
“* திருமணம் மற்றும் சுபநிகழ்வுகளில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர ஆடம்பரத்துக்கு அல்ல.
* இந்த விதையைப் போட்டால் இந்தப் பயிர் வரும் என்பது இயற்கை வகுத்த நியதி. அச்சட்டத்தை நம்மால் மீற முடியாது. பூர்வ ஜென்மங்களில் வினையை விதைத்தோம். அவ்வினை தரும் பலன் இன்பமோ துன்பமோ இப்போது அறுவடை செய்கிறோம்.
* சத்தியம் என்பது வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை மட்டும் சொல்வதே சத்தியமாகும்.
* தெய்வப்பணியை விட்டுவிட்டு தேசப் பணி, மக்கள் பணி என்று புறப்படுவது தவறு. சமூக சேவையும், தெய்வப்பணியும் கைகோர்த்து நடக்க வேண்டும். தெய்வ சம்பந்தத்துடன் தான் தேசப்பணி செய்ய வேண்டும்.
* பணம் மட்டுமல்ல, வார்த்தைகளை உபயோகிக்கும் போதும், ஒரு சொல்கூட அதிகமாகக் கூடாது. அளவாக, கணக்காகப் பேச வேண்டும். அதனால், நமக்கும் சரி, நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி பொழுது பயனுள்ளதாகிறது.
– காஞ்சிப்பெரியவர்”
*****
“* மனம் ஆற்றின் நீரோட்டம் போல ஓடுகிறது. தகுந்த வடிகால் அமைத்து அதை சீர்படுத்த, நன்மை விளையும்.
* கொள்கை நல்லதாக இருந்தால், எந்தப் பின்னணியிலும் ஒருவன் முன்னேற்றம் காண முடியும்.
* தினமும் காலை, மாலை இருமுறை தியானத்தில் அமருங்கள். இதனால் மனம் அமைதி பெறும்.
* மனதில் உறுதியும், விடாமுயற்சியும் கொண்டவன் வாழ்வில் வெற்றி அடைவது உறுதி.
* குறுகிய மனப்பான்மை கூடாது. விசாலமான மனதுடன் உலகைப் பார்க்கக் கற்பது நல்லது.
* மனம் வருத்தப்பட்டால் எதிலும் விருப்பம் இருப்பதில்லை. மகிழ்ச்சியாக இருந்தால் எளிய உணவு கூட ருசியாக இருக்கும். அதனால், மனதை எப்போதும் லேசாக வைத்துக் கொள்ளுங்கள்.
* அறிவை பயன்படுத்தாத மனிதர்கள் விலங்கு நிலைக்கு தாழ்ந்து விடுகின்றனர். அவர்களால் மனதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
* நோக்கம் உயர்ந்ததாகவும், சுயநலம் இல்லாததாகவும் இருந்து விட்டால் விளைவு நம்மைப் பாதிப்பதில்லை.
* கடவுள் நம்முடைய மனமாகிய வீட்டில் இருந்து இயக்குகிறார். அதை உணராவிட்டாலும் அவருடைய அருளே நம்மை நடத்திச் செல்கிறது.
* கோபம், ஆசை, பொறாமை போன்ற தீய பண்புகளால் முயற்சிகளில் தோல்வி உண்டாகிறது.
* உயர்ந்த லட்சியத்திற்காக பணியாற்றும்போது மனதில் அரிய சக்தி தூண்டிவிடப்படுகிறது. அப்போது முயற்சித்தால் வெற்றி வந்து சேர்கிறது.
* அன்பை வாரி வழங்குவதால் வாழ்வு வளமாகும் என்ற அடிப்படையை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.
* அன்பைக் கொடுப்பதால் மனம் விரிவடைகிறது. அன்பை பிறருக்குக் கொடுப்பவனே சுதந்திரமானவன்.
* உள்ளத்தில் அன்பு இருந்தால் உலகமே புனிதமாகி விடும். அவன் காண்பதெல்லாம் தெய்வீகமாகி விடும்.
* அன்பு செலுத்தப் பழகி விட்டால் மனோசக்தி அதிகரிக்கும். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் அதன் அழகு வெளிப்படத் தொடங்கும்.
* நிஜமான பக்தி கொண்டவன், எல்லா உயிர்களையும் கடவுளாகவே காணும் பேறு பெறுவான்.
* ஆபத்து வந்ததும் கடவுளை அழைப்பவன் பக்திமான் அல்ல.
* மனமாகிய வீட்டில் இருந்து நம்மை இயக்குபவர் கடவுளே. கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவரே வழிநடத்துகிறார்.
* எளிய காணிக்கையையும் கடவுள் விருப்பத்துடன் ஏற்கிறார். அன்பும், தூய்மையுமே பக்திக்கு தேவையான அடிப்படை குணங்கள்.
— சின்மயானந்தர்”
*****
“யாரிடம் எப்படி பேச வேண்டும் ?
தாயிடம் அன்பாகப் பேசுங்கள்;
தந்தையிடம் பண்பாகப் பேசுங்கள்;
துணைவியிடம் உண்மையைப் பேசுங்கள்;
சகோதரியிடம் பாசமாகப் பேசுங்கள்;
சகோதரனிடம் அளவாகப் பேசுங்கள்;
குழந்தையிடம் செல்லமாகப் பேசுங்கள்;
உறவினரிடம் பரிவாக பேசுங்கள்;
நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள்;
வியாபாரியிடம் கராராக பேசுங்கள்;
வாடிக்கையாளரிடம் நேர்மையாக பேசுங்கள்;
அரசியல் மட்டும் ஜாக்கிரதையாக பேசுங்கள்,
கடவுளிடம் மவுனமாக பேசுங்கள்!
புரிந்து பேசுங்கள் புரியும்படி பேசுங்கள்!
வாழ்வதற்காக பேசுங்கள்!
வாழ்க்கையைப் பற்றி பேசுங்கள்!
வாழவைக்க பேசுங்கள்!
வாழும்போது பேசுங்கள்!”
*****