தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact
February 4, 2026 by Gowry Mohan

திருமண பந்தத்தில் பெண்

திருமணம் என்பது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு நடாத்தப்படும் ஒரு புனிதமான சடங்கு. திருமணத்தின் பின் இருவரும் பொறுப்புடனும் விட்டுக்கொடுத்தலுடனும் சில விதிமுறைகளைப் பின்பற்றி நடந்தாலே மகிழ்ச்சியாக வாழ முடியும்.

முற்காலத்தில் பெண்கள் கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவுமே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். அவர்களுக்கென்று விருப்பு வெறுப்பு  பெரிதாக ஏதும் இருந்ததில்லை.

தனது கணவனுக்கு கண் தெரியாது என்பதால் கண்களை கறுப்புத் துணியால் கட்டி தன் பார்வையை மறைத்துக்கொண்டாள் திருதராட்டினன் மனைவி காந்தாரி.

எமதர்மராஐனுடன் வாதாடி, வரம் பெற்று உயிர்நீத்த தன் கணவன் சத்தியவானை உயிர்ப்பித்தாள் சாவித்திரி.

நளாயினி தனது குஷ்டரோக கணவனை தாசி வீட்டிற்கு கூடையில் சுமந்து சென்றாள்.

இவை யாவும் கற்பின் சின்னமாகவும் பதிவிரதையாகவும் பெண்கள் வாழ்ந்தார்கள் என்பதை கூறும் புராண, இதிகாச கதைகள் ஆகும்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவற்றை பெண்களின் நற்பண்புகளாக பழங்கால இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அச்சம் என்பது ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்ட செயல்களை செய்ய அஞ்சுவது, மடம் என்பது கள்ளம் கபடம் அற்ற நிலை – தீய எண்ணங்கள் இல்லாத தூய மனம், நாணம் என்பது வெட்கம் – ஒழுக்க உணர்வு, பயிர்ப்பு என்பது பொய் வஞ்சனை இல்லாத உண்மைத்தன்மை – மனதின் தூய்மையைக் குறிக்கிறது. இவை பெண்களை அடிமைப்படுத்துவதற்காகவோ, அவர்களது சுதந்திரத்தை பறிப்பதற்காகவோ கூறப்பட்டவை அல்ல. அவர்களின் பண்பின் மேன்மையைக் குறிப்பிடுகின்றன.

ஒரு திருமணமான பெண்ணிடம் உள்ள நற்பண்புகளின் பலன் எத்தகையது என்பதை திருவள்ளுவர் பின்வரும் குறளில் இயம்பியுள்ளார்.

குறள் – தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

               பெ​ய்யெனப் பெய்யும் மழை.

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் விளக்கவுரை – (கற்புடைய மனைவியின் சிறப்பு என்னவெனில்) கற்புடைய பெண் தெய்வத்தைக் கூடத் தொழமாட்டாள். அவள் கணவனையே தெய்வமாக வணங்கிச் சிறப்படைவாள். அப்படிப்பட்டவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்படியான தெய்வ பலம் உள்ளவள்.

எம் முன்னோர்கள் கூறிச் சென்ற பழமொழிகளுள் ஒன்று பின்வருமாறு கூறுகிறது.

“பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி”. இதன் கருத்து, ஒரு நல்ல மனைவி (பத்தினி) தன் கணவனைவிடப் பிந்தைய நேரத்தில் தூங்கி, அதிகாலையில் அவனுக்கு முன்பே எழுந்து வீட்டின் வேலைகளைச் செய்பவள் எனக் கூறப்படுகிறது.

எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர், அவர் சிறுவயதாக இருக்கும்போது அவருக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் பெண்களைப் பற்றி அடிக்கடி பாடும் பாடலில் சில வரிகள், தனது நினைவில் நிற்பவற்றை பின்வருமாறு கூறினார்.

“கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்

கணவனே தெய்வம் என்று கருதி இருப்பவளே பதிவிரதை

திருவள்ளுவன் தேவி வாசுகியாள் என்னும் தேவதையாள் கடலைச் சமைத்து வைத்தாள்

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்

கணவனே தெய்வம் என்று கருதி இருப்பவளே பதிவிரதை…”

இதைத் தொடர்ந்து அவர் பாடிய பாடல்வரிகள் சாவித்திரியினதும் நளாயினியினதும் கதைகளைக் கூறியதாகவும், அதன் சரியான வரிகள் தனக்கு நினைவில் இல்லை எனவும் கூறினார்.

ஒரு குடும்பத்தின் தலைவியாக பெண்ணின் பங்கு மிகவும் முக்கியமானது. அவளே அக்குடும்பத்தின் மகாலட்சுமி, முதுகெலும்பு, அச்சாணி, ஆணிவேர் என்றெல்லாம் கூறுவதை நாம் அறிவோம். அவளின் அக்கறை, அன்பு, பொறுப்பு, ஒழுக்கம், நேர்மை, தியாகம் என்பவை குடும்பத்தை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று கூறுவது, நல்லவை ஆவதும் தீயவை அழிவதும் பெண்ணாலே என வாரியார் சுவாமிகள் கூறியதாக அறிய முடிகிறது. அதனால்தான் ஒரு ஆணுக்கு மணமகள் தேடும் போது குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாக பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பழைய காலத்தில் பணம் சம்பாதிப்பது கணவனின் கடமை. அதனை வீட்டிலிருந்து சிக்கனமாக பொறுப்புடன் செலவழிப்பது மனைவியின் கடமை என வாழ்ந்தார்கள். அதனால் தான் அக்காலத்தில் பெண்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்திருக்கிறார்கள்  என நினைக்கத் தோன்றுகிறது.

