குவியல் 8 எண்ணம் 4
பாதுகாப்புத்துறை

ஒரு நாடு வளமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதற்கு ஒழுக்கம், அமைதி மிகவும் அவசியமாகும். இவற்றைக் காப்பதற்கு பாதுகாப்புத்துறை இயங்குகிறது. இத்துறையில் முப்படையினரும் (தரைப்படை-இராணுவம், கடற்படை, வான்படை) காவற்துறையினரும் கடமையாற்றுகின்றனர். ஆரம்ப காலங்களில் பாதுகாப்புத்துறையில் ஆண்கள் மட்டுமே கடமையாற்றினர். இன்று இத்துறையில் பெண்களின் பங்கு இன்றியமையாதுள்ளது.
தரை, கடல், வான் பகுதிகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக பாதுகாப்புத்துறையில் முப்படைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இப்படைகள் முக்கியமாக போர்ச் சூழலை எதிர்கொள்வதற்கும் நிலநடுக்கம், வெள்ளம், புயல் பொன்ற பேரிடர்களை எதிர்கொண்டு அழிவுகளை சீராக்குவதற்கும் நாட்டு மக்களின் ஒழுக்கத்தையும் பாதுகாப்பையும் அமைதியையும் கருத்திற்கொண்டு அவற்றைப் பேணுவதற்கும் உரிய கல்வியையும் பயிற்சிகளையும் பெற்றுள்ளன.
நாட்டின் நாளாந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு காவற்துறை இயங்குகிறது. நாடு முழுவதும் ஊருக்கு ஊர் பல காவல் நிலையங்களும் முகாம்களும் அமைக்கப்பட்டு போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கும், மக்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கும், விபத்துக்களை சீர் செய்வதற்கும், குற்றங்கள் போராட்டங்கள் நடக்கும் இடங்களுக்குச் சென்று உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கும், கடத்தல்கள் (ஆட்கள், பொருட்கள் என்பவை), கொலை, கொள்ளை போன்றவற்றை விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
ஆண்களும் பெண்களுமாக இரு பாலாரும் கடமையாற்றும் பாதுகாப்புத்துறையினர் தங்கள் கடமைகளை சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் மட்டுமல்லாது துரிதமாகச் செயற்படுவதும் அவசியமாகும். பாதுகாப்பு நடவடிக்கைகள் மக்களை பயம் கொள்ளச் செய்யாவண்ணம் இருப்பது மிக மிக முக்கியமாகும். தேடுதல் நடவடிக்கைகளின் போது சுற்றிவளைப்புக்களில் ஈடுபடும் அதிகாரிகள் மிகவும் அவதானமாக செயற்படுதல் வேண்டும். ஏனென்றால் இந்நடவடிக்கைகளின்போது பல அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புண்டு.
பிழையான தகவல்கள், பிழையான கைதுகள் என்பனவற்றை கவனமாக ஆராய்ந்து செயற்படுவது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குரிய வழியாகும். சிறிய விஷயங்களையும் அலட்சியப்படுத்தாது கவனத்தில் கொள்வது அவசியம். அவை பெரிய குற்றங்களில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்புண்டு.
ஆயுதக் கொள்வனவு, அவற்றின் பராமரிப்பு மிகவும் பொறுப்பான கடமையாகும். இலஞ்சம் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறலாம். தற்காப்புக்காக பெரும் புள்ளிகளுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் துஷ்பிரயோகப் படுத்தப்படக்கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படலாம். பாதுகாப்புத்துறை அவற்றிலும் முக்கிய கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும்.
நேர்மையானவர்களாகவும், பொறுப்பும் துணிவும் மிக்கவர்களாகவும் இருப்பவர்களே பாதுகாப்புத்துறையில் கடமை செய்வதற்கு பொருத்தமானவர்களாவர்.
காலத்திற்குக் காலம் பதவிகளில் இருப்பவர்களை இடமாற்றம் செய்வது, ஊழல்களை தடுப்பதற்குரிய வழியாகும். அதுமட்டுமல்லாது மக்களும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள்.
ஒரு நாட்டின் அழகும், வளமும், அமைதியும் அதன் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகின்றன. இவற்றைப் பெறுவதற்கு பாதுகாப்புத்துறையின் சுயநலமற்ற அளப்பரிய பணி உதவுகிறது.
உதாரணக்கதை
“அம்மா! நான் ஒரு காவல்துறை அதிகாரியாக வர ஆசைப்படுகிறேன்.” என்றான் 7ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் கபிலன்.
“ஏனடா திடீரென்று இப்படி ஒரு ஆசை வந்தது?” ஆச்சரியத்துடன் கேட்டாள் அமுதா.
“அம்மா, எங்கள் ஊரில் உள்ள காவல்நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரியைப் பார்க்கும்போது எனக்கும் அவரைப் போல் வரவேண்டும் என்று தோன்றுகிறது.”
