான, சந்தோஷமான, ஆரோக்கியமான, பாதுகாப்பான வாழ்க்கையைக் கொடுக்கும் என்பது யாவரும் அறிந்ததே. குடும்பத்தில் இன்பங்கள் மட்டுமல்லாமல் துன்பங்களும் துயரங்களும் வந்து போவது இயற்கையே. இன்பம் வரும் வேளையில் கூடி மகிழ்வதும், துன்பம் வரும் வேளையில் ஒருவருக்கொருவர் உதவுவதும் ஆலோசனைகள் வழங்குவதுமே உற்றார் உறவினர் நண்பர்களது கடமையாகும். அவையே வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்திச் செல்ல உதவும் காரணிகள் எனலாம்.
சில உறவுகளுக்கு உதவும் மனப்பான்மை இருக்காது அல்லது மனமிருந்தும் உதவுவதற்கு வசதி இருக்காது. அதனால் அவர்கள் மற்றவர்களிடமிருந்து பெறுவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களால் எமக்கு எவ்வித பயனுமிருக்காது. அதற்காக அவர்களை விலத்தி வைக்காது அவர்களையும் அரவணைத்து வாழ்வதே சிறப்பாகும்.
உறவுகளுக்கிடையே இருக்க வேண்டிய பாசத்தையும் பிணைப்பையும் ஔவையார் அருளிய ஆத்திசூடியில் பின்வரும் வரிகள் மூலம் அறியலாம்.
ஆத்திசூடி – ஙப்போல் வளை
விளக்கவுரை – ஙஎன்னும் எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள்.
பயன்கருதாது உறவுகளுடன் கொண்டாடி மகிழும் வாழ்க்கையானது நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரவல்லது. எதிர்பார்ப்புடன் செயற்பட்டோமேயாயின் அது நிறைவேறாது போனால் ஏமாற்றமே கிடைக்கும். ஏமாற்றம் கோபத்தை தரக்கூடியது. அதனால் துன்பமே நேரிடும். எனவே மற்றவர்களுடன் பழகும்போது எதிர்பார்ப்பில்லாமலும் பயனை எதிர்பாராமலும் இருப்போமேயானால் உறவுகள் பலப்படுவதுடன் வாழ்வும் சிறப்பாக அமையும்.
ஒரு சிறு கதை
“என்னங்க, எனது பெரியம்மாவின் மகள் சியாமளா இப்போதுதான் வந்து சென்றாள். நீங்கள் கடைக்கு சென்றிருந்த நேரம்.” அப்போதுதான் கடையிலிருந்து திரும்பி வந்த தனது கணவன் கணேசனிடம் கூறினாள் சந்திரா.
“அப்படியா! அந்தக் குடும்பம் எங்களுடன் பெரிதாக பழகுவதில்லையே. என்ன விஷயமாக வந்தார்கள்?” என்றபடி இருக்கையில் அமர்ந்தார் கணேசன்.
“கடன் கேட்டு வந்திருந்தாள்.”
“எதற்கு?”
“அவளுடைய மகள் மீனா முதல் பிரசவத்திற்காக வீட்டிற்கு வந்திருக்கிறாள். பிரசவ திகதிக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறதாம். அவளது கணவன் அலுவலகத்தில் கடனுக்கு மனு போட்டிருக்கிறாராம். அது கிடைக்க மூன்று மாதங்கள் செல்லுமாம். அதுவரை செலவுக்கு பணம் இருக்கிறது எனவும் கூடுதலாக தேவைப்பட்டாலும் என்றுதான் எங்களிடம் கேட்டு வந்திருக்கிறாள்.”
“எவ்வளவு வேண்டுமாம்?”
“ஐம்பதினாயிரம் ரூபா. அலுவலகத்தில் பணம் மூன்று மாதங்களில் கிடைத்துவிடும் எனவும் அதில் தருவதாகவும் கூறினாள்.”
“அவர்களுக்கு கொடுப்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. அத்துடன் பிரசவ செலவுக்காக கேட்கிறார்கள். எங்கள் உறவினரும் கூட. எங்களுக்கு போதியளவு வருமானம் வருவதால் எந்தப் பிரச்சனையும் இல்லை. கொடுக்கலாம்.” என்றார் கணேசன்.
“அந்தக் குடும்பம், தாங்களும் தங்கள் பாடுமாக இருப்பவர்கள். ஒருவருடனும் அதிகமாக பழகுவதில்லை. ஏதும் நல்லது கெட்டதற்கு மட்டும் வந்து போவார்கள். அதனால் நீங்கள் கடன் கொடுப்பதற்கு சம்மதிக்க மாட்டீர்கள் என நினைத்தேன்.” என்று இழுத்தாள் சந்திரா.
“அப்படியில்லை சந்திரா, எல்லோரும் எமக்கு வேண்டப்பட்டவர்கள்தான். அவர்களுடன் எங்களுக்கு அதிக பழக்கமில்லை என்பதற்காக அவர்களை ஒதுக்கிவிட முடியாது. எல்லோரையுமே அரவணைத்து வாழ்வதில்தான் முழுமையும் சந்தோஷமும் இருக்கிறது.”
இதன் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுடன் ஒட்டி உறவாடும் வாய்ப்பைக் கொடுப்போம்.”
“இன்னுமொரு விஷயம் சந்திரா, நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள். நாம் யாருக்காவது கடன் கொடுக்கும் போது அப்பணம் திரும்ப எங்களுக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம் என்ற எண்ணத்துடன்தான் கொடுக்க வேண்டும். அப்படியான வசதி இருந்தால் மட்டுமே கடன் கொடுப்பதற்கு முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் மற்றவரின் சூழ்நிலை எந்நேரமும் மாறலாம்.”
“நீங்கள் சொல்வது சரிதான். பணம் மீண்டும் கிடைத்தால் சந்தோஷம். கிடைக்காவிட்டால் கவலை இல்லை. அப்படித்தானே.” என்று கூறியபடி சிரித்தாள் சந்திரா.
“இன்னுமொரு விஷயம் நினைவில் வைத்துக்கொள். கடன் வேறு உதவி வேறு. உதவி என்று யாராவது கேட்டு வந்தால், அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் என்று தெரிந்தால் பிரதிபலன் எதிர்பாராமல் கொடுக்க வேண்டும். இப்போது அவர்களுக்கு நாம் உதவினால் பின்னொரு நேரத்தில் அவர்களால் எமக்கு உதவி கிடைக்கும் என்ற எண்ணம் மனதில் தோன்றக்கூடாது. இவை இரண்டும் எனது கொள்கை. அதை நீயும் கடைப்பிடித்தால் நன்று.” என்று கூறியபடி சிரித்தார் கணேசன்.
“நிச்சயமாக. இது நல்ல கொள்கை தானே.” என்றாள் சந்திரா திருப்தியுடன்.
“சரி, நாளை பணம் தருவதாக சியாமளாவிடம் கூறிவிடு.”
மகிழ்ச்சியுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் சந்திரா.
*****