நவீன யுகத்தில் ஒரு குடும்பத்தின் சகல தேவைகளையும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே பூர்த்தி செய்கிறார்கள். எல்லா வேலைகளிலும் பங்கெடுத்து ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கிறார்கள். சுதந்திரமாக வாழ்கிறார்கள். அதேநேரம் அவர்கள் பல இன்னல்களையும் சந்திக்கவேண்டியிருக்கிறது. அதனால் சில பெண்கள் இன்று நிம்மதியில்லாமலும் பாதுகாப்பில்லாமலும் வாழ்கிறார்கள்.

பெண்ணானவள் தேவையான இடத்தில் பணிவுடனும் துணிவுடனும் செயற்பட்டு ஒழுக்கத்தின் சிகரமாக வாழ்ந்தால் அக்குடும்பம் சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.

உதாரணக்கதை

“மகதி! மணி ஏழாகிறது. சீக்கிரம் எழுந்து வா.”

காலை மணி ஆறிலிருந்து இது நான்காவது முறையாக மகளை எழுப்பினார் மகதியின் தாய் பானு.

“அம்மா! நீங்கள் என்ன அலாரமா? ஒவ்வொரு முறையும் எத்தனை மணி என்று கூவிக் கூவி எழுப்புகிறீர்கள்.” நித்திரைத் தூக்கத்துடன் சிடுசிடுத்தாள் மகதி.

“பெண் பிள்ளைகள் நேரத்தோடு எழுந்து வீட்டு வேலைகளை பார்க்கப் பழகவேண்டும். அப்போதுதான் போகின்ற இடத்தில் கௌரவமாக வாழலாம்.”

“அதென்ன அம்மா, போகின்ற இடம்.” கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து வந்தாள் மகதி.

“ஒன்றும் தெரியாத சின்னப் பாப்பா. அதுதான் திருமணமாகிப் போகின்ற இடம்.” அலுத்துக் கொண்டாள் பானு

“என்னது திருமணமா??? அம்மா, இப்போதுதான் பட்டப்படிப்பு முடிந்து வேலைகளுக்கு மனுப் போடத் தொடங்கியிருக்கின்றேன். கொஞ்சம் அமைதியாக இருக்கிறீர்களா. நீங்களே அப்பாவைத் தூண்டிவிடாதீர்கள். சிறிது காலமாவது என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள்.” என்றாள் மகதி கோபத்துடன்.

“திருமணமானால் நிம்மதி போய்விடும் என்று யார் உனக்கு தப்புத் தப்பாகச் சொன்னது?”

“அம்மா, இப்போது இருக்கும் சுதந்திரம் அப்போது இருக்காது. உனக்கு சொன்னால் புரியாது.”

“ஆமாம், நான் ஐந்து வயது பாப்பா, நீ ஐம்பது வயது கிழவி. போடி போ. நீ உன் பாட்டில் வேலை தேடு. நாங்கள் எங்கள் பாட்டில் செய்வதை செய்கிறோம். முதலில் சமையலை பழகு.”

“அம்மா, பெண் என்றால் சமையலறையில்தான் இருக்க வேண்டுமா? அதைத்தாண்டி எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.”

“மகதி, எல்லா விஷயங்களையும் நீ பார்த்துக்கொள். நாங்கள் தடுக்கவில்லை. அதேநேரம் திருமணமான பெண்ணுக்கென்று சில கடமைகளும் பொறுப்புகளும் இருக்கின்றன. அவற்றை நாம் ஒழுங்காக கடைப்பிடித்தால்தான் குடும்பம் சிறப்பாக இருக்கும்.”

“அதென்ன கடமைகளும் பொறுப்புகளும்.”

“அவையெல்லாம் கல்லூரிக்குச் சென்று படிக்கும் பாடங்கள் அல்ல. அவை வழி வழியாக அனுபவத்தில் தெரியவருபவை.  அதற்குத்தான் முதல் பாடமாக அதிகாலையில் எழுந்து பழகு.”

“சரியாகச் சொன்னாய் பானு.” சிரித்தபடி அங்கு வந்தார் மகதியின் தந்தை பாஸ்கர்.

“மகதிம்மா, வெறும் புத்தகப் பூச்சியாக இருக்காமல் அனுபவ பாடத்தையும் அம்மாவிடம் கற்றுக்கொள். பெற்றோர்கள் எப்போதும் பிள்ளைகள் நன்றாக வாழ வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். நீ உனது விருப்பப்படி வேலைகளுக்கு மனுப்போடு. நல்ல வேலை கிடைத்தால் சேர்ந்துகொள். அதேநேரம் அம்மா கூறியபடி  வீட்டுவேலைகளையும் பழகிக் கொள். அது ஒன்றும் தப்பான செயல் அல்லவே. இப்போதே நாங்கள் உனது திருமணத்திற்கு வரன் தேடும் முயற்சியை தொடங்கி விட்டோம்.”