“அப்படி அவர் என்னதான் செய்துவிட்டார்?” ஆவலுடன் கேட்டாள் அமுதா.
“அவரைப் பார்த்தாலே மதிப்பும் மரியாதையும் ஏற்படுகிறது. மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் அவரின் சுறுசுறுப்பும் கவனிப்பும் எங்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகின்றன.”
“நீ கூறுவது சரிதான் கபிலா, ஊருக்குள் எங்கள் காவல்நிலையத்தைப் பற்றி மிகவும் நல்ல விதமாகத்தான் கூறுகிறார்கள். அடிக்கடி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். தெருக்களில் அநாவசியமாக கூட்டம் கூட்டமாக நின்று கதைத்து பொழுது போக்கிக்கொண்டிருப்பவர்களை கலைத்துவிடுகிறார்கள்.”
“ஆமாம் அம்மா, பாடசாலை அருகே இருக்கும் சிறு சிறு வியாபாரிகளை பேரூந்து தரிப்பிடம், புகையிரத நிலையம் போன்ற வேறு இடங்களுக்கு செல்லுமாறு கூறிவிட்டார்கள். பொது இடங்களில் எல்லோருக்கும் தெரியும் வண்ணம் காவல்துறை, நோயாளர் காவு வண்டி இரண்டினதும் தொலைபேசி எண்களை காட்சிப்படுத்தியுள்ளார்கள்.”
“ஆமாம் நானும் அவற்றைப் பார்த்தேன். சரி, சரி நீ நன்றாகப் படி, உன்னுடைய விருப்பத்திற்கு நானும் அப்பாவும் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டோம்.” எனக்கூறியபடி சமையலில் ஈடுபடலானாள் அமுதா.
*****
அன்று கபிலனின் தாத்தா சந்தியிலிருக்கும் கடைக்குச் செல்ல ஆயத்தமாக, கபிலன் தானும் வருவதாகக் கூறி அவருடன் சென்றான். இருவரும் கதைத்துக்கொண்டு சென்றார்கள். அப்போது தூரத்தில் ஒரு விட்டிலே பெரும் சண்டைச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தது. இருவரும் தயங்கித் தயங்கி மெதுவாகச் சென்றுகொண்டிருந்த போது அந்த வீட்டின் உள்ளே இருந்தவர்கள் தெருவுக்கு வந்து ஒருவரையொருவர் அடித்துத் தாக்கி சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் இரு குழுக்களாக பிரிந்து அந்தச் சண்டையில் ஈடுபடத்தொடங்கியதும் சண்டை பலத்துவிட்டது. காயங்களும் ஏற்படத் தொடங்கியது. தாத்தாவும் கபிலனும் இரு பக்கமாகவும் செல்லமுடியாது கலங்கிய சமயம்,
“தாத்தா, வாருங்கள் அந்த வாகனத்தின் பின்புறம் செல்வோம்.” என கபிலன் தாத்தாவின் கையை பிடித்து அழைத்துச் சென்றான்.
“தாத்தா, உங்கள் கைபேசியைத் தாருங்கள்.” என்றான் கபிலன்.
கைபேசியைக் கொடுத்துக்கொண்டே, “ஏன் தம்பி, யாருடன் கதைக்கப்போகின்றாய்? சிறிது நேரத்தில் கூட்டம் கலைந்துவிடும். அப்போது வீட்டிற்கு திரும்பிச் சென்றுவிடுவோம்.”
“தாத்தா, சற்றுப் பொறுங்கள். நடப்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருங்கள்.” என்றான் கபிலன்.
கைபேசியில் காவல்துறை எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தி நடந்துகொண்டிருக்கும் சம்பவத்தையும் இடத்தையும் சுருக்கமாகக் கூறி கைபேசியை அணைத்து தாத்தாவிடம் கொடுத்தவன் நம்பிக்கையுடன் காத்திருந்தான்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் அவ்விடத்திற்கு காவல்துறையினர் வந்துவிட்டனர். நடந்துகொண்டிருந்த கைகலப்பும் அடங்கிவிட்டது. கூட்டமும் மெதுவாகக் கலையத் தொடங்கிவிட்டது.
“சரி தாத்தா, இனி நாம் பயமில்லாமல் கடைக்குப் போகலாம் வாருங்கள்”
தாத்தா ஆச்சரியத்துடன் காவல்துறையினரையும் கபிலனையும் பார்த்தபோது,
“என்ன பார்க்கிறீர்கள் தாத்தா, அங்கு பாருங்கள்.” என அவ்விடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த காவல்துறையினதும் நோய் காவு வண்டியினதும் தொலைபேசி எண்களைச் சுட்டிக் காட்டினான்.
காவல்துறை மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையையும் அவர்களது விரைந்த செயல்பாட்டினையும் பார்த்து வியந்தபடி மெதுவாக நடக்கத்தொடங்கினார் தாத்தா.
*****