“அப்பா! தயவுசெய்து என்னை சிறிது காலம் என் விருப்பப்படி இருக்க விடுங்கள்.” சிணுங்கினாள் மகதி.

“இப்போது தொடங்கினால்தான் இன்னும் இரண்டு மூன்று வருடங்களிலாவது நல்ல வரன் கிடைக்கும். நீ யாரையாவது பார்த்து வைத்திருக்கின்றாயா? ஆரம்பத்திலேயே  கூறிவிடு.”

“ஐயோ அப்பா, எனக்கொன்றும் தெரியாது. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.” வெட்கத்துடன் கூறியபடி அவ்விடத்தைவிட்டு அகன்றவளது மனதில் அன்றொருநாள் பெற்றோரின் உரையாடலை தற்செயலாக​க் கேட்ட நினைவுக்கு வந்தது.

“பானு, இன்று எனது நண்பன் சிவராமனை சந்தித்தேன்.” என்றபடி சமையலறைப் பக்கம் வந்தார் பாஸ்கர்.

“அப்படியா! அவரது மகனின் திருமணம் முடிந்தபின்  இன்றுதான் அவரைச் சந்தித்தீர்களா? எப்படி இருக்கிறானாம் மகனும் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த அவரது மருமகளும்?” விசாரித்தாள் பானு.

“அதையேன் கேட்கின்றாய். அவரது மகனுக்கு விசா கிடைத்து மருமகளுடன் போய்ச் சேர்ந்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. இப்போது விவாகரத்துக்கு மனுப்போட்டிருக்கிறாளாம் அந்தப் பெண்.” என்றார் கவலையுடன் பாஸ்கர்.

“என்ன சொல்கிறீர்கள்?”

“அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லை என்கிறாளாம் அந்தப் பெண்.”

“வெளிநாடுகளில் பிறந்து வளரும் பிள்ளைகள் அவர்களுக்குள் திருமணம் செய்வதுதான் சரி. அவர்களுக்கு நமது நாட்டு பழக்கவழக்கங்கள் தெரியாது. அந்நாட்டு பிள்ளைகளுடன் சேர்ந்து வளரும் போது அவர்களுடைய பழக்கவழக்கங்களும் தொற்றிக்கொள்கின்றன.” என்று அலுத்துக்கொண்டாள் பானு.

“இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன். எமது தெருமுனையில் உள்ள வீட்டில் வசிக்கும் குடும்பத்திற்கு ஒரு பெண் பிள்ளை திருமண வயதில் இருக்கிறாள். உனக்குத் தெரியுமா?”

“ஆமாம். மிகவும் அழகான பிள்ளை.”

“அவர்களுக்கு ஒரு வெளிநாட்டு சம்பந்தம் வந்து எல்லாம் முற்றாகி விட்டதாம். இப்போது மாப்பிள்ளை, ஆறு மாதம் ஒன்றாக சேர்ந்து வாழ்வோம் (living together). ஒத்துப்போய் பிடித்துவிட்டால் திருமணம் செய்வோம். சரிவராவிட்டால் விலகிவிடலாம் என்று சொல்கிறானாம்.” என்றார் பாஸ்கர் சிரித்தபடி.

“அடக் கடவுளே. நினைத்துப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது.” என்றாள் பானு வெறுப்புடன்.

“வெளிநாட்டில் வசிக்கும் எம்மவர்கள் எல்லோரும் அப்படி அல்ல. நல்லவிதமாக வளர்ந்த பிள்ளைகளும் இருக்கிறார்கள்தான். என்றாலும் அவர்களை நம்பி எம் பிள்ளைகளை திருமணத்திற்காக அங்கு அனுப்புவது யோசிக்கவேண்டிய விஷயம் தான்.” என்றார் பாஸ்கர் கவலையுடன்.

இவற்றைக் கேட்ட மகதிக்கு தனது நண்பிகளும் இதைப் பற்றி விமர்சித்தது நினைவில் வந்து சென்றது. பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் பெற்றவர்களுக்கு எவ்வளவு சிக்கல்களும் பொறுப்புகளும் கவலைகளும் உள்ளன என்பதை நினைத்துப் பார்த்தாள்.

அம்மா அப்பாவிற்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது என நினைத்தவள், இப்போதே வீட்டுவேலைகளில் அம்மாவுக்கு உதவினால் எல்லாம் பழகிவிடும். நாளையிலிருந்து அம்மா எழும்பும்போதே அதிகாலையில் எழும்பிவிட வேண்டும் என உறுதி பூண்டாள் மகதி.

*****

Posted in கட்டுரைகள். RSS 2.0 feed.
« படித்ததில் பிடித்தது – தொகுப்பு 180
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 181 »

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 186
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 185
  • ஔி வீசும் தாரகை
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 184
  • ஏன்?
© 2020 Tamilkeetru. All rights reserved